சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

சாதிக்கத் துடிக்கும் மங்கை!

By  - சி.சண்முகவேல் | DIN | Published: 12th September 2018 06:38 PM

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் சிவகாமி(42). பிறவி கண்பார்வை குறைபாடு கொண்ட இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். திருமணமான இவருக்கு கணவர் செந்தில்குமார், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2012-ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கடனுதவி பெற்று ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜெராக்ஸ் (நகலகம்)  கடை நடத்தி வருகிறார்.

இவருக்கு பள்ளி பருவத்திலிருந்து விளையாட்டில் ஆர்வம் இருந்துள்ளது. பள்ளிகள் அளவில் குண்டு, வட்டு எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளார்.

மேலும், இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட, மாநில,தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வட்டு, குண்டு எறிதல், ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்றார்.  

2018 ஜூன் 15 முதல் 18-ஆம் தேதி வரை தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டில் வட்டு எறிதலில் தங்கமும், ஜெர்மனியில் ஜூலையில் நடந்த குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். தற்போது சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக பெங்களூரில் பயிற்சி பெற்று வருகிறார். விளையாட்டில் சிறந்து விளங்கிய போதிலும் தன்னைப் போன்ற பிற மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து சிவகாமி கூறியது: மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட, மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் குண்டு, வட்டு எறிதல், ஓட்டப்பந்தயப் போட்டிகளில் 2012 முதல் 2018 வரை தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறேன். 2015, 2018-ஆம் ஆண்டுகளில் மாநில, சர்வதேச அளவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளேன். இதுவரை 56 தங்கப் பதக்கம் உள்பட 70 பதக்கங்களை பெற்றுள்ளேன். 

என்னுடைய ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பாராட்டியது மறக்க முடியாத நிகழ்வாகும். அடுத்தாண்டு (2019) பெங்களூருவில் நடைபெறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக பெங்களூருவிலுள்ள ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா கிளப்பில் பயிற்சி எடுத்து வருகிறேன்.

2015-ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக்கில்  ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன், விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். 

ஹரியானாவில் நானும், மாரியப்பனும் ஒரே மைதானத்தில் பயிற்சி பெற்றது மறக்க முடியாதது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு அளிக்கப்படுவதைப் போல மாற்றுத் திறனாளிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்காக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றார். 

இன்னும் பல சாதனைகள் மூலம் பதக்கங்கள் வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் காணப்படும் சிவகாமியின் கனவு நிறைவேறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதால் அவருக்கு நமது பாராட்டுகள்.

More from the section

இதுபுதுசு
பொது நல வழக்குகளின் தாய்! 
பரதத்திலிருந்து கிரிக்கெட்டுக்கு...
நீரிழிவும் உடற்பயிற்சியும்!
கிளிஞ்சல்களும் காசாகலாம்!