திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

பணிப் பெண்.. மாணவி.. தொழில் முனைவர்!

By - கண்ணம்மா பாரதி | Published: 12th September 2018 06:28 PM

"மீனை இலவசமாகக் கொடுக்காதீர்கள்... அது ஒரு நாளைக்குத் தான் போதுமானதாக இருக்கும். பதிலாக மீன் பிடிப்பது எப்படி  என்று கற்றுக் கொடுங்கள்...  அதை வைத்து வாழ்நாள்  முழுவதும் பிழைத்துக் கொள்வார்கள்'' என்று சொல்வதுண்டு. மீனும் கொடுத்து மீன் பிடிக்கவும் கற்றுக் கொடுக்கிறார் உடுமலைப்பேட்டைக்கு அருகில் மொடக்குப்பட்டி கிராமத்தின் தொழில் முனைவர்  சிந்து  அருண்.  கணினி  தொழில்நுட்பம்  படித்து முடித்து, கணினி மேலாண்மையில் முதுகலைப்  பட்டம் படிக்க இங்கிலாந்து சென்று, அங்கே கை நிறைய சம்பாதித்த போதிலும்... மன நிறைவு கிடைக்காமல்  பிறந்த கிராமத்திற்கே வந்து சேர்ந்தவர் சிந்து. தற்போது, செக்கு எண்ணெய்யை விற்பனை செய்வதுடன்  தேங்காய் கொப்பரை, பருத்தி  வாங்கி விற்பதை சிந்து தொழிலாகக் கொண்டிருக்கிறார். தனது தொழில் அனுபவங்களை  சிந்து பகிர்கிறார்:   

""உடுமலைப்பேட்டைக்கு   அருகிலிருக்கும்  சொந்த கிராமமான மொடக்குப்பட்டியில்தான் தொடக்க கல்வி.  அப்பா அம்மா ஆசிரியர்கள். தமிழ் வழி கல்விதான். கணினி தொழில்நுட்பத்தில் பி.டெக்.,  படித்தேன். மேல்படிப்பு வெளிநாட்டில் படிக்க ஆசை. அந்தக் கனவு நனவாக  அதிகம் பிடிபடாத ஆங்கில  அறிவு  என்னிடம் வர அழிச்சாட்டியம் செய்தது.  ""முதலில் உன் ஆங்கிலத்தை நேர்படுத்து... மேல்படிப்பு வெளிநாட்டில்  சாத்தியமாகும்''  என்று தோழி  மேகலா சொல்லியதோடு அல்லாமல் அவரே  முறையாக ஆங்கிலம் பேச வைத்தார்.   


அந்த தைரியத்தில்  லண்டனின்  பிரபலமான  நான்கு பல்கலைக்கழகங்களுக்கு மேல் படிப்பிற்காக மனு செய்தேன்.  "தி வார்விக்' பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. தொடக்கத்திலிருந்தே எனது விருப்பங்களை நிறைவேற்றி வந்த பெற்றோர், நான் லண்டன் சென்று படிக்கவும் உடன்பட்டார்கள். வெளிநாடு சென்று படிக்க  அதிக பணச் செலவு ஆகும். எங்களிடம் அவ்வளவு பணம் கையில் இல்லை. இதை அறிந்த பெரியப்பா  தனது  சொத்துக்களை  வைத்து கல்விக் கடன்  பெற உதவினார். நானும் லண்டனுக்குப் பறந்தேன்.  


லண்டனில் தங்கிப் படிக்க விடுத்திச்  செலவு,  உணவுக்கு..  கைச் செலவுக்கு என்று பணத்தின் தேவை அதிகமானது.  பெற்றோரை, பெரியப்பாவை பணத்திற்காக தொந்தரவு செய்ய வேண்டாம் என்று  முடிவு  செய்து,  பகுதி நேர வேலைக்காக முயற்சித்தேன்.  பகுதி நேர வேலை கிடைப்பதும் குதிரைக் கொம்பாக இருந்தது. கடைசியில்  உணவு விடுதி ஒன்றில் விடுப்பில்  பெண்கள் சென்றால் அவர்களுக்குப் பதிலாக வேலை செய்ய  வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பினை சிக்கென்று  பிடித்துக் கொண்டேன். சில வாரங்களில்  நண்பர் ஒருவர் மூலமாக  பகுதி நேர  பணிப் பெண் வேலை நிரந்தரமாகக் கிடைத்தது. காலை ஒன்பது முதல் நாலரை மணி வரை  கல்லூரியில் மாணவியாக இருப்பேன். மாலை  ஆறு முதல் பன்னிரண்டு வரை  உணவு விடுதியில் பணிப்பெண். இதற்கிடையில்  நான் நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும். எப்படியோ கணினி மேலாண்மையில்  முது நிலைப் பட்டத்தை முடித்து  லண்டனில் வேலையும் கிடைத்தது.  சுமாரான  சம்பளம். வாழ்வாதாரத்திற்காக ஒத்துக் கொண்டேன். சீக்கிரமே  கை  நிறைய சம்பளத்துடன்  வேலை கிடைத்தது. வசதியான  வாழ்க்கையை நடத்த முடிந்தது.  இருந்தாலும் சொந்தமாக தொழில் ஒன்றைத்  தொடங்க வேண்டும் என்ற  உந்துதலில், அந்த வேலையை உதறி  சொந்த ஊருக்குத் திரும்பினேன். பெற்றோரின் ஆசியுடனும், அண்ணனின் பண உதவியுடனும்      2010 -இல் "ஆன்லைன்' வர்த்தகத்தைத் தொடங்கினேன். அந்தக்  கால கட்டத்தில் ஆன்லைன் வர்த்தகம் பிரபலமாகவில்லை. நான் புத்தகங்கள்,  செல் போன்களை விற்க ஆரம்பித்தேன். 

தொடக்கத்தில் வியாபாரம் சூடு பிடித்தாலும், போகப் போக வேகம் குறைந்தது. அதைச் சரிக்கட்ட முதலீட்டினை அதிகரிக்க  பண வசதி போதுமானதாக  இல்லாததால் புதிய யுக்திகளை வர்த்தகத்தில் அறிமுகம் செய்ய முடியவில்லை. வியாபாரம் நஷ்டத்தைச் சந்திக்க.... வர்த்தகத்தை நிறுத்த முடிவு செய்தோம். தொழில் முயற்சியில்  ஆரம்பமே கசப்பாக அமைந்துவிட்டது. சுமார் இருபது லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. ஆனாலும் தொழில் ஒன்றை மீண்டும் துவங்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். "வயது இருபத்தைந்தாகி விட்டது. திருமணம் செய்த பிறகு என்ன தொழில் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்' என்று பெற்றோர்  சொல்ல, திருமண தகவல் மையம்   மூலம்   அறிமுகமான  அருணுடன்  திருமணம் நடந்தது. 

கருவுற்றதும்  குழந்தை பெற்று  வளரும் வரை எனது தொழில் துவங்கும் கனவை சிறிது காலம் ஒத்தி வைத்தேன். அதற்குப் பிறகு கணவருடன் இணைந்து  அவர் உறவினர் ஒருவர் நடத்தி வந்த  நிறுவனத்தை நிர்வாகம் செய்ய தொடங்கினோம். பிறகு என் மாமாவின் நிறுவனத்தை ஏற்று நடத்த ஆரம்பித்தோம். வெளிநாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி, உள்மாநிலங்களுக்கு விநியோகம் என்று வர்த்தகத்தை மேம்படுத்தினோம். அடுத்த கட்ட நடவடிக்கையாக குளிர்  முறையில் செக்கில் ஆட்டி எடுக்கப்படும் எண்ணெய் வகைகளை "பிரஸ்úஸா' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளோம். 

சூரியகாந்தி, ஆலிவ், தவிடு எண்ணெய்களில்  மூலப் பொருள்களான சூரியகாந்தி, ஆலிவ், தவிட்டிலிருந்து  எடுக்கப்படும் உண்மையான  எண்ணெய் எத்தனை சதவீதம் உள்ளது  என்பதை  மக்கள்  உணரத்   தொடங்கியுள்ளார்கள். அதனால்  செக்கு எண்ணெய் குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.  தரமான செக்கு எண்ணெய்  விலை அதிகம் என்பதாலும்,  சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விலை குறைவு என்பதாலும்  பெரும்பாலான மக்கள்  அவர்கள் பயன்படுத்தும்  சுத்திகரிக்கப்பட்ட  எண்ணெய் வகைகள்  உடல் நலத்திற்கு உகந்ததுதானா  என்று  சிந்திக்காமல்  பயன்படுத்தி வருகிறார்கள். செக்கில் ஆட்டி  எடுக்கப்படும் எள், நிலக்கடலை, தேங்காய்   எண்ணெய் வகைகள் மீண்டும் பிரபலமானால்  எள்,  நிலக்கடலை, தென்னை   பயிரிடுவது அதிகமாகும். விளைச்சல் பெருகும். எண்ணெய் விலையும் குறையும்.. எங்களது செக்கு  எண்ணெய் வகைகள் ஆன்லைனிலும்  விற்பனையாகிறது'' என்கிறார் சிந்து அருண். 

More from the section

ஒரே ஒரு பெண்ணுக்காக பறந்த விமானம்!
இல்லத்தரசிகளும் தொழில் முனைவோர் ஆகலாம்! - 37: லாபம் அள்ளித்தரும் வெட்டிவேர்!
மனதில் உறுதி வேண்டும்!மன நல நிபுணர் வந்தனா
பொங்கல் டிப்ஸ்..
சமையல்!