வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

கருவூலம்: செவ்வாய் கிரகத்தின் மீது மட்டும் ஏன் இத்தனை ஆர்வம்?

Published: 08th September 2018 10:00 AM

நமது சூரிய மண்டத்தில் மனிதன் காலடி பதிக்கக்கூடிய கிரகம் உண்டென்றால் அது செவ்வாய் கிரகம் (ஙஅதந)மட்டுமே! 

புதன்(ஙஉதஇமதவ), வெள்ளி (யஉசமந)ஆகியவை மனிதன் போக முடியாத இடங்கள். அவை சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ளன. புதன் கிரகத்தின் வெப்பம் எவ்வளவு தெரியுமா? பூமியைப் போல் பதினாறு மடங்கு! அது சரி!....ஒரு பகல் என்பது சுமார் 2160 மணி நேரம்! சுமார் மூன்று மாதங்கள்! இரவு மூன்று மாதங்கள்! புதன் ஒரு பொசுங்கிப்போன கிரகம்! 

வெள்ளி, புதனைவிட மோசம்! காற்றழுத்தம் மிகமிக அதிகம்! விண்கலம் வெள்ளியின் அருகில் சென்றால் நொறுங்கி தூள்தூள் ஆகிவிடும்!

செவ்வாய்க்கு அப்பால் உள்ள வியாழன், சனி போன்ற கிரகங்களோ பனிக்கட்டி உருண்டைகள்! விண்கலங்கள் இறங்கினால் அவை புதை சேற்றுக்குள் சிக்கியது போல் புதைந்து போய்விடும்! அதனால்தான் சூரிய மண்டல் கிரகங்களில் செவ்வாய் மட்டுமே நம்மைக் கவர்ந்தது இழுக்கிறது! கடந்த பல ஆண்டுகளில் செவ்வாயை நோக்கி பல ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டுள்ளன. 

சூரிய மண்டலத்தில் சூரியன் நடுவே அமைந்திருக்க புதன் முதல் வட்டத்தில் அமைந்துள்ளது. வெள்ளி இரண்டாவது வட்டத்திலும், பூமி மூன்றாவது வட்டத்திலும் அமைந்துள்ளது. நான்காவது வட்டத்தில் செவ்வாய் உள்ளது. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தை பூமியின் பக்கத்து வீடு என்றே சொல்லலாம். ஆனால் பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள குறைந்த பட்ச தூரம் இருபது கோடி கி.மீ. ! விண்கலம் மூலம் செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கு எட்டு மாதங்கள் ஆகும்! 

சந்திரனுக்கு மூன்று நாட்களில் போய்விடலாம்! பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 4 லட்சம் கி.மீ. ஆகும். 

1610 இல் கலிலியோ செவ்வாயைப் பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்தார். பெர்சிவல் லோவல் என்ற அமெரிக்க விஞ்ஞானி செவ்வாயில் கை தேர்ந்த இன்ஜினியர்கள் இருப்பதாகத் தெரிவித்தார். அவர்கள் மனிதர்களை விட கெட்டிக்காரர்கள் என்று குறிப்பிட்டார். அறிவியல் கற்பனைக் கதைகளில் செவ்வாயில் மனிதர்கள் இருப்பதாகவே கருதிக் கொண்டனர். 

உண்மையில் செவ்வாயில் புழுப் பூச்சிகள் கூட இல்லை என்பதுதான் இன்றைய விஞ்ஞானிகளின் கருத்து! 

செவ்வாயைக் கண்ணால் பார்க்க முடியுமா? 

செவ்வாய் கிரகத்தை தொலைநோக்கி உதவியின்றி வெறும் கண்ணால் பார்க்க முடியும்! பெயருக்கு ஏற்றபடி அது சிவந்த நிறத்தில் ஒளிப்புள்ளியாகத் தெரியும். செவ்வாய் கிரகத்தை மட்டுமின்றி வெள்ளி, வியாழன், சனி ஆகிய கிரகங்களையும் இரவு வானில் எளிதில் காண முடியும். புதன் கிரகம் வானில் தட்டுப்படுவது அபூர்வமே! 

செவ்வாய்க்கு மனிதன் செல்ல முடியுமா? 

அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்டிரினும் 1969 ஜூலையில் சந்திரனில் இறங்கி சாதனை புரிந்த உடனேயே ஆர்வக் கோளாறினால் பல பத்திரிகைகளும் அடுத்த மனிதப் பயணம் செவ்வாய்க்குத்தான் என்று ஆரூடம் கூறின. ஆனால் மனிதன் இன்றளவும் செவ்வாயில் கால் பதிக்கவில்லை. முதல் பிரச்னை கதிர்வீச்சுதான்!

நாம் வாழும் பூமியைச் சுற்றி போர்வை போல இருக்கின்ற காற்று மண்டலமும் அத்துடன் பூமியைச் சூழ்ந்து உள்ள காந்த மண்டலமும் உள்ளன. இவை ஆபத்தான கதிர்வீச்சுகளிலிருந்து நம்மையும் உயிரினங்களையும் காப்பாற்றுகின்றன. இந்தப் பாதுகாப்புக் கேடயத்தைத் தாண்டி விண்வெளியில் பயணம் செல்லும்போது ஆபத்தான கதிர்வீச்சுகள் இருக்கும். தகுந்த பாதுகாப்பு தேவை. செவ்வாய்க்குச் செல்கின்ற விண்கலம் இவ்விதப் பாதுகாப்பை அளிக்கின்ற வகையில் தயாரிக்கப்படவேண்டும். 

அது மட்டுமல்ல! விண்கலத்தினுள் பல மாதங்கள் அடைந்து கிடப்பது இன்னொரு பிரச்னை! செவ்வாய்க்கு அனுப்பும் விண்கலத்தில் குறைந்த பட்சம் ஆறு பேர் பயணிக்க வேண்டும் என்பது கணக்கு! இவர்கள் பல மாதங்கள் விண்கலத்தினுள் பார்த்த முகத்தையே பார்த்துக்கொண்டு பல்வேறு மன உளைச்சுலுக்கு ஆளாகக்கூடும்! முன் கூட்டியே இதற்கான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். 

ஒரு பரிசோதனையாக 2010 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2011 ஆம் ஆண்டு நவம்பர் வரை மாஸ்கோ அருகே ஓர் ஆராய்ச்சிக் கூடத்தில் ஆறு பேர் 500 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டனர். ""மார்ஸ் - 500'' எனப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் அந்த ஆறுபேரும் செவ்வாய் பயணத்தின்போது செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளையும் செய்தனர். உள்ளே பொருத்தப்பட்டிருந்த காமிராக்கள் மூலம் அவர்களது நடத்தைகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டன. நல்ல வேளையாக இந்த ஆறு பேருக்குமிடையே பெரிய பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை. 

செவ்வாயில் மனிதன் வாழ முடியுமா? 

செவ்வாய் கிரகத்தில் சுவாசிப்பதற்கான காற்று, தண்ணீர் இரண்டுமே பிரச்னை. போதாக்குறைக்கு கடும் குளிர். விண்வெளி யிலிருந்து கதிர்வீச்சுத் தாக்குதல் ஆபத்தும் உண்டு. எந்த நேரத்திலும் வானிலிருந்து விண்கற்கள் வந்து விழலாம்! சொல்லப்போனால் செவ்வாயில் ஒதுங்குவதற்குக் கூட இடம் இல்லை! செடி, கொடி, மரம்!.....ம்ஹூம் எதுவுமில்லை! செவ்வாய் ஒரு பொட்டல்! 
அது மட்டுமல்ல!....திடீரென்று புழுதிப் புயல் வீசும்!....சும்மா கொஞ்ச தூரம் இல்லை!.....அந்தப் புழுதிப்புயல் செவ்வாய் கிரகம் முழுவதையும் கவ்விக் கொள்ளும்! ஒரு நாள்....ரெண்டு நாள் எல்லாம் இல்லை!........அது மாதக் கணக்கில் நீடிக்கும்! அந்த சமயத்தில் கும்மிருட்டாகிவிடும்! சூரியனே தெரியாது!
செவ்வாயில் காற்று மண்டலம் உள்ளது. ஆனால் அதில் 96 சதவீதம் கார்பன் டை ஆக்ûஸடு! சுவாசிப்பதற்குத் தேவையான ஆகிஸிஜன் கிடைக்காது. ஆகவே சந்திரனில் போய் இறங்கிய விண்வெளி வீரர்களைப் போல் காற்றுக் குப்பி அடங்கிய விசேஷ உடையை அணிந்திருக்க வேண்டும். தண்ணீர் என்பது செவ்வாயின் வட துருவத்தில் நிலத்துக்கு அடியில் உறைந்த பனிக்கட்டி வடிவில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
செவ்வாயில் உயிர் வாழ்வதானால் நிலத்துக்கு அடியில் சுரங்கக் குடியிருப்புகளைக் கட்டிக்கொள்ள வேண்டும். அல்லது தரையில் வெளிக்காற்று புகாத கூடு வடிவிலான குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டு அதற்குள் சுவாசிப்பதற்கான காற்று வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 
பசுமைக் குடில்களைக் கட்டி அவற்றுக்குள் தாவரங்களை வளர்த்தால் அவற்றின் மூலம் ஆக்ஸிஜன் பெற முடியும். புழுதிப்புயல் வீசும் காலத்தில் சூரிய ஒளி கிடைக்காது என்பதால் பசுமைக்குடில்களில் உள்ள தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்ற ஆபத்து உண்டு. செவ்வாயின் நடுக்கோட்டுப்பகுதியில்கூட நல்ல குளிர்! ஏறக்குறைய அன்டார்ட்டிகா போன்ற நிலை! 
பூமியையும் விண்கற்கள் ஓயாது தாக்குகின்றன! ஆனால் பூமியின் காற்று மண்டலம் அடர்த்தியானது என்பதால் அனேகமாக அனைத்து விண்கற்களும் கீழே இறங்கும்போது தீப்பிடித்து எரிந்து அழிந்து விடுகின்றன. 
ஆனால் செவ்வாயின் நிலை அப்படியில்லை. காற்று மண்டல அடர்த்தி பூமியில் உள்ளதைப்போல் நூறில் ஒரு பங்குதான்! வெட்ட வெளியில் நின்றால் விண்கற்கள் நேராக தலை மீது வந்து விழக்கூடிய ஆபத்து உள்ளது! 
காற்று மண்டலமும் குறைவு. காந்த மண்டலமும் பலவீனமாது. எனவே விண்வெளியிலிருந்து வரும் ஆபத்தான கதிர்வீச்சு செவ்வாயின் மேற்பகுதி அனைத்தையும் தாக்குகிறது. 
செவ்வாயின் பாதக நிலைமைகளை பலவித உத்திகள் மூலம் மாற்றி மனிதன் வாழத்தக்கதாக ஆக்க முடியும் என்று சில நிபுணர்கள் கூறினாலும் அதற்கு பல நூறு.....?....ஆயிரம் ஆண்டுகள்?.....ஆகலாம்!

மேலும் சில தகவல்கள்!

விண்வெளிப்பயணம் நேர்கோட்டுப் பாதையில் இருக்காது. வளைந்த பாதைதான். "கியூரியாசிடி' ஆய்வுக்கலம் பூமியிலிருந்து 2011 நவம்பர் 26 ஆம் தேதி கிளம்பியபோது புமிக்கும் செவ்வாய்க்கும் இடையே இருந்த தூரம் இருபது கோடி கிலோமீட்டர். ஆனால் கியூரியாசிடி செவ்வாய் கிரகத்துக்குப் போய் சேருவதற்குப் பயணம் செய்த தூரம் 56 கோடி கி.மீ! அது வளைந்த பாதையில் சென்றதே இதற்குக் காரணம்! கியூரியாசிடி செவ்வாயில் 2012 ஆகஸ்டில் தரை இறங்கியபோது பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே இருந்த தூரம் 25 கோடி கி.மீ.

செவ்வாய் ஏன் சிவப்பாக இருக்கிறது? 

செவ்வாய் கிரகத்தில் போய் இறங்கினால் எங்கு பார்த்தாலம் சிவந்த மண்ணே காணப்படும்! இதற்குக் காரணம் செவ்வாயின் மேற்பரப்பில் இரும்பு ஆக்சைடு அதாவது "துரு' நிறைய இருப்பதே ஆகும்! செவ்வாயின் நிலப்பரப்பு முழுவதிலும் சிவந்த நிறத்திலான பொடி காணப்படுகிறது. செவ்வாயில் வீசும் காற்றினால் இது காற்று மண்டலத்திலும் இடம் பெற்றுள்ளது. பல கோடி கி.மீ. தொலைவிலிருந்து பார்த்தாலும் செவ்வாய் சிவந்த நிறத்தில் காணப்படுவதற்கு இதுவே காரணம்!

தொகுப்பு: கோட்டாறு ஆ.கோலப்பன்

More from the section

பிஞ்சுக் கை வண்ணம் - II
பிஞ்சுக் கை வண்ணம் - I
அங்கிள் ஆன்டெனா
மரங்களின் வரங்கள்!
டாமுவின் சாமர்த்தியம்!