சனிக்கிழமை 20 ஜூலை 2019

அடுத்த இலக்கு ஒலிம்பிக்தான்!

DIN | Published: 08th May 2019 11:19 AM

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பவர்லிஃப்டிங் சாம்பியன்களுக்கான மகளிர் போட்டியில் 72 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டு தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார் தமிழகத்தை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி அருண். இப்போட்டியில் வெற்றி பெற்றது குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
 "இப்போட்டியில் இந்தியா சார்பில் 27 ஆண்களும் 9 பெண்களும் கலந்து கொண்டோம். இந்தியாவில் இருந்து இத்தனை பேர் கலந்து கொண்டாலும், தமிழகம் சார்பில் கலந்து கொண்டு, தங்கம் வென்றது மிகவும் பெருமையாக உள்ளது. சர்வதேச அளவில் வென்றிருப்பது ரொம்ப நல்ல அனுபவமாக இருந்தது. அதிலும் நமது நாட்டை விட்டு வேறு நாட்டுக்குச் சென்று இந்தியா சார்பில் விளையாடி, தங்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது கனவு . அது இப்போது நிஜமாகியிருக்கிறது.
 இந்த போட்டியில், இந்தோனேஷியா, சீனா, சிரியா, கஜகஸ்தான், ஹாங்காங், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து 110 வீரர்களும், 60 வீராங்கனைகளும் பங்கு பெற்றனர். இவர்களை முறியடித்து தங்கம் வென்றிருக்கிறேன். அதைவிட "பெஸ்ட் பவர் லிஃப்ட்டர்' விருது பெற்றதுதான் ரொம்பவும் பெருமையான விஷயம்.
 அதுபோன்று எனது புகைப்படத்தை ஹாங்காங்கில் உள்ள ஒரு பத்திரிகையில் அட்டைப் படமாக வெளியிட்டிருந்தார்கள். அதைப்பார்த்தபோது, இந்தியனாக எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.
 போட்டியில் நான் வெற்றி பெற்றதை அறிவித்தபோது நம் நாட்டின் தேசிய கீதத்துக்கு மற்ற நாடுகள் மரியாதை செய்த தருணத்தில் அந்த மேடையில் நான் நின்றிருந்தபோது என் உடம்பு புல்லரித்துவிட்டது. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. "ஓவர்ஆல் சாம்பியன்ஷிப்' சீனா தைப்பே வென்றனர். ரன்னர் அப் இந்தியா வென்றுள்ளது.
 நான் கடைசியாக போட்டியிட்டது. ஹாங்காங் வீராங்கனையுடன். அவர் ரொம்பவே அனுபவசாலி. அங்கு அவருக்கு அதிகளவில் சப்போர்ட்டும் இருந்தது. இருந்தாலும், அவர்கள் நாட்டுக்குச் சென்று ஜெயித்து கப்பைத் தட்டி வந்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. பெருமையான விஷயம் என்னவென்றால் பவர் லிஃப்டிங்கில் ஆசிய அளவில் முதன்முறையாக "பெஸ்ட் பவர் லிஃப்ட்டர்' விருது பெறும் மாஸ்டர் உமன் நான்தான்.
 கடைசியாக, நேஷனல் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டபோது எனக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு இருந்தது. அதனால் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியுமா? என்ற பயம் வந்து, கூடுதலாக பயிற்சி எடுத்துக் கொண்டு நம்பிக்கையோடு அந்த நாட்டிற்கு சென்றேன். அந்த கடின உழைப்பும், உறுதியும்தான் இந்த வெற்றியை இன்று தந்துள்ளது.
 இந்த வெற்றிக்கு காரணம் எனது குடும்பமும், பிசியோ டாக்டர் சஜித் முகமது, எனது டிரைனர்ஸ் பாபு மற்றும் சண்முகம் இவர்கள் இல்லை என்றால் நிச்சயம் என்னால் இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது.
 மற்ற விளையாட்டுகளைப் போன்று இந்த போட்டிக்கும் அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தினால் வீரர்களை சாதிக்க வைக்கலாம். வரும் செப்டம்பர் மாதம் கனடாவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியிலும், அதன்பின் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வெல்வதே எனது அடுத்த இலக்கு'' என்றார்.
 - ஸ்ரீதேவி குமரேசன்

More from the section

மீண்டும் எழுந்து வருவேன்...
ஊக்கம் தந்த ஊடகப் படைப்பு!
ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்ற ஆதிவாசிப் பெண்
சமையல்! சமையல்!
கை வைத்தியம்!