செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

தினமணியின் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்: இமயமலை ஏறிய தந்தையும், மகளும்!

By - அ.குமார் | DIN | Published: 12th September 2018 08:51 PM

2018- ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி குர்கோன் பகுதியை  சேர்ந்த அஜித் பஜாஜ் (53) மற்றும் அவரது மகள் தியா (24) ஆகிய இருவரும் 8,848 மீ.  உயரமுள்ள இமயமலை மீது ,  இந்தியாவில் முதன் முதலாக  ஒன்றாக ஏறிய தந்தையும் - மகளும் என்ற பெருமையை  பெற்றுள்ளனர்.

அஜித் பஜாஜூம், தியாவும் சேர்ந்தாற் போல் மலையேறுவது இது முதல் தடவையல்ல, தியா சிறுமியாக இருந்தபோதே இருவரும் சேர்ந்தும் தனித்தனியாகவும் பல சாதனைகளை  செய்துள்ளனர். 30 ஆண்டுகளாக விளையாட்டுத் துறையில் பல துணிகரமான செயல்களை புரிந்ததற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற அஜித் பஜாஜ்,  வடதுருவம், தென் துருவம் மற்றும் கிரீன்லாண்ட்ஐஸ்கேப் ஆகியவற்றில்  ஸ்கேட்டிங்   செய்து போலார் ட்ரிலாஜி என்ற விருது பெற்ற முதல் இந்தியராவர்.

அஜித், ஒன்பது வயதாக இருந்தபோது அவரது தந்தை முதன்முதலாக  அவரை இரவு முழுவதும் மலையேறும் பயிற்சிக்காக அழைத்துச் சென்றாராம். அதன்பின்னர் மலையேறுவது என்பது அஜித்தின் வாழ்க்கையில் துணிச்சல்மிக்க விளையாட்டாக மாறியது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது தான், முதன்முதலாக இமயமலை ஏறிய எட்மண்ட் ஹிலாரியை  சந்தித்தார். அப்போதுதான் தானும் இமயமலை மீது ஏற வேண்டுமென்ற  எண்ணம்  அவருக்கு தோன்றியதாம்.  பிறகு தன் மனைவி ஷெர்லியுடன் சேர்ந்து  ஸ்நோ  லெப்பர்ட் என்ற துணிச்சல் மிக்க பயண சுற்றுலா நிறுவனமொன்றை  துவக்கினார்.  1990-ஆம் ஆண்டு  தன் பெற்றோர்  தொடங்கிய  நிறுவனத்தில்  தற்போது  தியாவும் இணைந்துள்ளார். 

2008-ஆம் ஆண்டு  தியா தன் 14-ஆவது வயதில் கிரீன் லாண்ட்  மேற்கு கடற்கரை ஸூகாயகிங் எக்ஸ்பெடிசன்' அமைப்பில் உறுப்பினரானார். 2011-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆவது வயதில் டிரான்ஸ் கிரீன்லாண்ட்  ஸ்கேட்டிங்' அமைப்பில் மிகக் குறைந்த வயதுடைய உறுப்பினரானார். 2012-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் மிக உயரமான மலையாக  கருதப்படும் மவுண்ட் எல்ப்ரஸ் ( 5642 மீ.) மீது ஏறி சாதனை படைத்தார். கிரீன்லாண்ட் ஐஸ் கேப்பை கடந்த முதல் இந்தியர்கள் என்ற பெருமையை அஜித்தும்,  அவரது மகள் தியாவும் பெற்றனர். 

தன் தந்தையுடன் மேற் கொண்ட மலையேற்றத்தைப் பற்றி தியா என்ன சொல்கிறார்?

சிறுவயதிலிருந்தே எனக்கு துணிச்சல் மிக்க விளையாட்டுகளிலும், வெளிப்புற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில் மிகவும் விருப்பமிருந்தது. ஆனால் மலையேற்றத்தில் விருப்பமில்லை.என் தந்தைதான் இதில்  ஆர்வமூட்டினார். என்னுடைய தோழிகள் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் எழுந்து, மலையேறும் பயிற்சி பெறுவது த்ரில்லிங்காக  இருந்தது.  நாளடைவில் மலையேற வேண்டுமென்பதில் பைத்தியமாகவே மாறினேன்.

மூன்றாண்டுகளுக்கு முன் துணிச்சல் மிக்க இளம் வயதினர்'   இமயமலை ஏறுவது  குறித்து பேச்சு எழுந்தபோது, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என்னை சந்திக்க வந்த என் தந்தை இதுபற்றி   என்னிடம்  கூறினார்.  பட்டம் பெற்றவுடன் என் தந்தையுடன் சேர்ந்து  இருவரும் ஒன்றாக  மலையேறுவது என தீர்மானித்து அதற்காக  ஓராண்டு  பயிற்சி பெற்றோம்.  இதற்காக நீச்சல், ஒட்டப்பயிற்சி, ஜிம் பயிற்சி  என மும்முரமாக  இறங்கி  மலையேறுவதற்கான உடல் தகுதி பெற்றோம். முதற்கட்டமாக  லடாக்கில் இருமுறை,  பிரான்ஸ் மற்றும் நேபாளத்தில்  தலா  ஒருமுறை என நாங்களிருவரும் ஒரே சமயத்தில் மலையேறி  பயிற்சி பெற்றோம்.

இமயமலை மீது ஏறத் தொடங்கிய பின்னர்தான் அதன் உயரம் எங்களுக்கு பயத்தை தந்தது. பொதுவாகவே  மலையேற்றத்தின்போது குறிப்பிட்ட நேரத்தில்  சாப்பிடுவது, தூங்குவது போன்றவைகளை  கடைபிடிக்க வழியில்லை. 24 மணி நேரமும் என் தந்தையும் கூடவே, இருந்ததால்  சிரமமாக இருந்ததோடு  சில நேரங்களில் எரிச்சலும் தடுமாற்றமும் எழுந்ததுண்டு.

ஒருநாள் இரண்டாம்  முகாமில் நாங்கள் தங்கியிருந்தபோது,  மலையை வெடிவைத்து தகர்த்தாற்போல் திடீரென  பனிப்புயல்  ஒன்று உருவாகி எங்கள் குழுவினர் தங்கியிருந்த கூடாரத்தை தாக்கியதில்   கூடாரமே சின்னாபின்னமாகிவிட்டது. இனியும் பயணத்தை தொடர  வேண்டுமா என்ற பயமும், சந்தேகமும் ஏற்பட்டது.  அதற்கேற்ப பருவ நிலையும் மோசமாக இருந்தது.  மறுநாள் காலை நாங்கள் விழித்தெழுந்தபோது வானம் வெளுத்து துல்லியமாக இருந்தது. பயணத்தை  தொடர்ந்தோம்'' என்று  தியா கூறி முடிக்க அவரது தந்தை அஜித்  பஜாஜ்  மேலும் தொடர்ந்தார்.

""மே 16- ஆம் தேதி நாங்களிருவரும் மலையுச்சியை  நோக்கி ஏறும்போது, அரைமணி நேரம் முன்பாக திடீரென என்னால் மேற்கொண்டு மலை ஏறமுடியவில்லை. காரணம் என்னுடைய  ஆக்ஸிஜன்  மாஸ்க்கில்  ஏதோ கோளாறு என தெரிந்தது. சிரமப்பட்டு ஐந்தாறு அடிகள் எடுத்து வைத்து ஏறினால் மேற்கொண்டு அடியெடுத்து வைக்க முடியாமல் கால்கள் தடுமாறியது.

என்னால் மலை உச்சியை அடைய முடியாது என கருதி,  என்னுடைய  மகளை தொடர்ந்து ஏறும்படி  கூறினேன். என்னுடைய பயணத்தை தொடர முடியாதோ என்ற எண்ணமும் தோன்றியது. என்னை தனியாக  விட்டுவிட்டு  செல்ல மனமின்றி  தியா திரும்பி  திரும்பி பார்த்தபடியே ஏறிச் சென்று கொண்டிருந்தார். அரைமணி  நேரம் கழித்து பார்த்தபோது அவள் மலை உச்சியில்  நின்று கொண்டிருப்பது தெரிந்தது.  அப்போது  காலை 4.45மணி.

அதற்குள் என்னுடைய ஆக்ஸிஜன்  மாஸ்க் மீண்டும் வேலை செய்ய தொடங்கியது. 15 நிமிடங்களுக்குள் நானும் மேலே சென்று, உணர்ச்சி வசப்பட்டு என் மகளை அணைத்துக் கொண்டேன்.  ஒரே நேரத்தில் இருவரும் ஒன்றாக  மலை உச்சிக்கு சென்றடைய  முடியவில்லையே  என்ற வருத்தம் இருந்தாலும், முதன்முதலாக  தந்தையும், மகளும் இமயமலை மீது ஏறி சாதனை படைத்துவிட்டோமே  என்ற ஆத்ம  திருப்தியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது.  உடனே  தேசிய கொடியை எடுத்து பெருமையுடன்  ஏற்றி சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம்.  எங்களை பொருத்தவரை இது ஒரு மறக்கமுடியாத பயணமாகும். நம்பிக்கையும், பொறுமையும் எங்களை சாதனையாளர்களாக  மாற்றியது'' என்றார்.

தந்தையும், மகளுமாக இமயமலை மீதேறி  சாதனை படைத்ததன் மூலம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? உங்கள்  அடுத்த திட்டம் என்ன?

பெற்றோர்  அளிக்கும் ஊக்கமும், ஆதரவும் இருந்தால் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தியுள்ளோம்.  அடுத்து அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய  மலையான  வின்சன் மாசிப் மீது ஏற  திட்டமிட்டுள்ளோம். இதற்காக மேலிட அனுமதி கேட்டுள்ளோம்''  என்று  ஒரே குரலில் அஜித் பஜ்ஜாஜும், தியாவும் கூறினர்.

More from the section

மனதில் உறுதி வேண்டும்!மன நல நிபுணர் வந்தனா
பொங்கல் டிப்ஸ்..
சமையல்!
வெந்தயக் கீரையின் பயன்கள்...!
கறுப்பு நிறத்தைப் போக்குமா குங்குமப் பூ...?