புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

மரங்களின் வரங்கள்!: ஆலமரம்!

By - பா.இராதாகிருஷ்ணன்| DIN | Published: 08th September 2018 10:00 AM

 

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?

நான் தான் ஆலமரம் பேசுகிறேன். என்னுடைய தாவரவியல் பெயர் ஃபைகஸ் பெங்காலென்சிஸ் லின். நான் மோரேஸி குடும்பத்தை சேர்ந்தவன். நம் தேசத்தின் தேசிய மரமும் நான் தான். என்னுடைய தாயகம் இந்தியா. நான் மிகப் பிரமாண்டமாக வளரக் கூடியவன். பல ஆயிரம் காலம் உயிரோடிருப்பேன். அதனால் தான், பெரியவர்கள் உங்களை வாழ்த்தும் போது, "ஆல்போல் விழுது விட்டு, அருகு போல் வேரோடி, மூங்கில் போல் சுற்றம் முறியாமல் வாழ்வீர்' என வாழ்த்துகிறார்கள். 

நான் கொடும் வெயிலை தடுக்கும் கேடயமாக விளங்கி மனிதர்களுக்கும், பறவைகளும், கால்நடைகளுக்கும் நிழல் கொடுத்து காப்பதில் நான் முன்னணியில் இருக்கிறேன். மாவீரன் அலெக்ஸாண்டர் என்னைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து, அவரின் 7000 படை வீரர்கள் என் நிழலில் தங்கி ஓய்வெடுத்ததை என்னால் மறக்கவே முடியாது. நான் பந்தல் போல் அமைந்து என் கீழ் வந்து தங்கும் உயிரினங்களுக்கு குளிர்ச்சியைத் தருகிறேன். 

நான் இளமையில் பரந்து, விரிந்து உறுதியோடு இலை, கிளைகளைக் காக்கிறேன், முதுமையில் நான் தளர்வுற்ற காலத்தில், என் பிள்ளைகளான விழுதுகள் நான் விழுந்துவிடாமலிருக்க என்னைக் காக்கிறார்கள். அதாவது, பெற்றோர்களைத் தாங்கும் பிள்ளைகளைப் போல் என் மரத்தின் கிளைகளை விழுதுகள் தாங்கி நிற்கும். "ஆலமரம் போல் நீ இருக்க அதில் ஆலம் விழுதாய் நான் இருப்பேன்' என பிள்ளைகளே நீங்கள் உங்கள் பெற்றோர்களைப் போற்ற வேண்டும். இதை நாட்டின் ஒற்றுமைக்கும் உதாரணமாகவும் சொல்வார்கள். 

எனது தடித்த இலைகளை ஆடு, மாடுகள் விரும்பி உண்ணும். என்னுடைய கனியைப் பறவைகளும், குரங்குகளும் விரும்பி சாப்பிடுகின்றன. என்னுடைய பட்டை நாட்டு, சித்த மருத்துவதில் நீரிழிவு நோயைத் தீர்க்கும். விழுதுகள் ஈறு நோய்களைத் தீர்க்க வல்லது. என்னுடைய விழுதுகளின் நுனியிலுள்ள குச்சி போன்ற மெல்லிய பகுதியைப் பல் துலக்க பயன்படுத்தலாம். மேலும், என் விழுதுகளின் நுனியில் "அசோடா பாக்டர்' என்ற நுண்ணுயிர்க் கிருமிகள் உள்ளன. இவை காற்றிலுள்ள தழைச் சத்தை மண்ணில் நிலை நிறுத்த உதவுகின்றன. அதனால் தான் "ஆலும் வேலும் பல்லுக்குறுதி' என்கின்றனர். 

என்னிடமிருந்து கிடைக்கும் பால் மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாகும். உலகிலேய மிகப் பெரிய மரமாக நான் கொல்கத்தா அருகில் உள்ள கெளரா என்னுமிடத்தில் ஜெகதீஸ் சந்திரபோஸ் இந்தியன் பொட்டானிக்கல் கார்டனில் இப்போது காட்சிப் பொருளாக இருக்கிறேன். சென்னை அடையாற்றிலும் 450 வயது கடந்த என்னை பாதுகாத்து வருகிறார்கள். 

பெர்சியா வளைகுடாவில் பனியாக்கள் எனப்படும் வியாபாரிகள் இறை வணக்கத்திற்காகவும், வியாபாரத்திற்காகவும் என் நிழலில் தங்குவார்கள். அதனால் ஆங்கிலத்தில் என்னை பன்யான் ட்ரீ என்று அழைக்கிறார்கள். 

படைப்புக் கடவுளான பிரம்மா ஆலமரமாக அவதரித்தார் எனவும், திருமால் ஆலமரத்தின் இலையில் படுத்துக் கொண்டிருப்பதாகவும் இறைவன் சிவன் "ஆலமர் செல்வன்' எனவும் புராணக்கதைகள் கூறுகின்றன. 

நான் தமிழ் ஆண்டில் ஈஸ்வர ஆண்டை சேர்ந்தவள். திருஆலங்காடு, திருஆலம்பொழில், திருபழுவூர் முதலிய திருத்தலங்களில் நான் தலவிருட்சமாக இருக்கிறேன். என்னுடைய நட்சத்திரம் மகம். மரம் வளர்ப்போம், மன்னுயிர் காப்போம் என புராணங்களில் சொல்லப்படுகிறது. பல சமய சடங்குகளில் என் இலையும், குச்சியும் பயன்படுகின் நன்றி குழந்தைகளே ! வர்ட்டா !

(வளருவேன்)

More from the section

பிஞ்சுக் கை வண்ணம் - II
பிஞ்சுக் கை வண்ணம் - I
அங்கிள் ஆன்டெனா
மரங்களின் வரங்கள்!
டாமுவின் சாமர்த்தியம்!