புதன்கிழமை 16 ஜனவரி 2019

முத்துக் கதை: சக்தியின் மைந்தன்!

By - மயிலை மாதவன்| DIN | Published: 08th September 2018 10:00 AM

விநாயகர் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது ஒரு பெண்பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்தார். பூனை விநாயகருக்குப் போக்குக் காட்டிக் கொண்டு மரத்தின் மேல் ஏறியது! பின் குதித்தது! விநாயகரை அலைக்கழித்தது! விநாயகருக்குக் கோபம் வந்துவிட்டது! அதைப் பிடித்துத் துன்புறுத்தி அடித்து விட்டார். அடிபட்ட பூனை எங்கோ சென்று மறைந்துவிட்டது. பிறகு அம்மாவைக் காண ஓடினார் விநாயகர். 
அன்னையைப் பார்த்த விநாயகருக்கு தூக்கிவாரிப் போட்டது! அம்மாவின் கன்னத்திலும் நெற்றியிலும் காயங்கள்!
""என்னம்மா ஆச்சு?....ஏன் இப்படி உடம்பெல்லாம் காயமா இருக்கிறது?'' என்று கேட்டார். 
""ம்...இதெற்கெல்லாம் காரணம் நீதான்!...''
""என்னம்மா சொல்கிறாய்?...நானா இதெற்கெல்லாம் காரணம்?''
""ஆமாம்...நீ இன்று யாரையாவது துன்புறுத்தினாயா?''
விநாயகருக்கு தான் பூனைகூட விளையாடினதும், அதைத் துன்புறுத்தியதும் நினைவுக்கு வந்தது. 
""ஆமாம்மா...சற்று நேரத்திற்கு முன் ஒரு பூனையை அடித்தேன்...ஐய்யய்யோ!...அந்தப் பூனையின் அன்னையோ, தந்தையோ, அண்ணனோ உங்களை இப்படித் துன்புறுத்திட்டாங்களாம்மா!...'' என்று கேட்டார் 
அம்மாவின் காயத்தைப் பார்த்ததும் விநாயகருக்கு அழுகையாய் வந்தது. 
அழுகின்ற பிள்ளையை அணைத்தபடி, ""மகனே!....என்னை யாரும் அடிக்கவில்லை. உயிர்கள் அனைத்திலும் நான் இருக்கிறேன் இல்லையா....அந்தப் பூனையில் இருப்பதும் நான்தானே....அதனால் நீ பூனையை அடித்த அடிகள் என்மீது விழுந்திருக்கின்றன!....நீ அறியாமல் செய்து விட்டாய்....வருந்தாதே...உயிர்கள் அனைத்திலும் சிவசக்தி வடிவமாக நானும் உன் தந்தையும் இருக்கிறோம்...யாருக்கு தீங்கு நேர்ந்தாலும் அது எங்களுக்கு நேர்ந்ததாகும். 
இந்தச் சொற்கள் விநாயகரின் உள்ளத்தில் பதிந்து விட்டன. அனைத்து உயிர்களிலும் அன்னையின் வடிவாகவே கண்ட அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை! அண்டங்கள் அனைத்தையும் சிவசக்தி வடிவாகக் கண்டதால் ஞானியருள் தலைசிறந்த ஞானியாகத் திகழ்கிறார் விநாயகர்!
 

More from the section

 அங்கிள் ஆன்டெனா
வேட்டி சட்டை!
கடவுள் இருக்கும் இடம்!
விடுகதைகள்
பிஞ்சுக் கை வண்ணம் - II