வியாழக்கிழமை 20 ஜூன் 2019

ஹிந்தி - ஆங்கிலம் தெரியாவிட்டால் என்ன தாய்மொழியில் பேசுவேன்!

By - பிஸ்மி பரிணாமன்| Published: 12th June 2019 05:29 PM


நாடாளுமன்ற தேர்தல்களில்  தற்போது  நடைபெற்ற 2019   தேர்தலில் தான் அதிக எண்ணிக்கையில் பெண்கள் எம்.பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  இம்முறை  78  பெண் எம்.பிக்கள் 
நாடாளுமன்றத்தை அலங்கரிக்கப் போகிறார்கள். அவர்களில் சாதனை படைத்தவர் சிலர்:


பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள்  பெண் வேட்பாளர்களை  தேர்தலில் களம் இறக்கியிருந்தாலும், சதவீத அடிப்படையில் வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், ஒடிஸாவின்  பிஜு ஜனதா தளம் கட்சியும் அதிக அளவில் பெண்களை வேட்பாளர்களாக அறிவித்திருந்தன.  வெற்றி பெற்ற பெண் எம்.பிக்கள் அதிகமாக பா.ஜ.க,  திரிணாமுல், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

பெண் வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிடச் செய்தால் வெற்றி பெற முடியாது என்ற கருத்தை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் முறியடித்திருக்கின்றன. வெற்றி பெற்ற பெண் எம்.பிக்கள் பெரும்பாலும் படித்தவர்கள். அரசியல் பின்னணி உள்ளவர்கள். சிலர்  அரசு வேலைகளிலும் பணி புரிந்திருக்கிறார்கள். 

அதே சமயம் மூன்றாம் வகுப்பு படித்த  பிரமிளா பிúஸாயி   பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.  மகளிர்  சுய உதவி குழுவின் தலைவியாக இருந்து பெண்களின் வளர்ச்சிக்காக கடந்த இருபது ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஒடிசா அரசுத் துறையில் கடைநிலை ஊழியராக இருந்து  ஓய்வு பெற்றவர். கணவரது  ஓய்வு ஊதியத்தைச்  சேர்த்துதான்  பிரமிளா  சொத்தாக தேர்தல் சமயத்தில் காட்டியுள்ளார். கணவரின் வருமானத்தை  தவிர்த்தால், பெண் எம்.பி.க்களில் மிகக் குறைந்த வருமானம் உள்ளவர் பிரமிளாதான். பிரமிளாவுக்கு வயது எழுபது. ஐந்து வயதில் திருமணம் ஆனவர். வசிப்பது  தகரக் கூரை வேய்ந்த வீட்டில்.  

"ஆங்கிலமும் ஹிந்தியும்  தெரியாத பிரமிளா  நாடாளுமன்றம் போய் எதை எப்படி பேசப் போகிறார்' என்பதுதான் தேர்தலின் போது எழுப்பப்பட்ட  கேள்வி.  ஆனால், "ஆங்கிலம் ஹிந்தி  வராதுன்னா என்ன.. தாய் மொழியான ஒரியாவில் பேசுவேன்..' என்று பதிலடி  கொடுத்து வெற்றிபெற்றவர். 

மம்தா பானர்ஜி  வங்காளத்தில்  முன்னணி நடிகைகளை  களம் இறக்கியபோது,   முப்பது வங்காள படங்களில் நடித்திருக்கும் லாக்கெட் சட்டர்ஜி என்ற  நடிகையை  ஹூக்ளி  தொகுதியில்  பா.ஜ.க நிறுத்தியது. வெற்றியும்  பெற்றது. லாக்கெட் சம்பாதித்திற்கும் சொத்தின் மதிப்பு இரண்டு கோடி.  கணவர் ஒரு பத்திரிகை நிறுவனத்தில்  மேலாளர்.

முதலீட்டுத் துறையில் உயர்ந்த  பணியை உதறி விட்டு திரிணாமுல் கட்சியில் சேர்ந்து அரசியலில் நுழைந்து, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மஹுவா மோத்ரா தற்போது மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல் முறையாக நாடாளுமன்றத்துக்கு செல்கிறார். இவரது சொத்தின் மதிப்பு இரண்டரை கோடி.

ஹேமமாலினி  இரண்டாம் முறையாக மதுரா  தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பவர். பெண் எம்.பி.க்களில் அதிக சொத்து கொண்டிருப்பவரும் இவர்தான். 250  கோடி.  ஹேமா  இரண்டு முறை ராஜ்ய சபா  எம்.பியாகவும்  நியமனம் பெற்றிருந்தார்.

ஸ்மிரிதி இரானி 2014  தேர்தலில் ராகுல் காந்தியிடம்  தோற்றவர். 2019 தேர்தலில் ராகுலை தோற்கடித்திருப்பவர்.  தேர்தலுக்கு முன்பே அமேதி தொகுதியில் அடிக்கடி  வருகை தந்து நல்ல பெயர் சம்பாதித்ததால்  ஸ்மிரிதி இரானி எளிதாக வெற்றி பெற்றார்.  ஸ்மிரிதி இரானியின்  சொத்து மதிப்பு ஐந்து கோடி. மோடியின் இரண்டாம் அமைச்சரவையில் மீண்டும் ஜவுளித் துறை அமைச்சராகியிருக்கிறார்.

அகதா  கே  சங்மா. மேகாலயா  எம்.பி.  2009 -இல் காங்கிரஸ் மத்திய அமைச்சரவையில் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற  அவைத் தலைவருமான பி.ஏ. சங்மாவின்  புதல்வி. முப்பத்தெட்டு வயது.  தந்தை தொடங்கிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். வழக்கறிஞர். சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர். படம் பிடிப்பது இவரது பொழுதுபோக்கு.  

தியா  குமாரி. ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நரேந்திர சிங்  என்பவரைக் காதலித்து  எதிர்ப்புகளிடையே திருமணம் செய்து கொண்டவர். இரண்டு மகன்கள். ஒரு மகள். திருமணமாகி 21  ஆண்டுகள் கழித்து கணவரை 2018 -இல்  விவாகரத்து செய்தார்.  பா.ஜ.க சார்பில்  ராஜஸ்தான் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தியா  இந்த தேர்தலில்  எம்.பியாகியுள்ளார். நாற்பத்தெட்டு வயதாகும்  தியாவின் சொத்து   மதிப்பு பதினாறு கோடி. 

நடிகை சுமலதாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின்  இரண்டாவது சுயேட்சை   வேட்பாளர். நவ்நீத்  கவுர் ராணா. மகாராஷ்டிராவில்  அமராவதி  தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர். கன்னடம், தெலுங்கு,  மலையாள  பட  நடிகையாக இருந்தவர்.  பூர்வீகம் பஞ்சாப். கணவரும் சுயேட்சை  சட்டசபை உறுப்பினராக இருப்பவர். 2014- ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த  ராணா, இம்முறை   வெற்றி பெற்றுள்ளார். வயது 28 . ராணாவுக்கு மூன்று கோடி மதிப்புள்ள சொத்துள்ளது. 

பஞ்சாப் பாட்டியாலா  தொகுதியில் காங்கிரஸ் சார்பாக இரண்டாம் முறையாக   வெற்றி பெற்றிப்பவர் மஹாராணி  பிரநீத் கவுர். பஞ்சாப்   முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் மனைவி. முன்னாள் மத்திய அமைச்சரும் கூட. பாட்டியாலா ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரநீத். 2019 தேர்தலில்  தேர்ந்தெடுக்கப்பட்ட  பெண் எம்.பி.க்களில்  மூத்தவர்.  74  வயதாகிறது. "ஆறு கோடி சொத்து எனக்குள்ளது' என்கிறார் கவுர்.

தெலங்கானாவில் எப்படி ஒரே ஒரு பெண் எம்.பியாக மலோத்  கவிதா வெற்றி பெற்றாரோ, அப்படி  பெண் உரிமைகளை மறுக்கும் ஹரியானா மாநிலத்தின் ஒரே ஒரு பெண் எம்.பி. சுனிதா துகல். ஐம்பத்தொன்று வயதாகும்  சுனிதா  இந்திய வருமானத் துறையில் உயர்மட்ட அதிகாரியாக பணி புரிந்தவர். அரசியலில்  ஈடுபடவேண்டும் என்று  முடிவு செய்ததால் வேலையை ராஜினாமா செய்தார். 2014 -இல் சட்டசபை   தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோற்றவர்.  நடந்து முடிந்த  தேர்தலில் வெற்றிக்குப் பிறகு பிரதமர் மோடி நடத்திய  வகுப்பில் கலந்து கொண்டுள்ளார். மூன்று கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சுமிதாவுக்கு   சொந்தம். 

நடந்து முடிந்த தேர்தலில்  வெற்றி பெற்றிருக்கும்  பெரும்பாலான  பெண் எம்.பி.க்கள் கோடீஸ்வரிகள். 2014  தேர்தலில்  மொத்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 11.3  சதவீதம்  பெண்கள்  எம்.பிக்களாக தேர்தெடுக்கப்பட்டிருந்தார்கள்.  2019  நாடாளுமன்ற தேர்தலில் பெண் எம்.பி.க்கள் எண்ணிக்கை  பதினான்கு  சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்களுக்கு 33.33  சதவீத   இட ஒதுக்கீடு  எப்போது  சாத்தியமாகும்?  இந்த தேர்தலில்  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்  பெண் எம்.பி.க்கள்  ஒருசேர  குரல் எழுப்பினால் 33.33 ஒதுக்கீடு  சாத்தியமாகாவிட்டாலும் குறைந்த பட்சம்  பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை  நூறையாவது  தொடும் அல்லவா ?

More from the section

நடிகை மாதவியின் புதிய அவதாரம்..!

விண்வெளி ஆய்வு பயிற்சியில் தேனி மாணவி!
 

தன்னம்பிக்கை தரும் "தன்யா'
சமையல்! சமையல்!
பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா?