24 பிப்ரவரி 2019

பன்னிரண்டு வயது: நான்கு புத்தகங்கள்!

By - அங்கவை| DIN | Published: 12th September 2018 08:07 PM

ஈரோட்டைச் சேர்ந்த   சுரேஷ் - பிரியா தம்பதியின் மகள். வயது  பன்னிரண்டு. மாணவியான  சக்தி ஸ்ரீதேவி. குழந்தைகளுக்கான  மூன்று கதைப் புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்தச் சின்ன வயதில் சரளமான ஆங்கில மொழியில் எழுதியிருக்கும்  சக்தி ஸ்ரீதேவி,  ஈரோடு  இந்தியன்  பப்ளிக் பள்ளி மாணவி. ஆங்கில வழியில் படிப்பதினாலும்,  குழந்தைகளுக்கான கதைகளை ஆங்கிலக் கதைகளை படிப்பதினாலும், ஆங்கிலம்  சக்தியின் வசமாகியுள்ளது.  இது குறித்து சக்தி கூறியது:

""வாசிப்பு பழக்கம்  என்னை எழுதத் தூண்டியது. இப்போது கணினி மூலம் எழுதுவதால் கணினியை இயக்கக் கற்றேன். பிறகு கணினியில்  தட்டச்சு படித்தேன். போகப் போக பெயிண்ட், போட்டோஷாப் போன்ற மென்பொருள்களையும் கையாளத் தெரிந்து கொண்டேன். அதனால், கதைகளுக்கான படங்கள், வடிவமைப்பு  செய்யவும் கற்றுக் கொண்டேன். எனது புத்தகங்களில் அச்சிடப்பட்டிருக்கும் படங்கள் நான் வரைந்ததுதான். அச்சடிப்பது மட்டும் வெளியில்.   

எனது எழுத்துப் பயணம் தொடங்கியது எட்டாவது வயதில்.  "பெலேனா - த  பாலட் டான்ஸர்'  (Ballena the Ballet Dancer)  என்ற கதையை எழுதி நான் படிக்கும் பள்ளியில் வெளியிட்டேன். அதை வாசித்தவர்கள் பாராட்டினார்கள்.  ஆசிரியர்களும்  பெற்றோரும்  தொடர்ந்து எழுதுமாறு ஊக்குவித்தார்கள். பதினோராம் வயதில்  இரண்டாவது கதை புத்தகமான "கேண்டி  - த ராயல் கேட்'  ( Candy  the   Royal  Cat  ). அதுவும் பள்ளி மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  அந்த உற்சாகத்தில் மூன்றாவது  புத்தகத்தையும் எழுதி வெளியிட்டேன். அதன் தலைப்பு  ‘The Kid Who Taught the Way of Living'. 

தினமும்  இரவு  பள்ளிப்பாடங்களை முடித்ததும்  கணினியின் முன் அமர்ந்து ஏதாவது வாசிப்பேன். ஏதாவது எழுதுவேன். ஆங்கிலத்தில் புதிய சொற்களைத் தெரிந்து கொள்வேன். இந்தப் பழக்கம்தான்  எனக்கு  ஆங்கில அறிவைத் தந்தது. எனக்கென்று  வலைதளம் இருந்தாலும்,  முகநூல் பக்கம் இல்லை.  அலைபேசி கூட இல்லை.  அலைபேசி வேண்டும் என்று நான் பெற்றோரிடம்  கேட்கவும் இல்லை. தற்சமயம் நான்காவது கதை புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். 

நான் ஒரு  மேடைப்  பேச்சாளரும்  கூட. பிறருக்கு  சாதனை செய்வதில் உந்துதல் தரும் கருத்தை மையமாகக் கொண்டு எனது பேச்சுகள் அமையும்.  நான்  எனது சொந்த "மேற்கோள்களை' உருவாக்கி வருகிறேன். அவற்றை தொகுத்து புத்தகமாகவும் வெளியிடுவேன்.  நான் எழுதிய  கதைகளை  தமிழிலும்  மொழி பெயர்த்து  வெளியிட  உள்ளேன்''  என்கிறார்  கடுகு  சிறுத்தாலும் காரம் குறையாது  என்பதை மெய்ப்பிக்கும் குழந்தை எழுத்தாளர் சக்தி ஸ்ரீதேவி.

More from the section

பார்க்கின்சன் நோய்: பெண் மருத்துவரின் சவால்!
மூன்று வயதில் நடந்த அதிசயம்..!
நாலாயிரம் ஆண்களுக்கு நடுவே ஒரு பெண்!
பீர்க்கங்காய் தரும் பலன்கள்!
எளிய யோசனைகள்!