புதன்கிழமை 17 ஜூலை 2019

அரங்கம்: குப்புவின் கனவு

By ஆர்.வி.பதி| DIN | Published: 06th July 2019 02:51 PM

 

காட்சி - 1
இடம் - ஊரின் முக்கிய சாலை
மாந்தர் - குப்பு மற்றும் பாபு
(பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த குப்பு பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.  அவனுடைய பள்ளிக்கும் வீட்டிற்கும் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு இருக்கும்.   காலை மாலை என இரண்டு வேளையும் நடந்துதான் பள்ளிக்கு வருவான்.   குப்பு மாலை தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லுகையில் எதிர்ப்புறத்தில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது.  அதன் பின்புற சீட்டில் ஒரு நாய் அமர்ந்து வெளியே எட்டிப் பார்த்தபடியே சென்றது)

குப்பு - ம்.  ஒரு நாய் கார்லே பின் சீட்டிலே உட்கார்ந்து ஜாலியா போகுது.  நாம இன்னும் கார்லே பயணம் செய்ததே இல்லே. 

(குப்பு தனக்குள் இப்படி சொல்லிக்கொண்டே நடந்து சென்றான்.  அப்போது உடன் படிக்கும் நண்பன் பாபு சைக்கிளில் வந்து குப்புவின் அருகே நிறுத்தினான்)

பாபு - டேய் குப்பு.  வாடா டபுள்ஸ்லே வீட்டுக்குப் போயிடலாம்.
குப்பு - நீ போடா.  நான் நடந்தே வர்றேன்.
பாபு - ஏன்டா.   அவ்வளவு தூரம் எதுக்கு நடக்கப் போறே ?
குப்பு - ஒரு காரைக் கொண்டு வந்து கூப்பிட்டா வருவேன்.  நீ  என்னடான்னா சைக்கிள்லே வான்னு கூப்பிடறே.   உனக்கும் கஷ்டம். பின்னாடி உட்கார்ந்து வர்ற எனக்கும் கஷ்டம்.

(அப்போது எதிரே வந்து கொண்டிருந்த கறுப்பு ஆடி காருக்குள் இரண்டு பள்ளிச்சிறுமிகள் சீருடையுடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்கள்.)

குப்பு - அங்கே பாருடா.  ரெண்டு சின்னப்பசங்க ஜாலியா கார்லே உட்கார்ந்து போகுதுங்க.    
பாபு - சரிடா.  எனக்கு வேலையிருக்கு.  கிரெüவுண்டுக்குப் போய் கிரிக்கெட் பிராக்டிஸ் பண்ணணும்.  நான் வர்றேன்.

(இப்படிச் சொன்ன பாபு விர்ரென்று சைக்கிளை மிதித்துக் கொண்டு சென்று விட்டான்.    குப்புவிற்கு கொஞ்ச நாளாகவே காரில் செல்ல வேண்டும் என்ற ஆசை மனதில் ஏற்பட்டு விட்டது.   அவன் இதுவரை காரில் பயணித்ததே இல்லை. யார் காரில் சென்றாலும் அவர்களை ஏக்கமாகப் பார்க்கத் தொடங்கியிருந்தான்.)

காட்சி - 2
இடம் - குப்புவின் வீடு
மாந்தர் - குப்பு மற்றும் தேவதை
(அன்று ஞாயிற்றுக்கிழமை.  குப்பு காலையில் எழுந்து குளித்து முடித்து சாப்பிட்டு விட்டு விளையாடப் புறப்பட்டான். அப்போது அவன் எதிரே ஒரு தேவதை தோன்றியது.    இதை சற்றும் எதிர்பாராத குப்பு திகைத்து நின்றான்.)

தேவதை - என்ன குப்பு.  உன்னைத் தேடி வந்திருக்கேன்.  வான்னு என்னை வரவேற்க மாட்டியா ?
குப்பு - நீ நெஜமாலுமே தேவதையா ?
தேவதை - அதிலென்ன சந்தேகம் ?  உனக்கு ஏதாவது வேணும்னா கேள். தர்றேன்.
குப்பு - என்ன கேட்டாலும் தருவியா ?
தேவதை    - நிச்சயம் தர்றேன்.
குப்பு - எனக்கு ஒரு கார் வேணும்.
தேவதை    - அப்படியே ஆகட்டும் 

(தேவதை இப்படிச் சொன்னதும் ஒரு விளையாட்டு ரிமோட் கார் அவன் கையில் இருந்தது. இதை எதிர்பாராத குப்பு திகைத்தான்.)

குப்பு - நான் கேட்டது விளையாட்டுக் கார் இல்லே.  நிஜமான கார்.
தேவதை - அப்படியா ?  சரி.  கவலைப்படாதே.  உனக்கு நிஜமான காரே தர்றேன்.   அப்படியே ஆகட்டும்.
(தேவதை இப்படிச் சொன்னதும் ஒரு புத்தம் புது கார் அவன் வீட்டு வாசலில் வந்து நின்றது.    இதைப் பார்த்த குப்புவிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.  துள்ளிக் குதித்தான்.   இனிமேல் இந்த காரிலேயே எங்கே வேண்டுமானாலும் போகலாம். வரலாம்.)

குப்பு - ஹையா ஜாலி ஜாலி 
(குப்பு இப்படி துள்ளிக் குதித்த சமயத்தில் அவனை யாரோ தட்டி எழுப்புவதைப் போல உணர்ந்தான்.    கண்விழித்துப் பார்த்தான்.  அருகில் அவன் அம்மா அவனை ஆச்சரியமாகப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.)

குப்பு - ச்சே.  எல்லாம் கனவா ?
(குப்புவின் மனதில் சோகம் சூழ்ந்தது)

காட்சி - 3
இடம் - பள்ளி வளாகம்
மாந்தர் - ஆசிரியர் மற்றும் குப்பு

(அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து விடுமுறைக்குப் பின் பள்ளி திறக்கப்பட்டது.   அன்று வகுப்பு ஆசிரியர் தேர்வு விடைத்தாள்களைக் கொடுத்தார்.  வழக்கமாக நல்ல  மதிப்பெண்கள் வாங்கும் குப்பு இந்த முறை குறைவான மதிப்பெண்களே வாங்கியிருந்தான்)

ஆசிரியர் - ஏன்டா குப்பு.  என்னாச்சு உனக்கு.  இந்த முறை ஏன் இவ்வளவு குறைவா மார்க் வாங்கியிருக்கே.
குப்பு - நல்லாதான் சார் படிக்கிறேன்.  மனசுலே ஏற மாட்டேங்குது.
ஆசிரியர் - சரி சரி.  இந்த முறை நீ அரசுத் தேர்வு எழுதணும். பார்த்துப் படி.  அப்பதான் பிளஸ்டூ விலே நீ விரும்பற பிரிவு கிடைத்து படிக்க முடியும்.
(குப்பு ஆமோதித்துத் தலையாட்டினான்.)

(அன்று முற்பகல் அவனுடைய பள்ளிக்கு தலைமைஆசிரியரைப் பார்க்க ஒருவர் காரில் வந்திருந்தார்.   புத்தம் புதிய அந்த காரை பள்ளியின் முன்னால் இருந்த அந்த மரத்தின் கீழ் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.   அப்போது இடைவேளை நேரமாதலால் மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியே வந்தார்கள்.   குப்பு வெளியே வந்து அந்த காரின் அருகில் சென்றான்.  அதை ஆசை தீர தொட்டுப் பார்த்தான்.  உள்ளே எட்டிப் பார்த்தான்.  இதை தன் ஓய்வு அறையில் இருந்தபடி கவனித்தார் ஆசிரியர்.    சற்று நேரத்தில் மீண்டும் வகுப்பு ஆரம்பித்தது.)

ஆசிரியர் - குப்பு.   இன்னைக்கு சாயங்காலம் பள்ளி விட்டதும் நீ என்னை பார்த்துட்டு வீட்டுக்குப் போ!...
குப்பு - (குழப்பத்துடன்)  சரிங்க சார்.
(அன்று மாலை வழக்கம் போல நான்கு மணிக்கு பள்ளி மணி ஒலிக்க மாணவர்கள் அனைவரும் ஓடி கேட்டைக் கடந்து தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள்.   குப்பு ஆசிரியரின் ஓய்வறைக்குச் சென்றான்)

காட்சி  - 4
இடம் - பள்ளி வளாகம், ஆசிரியரின் வீடு
மாந்தர் - ஆசிரியர் மற்றும் குப்பு

(பள்ளியில் ஆசிரியர் ஓய்வறைக்குச் சென்று ஆசிரியரை சந்திக்கிறான் குப்பு)

ஆசிரியர் - வாடா குப்பு.  
குப்பு - சார் என்னை வந்து பார்க்கச் சொன்னீங்க 
ஆசிரியர் - ஆமா. நீ இப்பெல்லாம் முன்னை மாதிரி இல்லே.  எப்பவும் எதையோ நினைச்சிக்கிட்டிருக்கே.  இன்னைக்கு காலையிலே நம்ம பள்ளிக்கு வந்த ஒரு காரை நீ விநோதமா தொட்டுத் தொட்டு பார்த்தே.    அதை நீ ஆசையா ஏக்கமா பார்த்தே. அதை நான் கவனிச்சேன்.   என்னாச்சு உனக்கு?...  
குப்பு - சார்.   எனக்கு கார்லே போகணும்னு ஆசையா இருக்கு.  நான் இதுவரைக்கும் கார்லே போனதே இல்லே சார்.   
ஆசிரியர் - சரி.  அதுக்கான முயற்சியை நீ செய்தியா ?
குப்பு - எங்கப்பா ஒரு கூலித் தொழிலாளி சார்.   நான் எப்படி கார்லே போக முடியும் ?
ஆசிரியர் - சரி சரி.  என்னோட வா.

(ஆசிரியர் அவனைத் தன் மோட்டார் சைக்கிளில் அமர வைத்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.   அவனுக்கு சாப்பிட பிஸ்கட் கொடுத்தார்.)

குப்பு - நேரமாயிடுச்சி. நான் வீட்டுக்குப் போகணும் சார்.  எங்கம்மா தேடுவாங்க....
ஆசிரியர் - சரி.  வா நான் அந்தப்பக்கமாத்தான் போகணும்.  உன்னை வீட்டிலே இறக்கி விட்டுடறேன்.

(ஆசிரியர் வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த காரில் டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தார்.  அது அவருடைய கார்.  அவர் தனக்கு அருகில் இருந்த முன்பக்க கதவைத் திறந்து விட்டார் )

ஆசிரியர் - வா குப்பு,  இப்படி வந்து என் பக்கத்திலே உட்காரு.

(குப்பு மகிழ்ச்சியோடு காரின் முன் சீட்டில் ஏறி அமர்ந்தான்.  ஆசிரியர் காரை ஓட்டத் தொடங்கினார்.    அரை மணிநேரம் அவனை தன் காரில் அமர வைத்து பல இடங்களுக்கும் சென்று கடைசியில் அவன் வீட்டின் முன்னால் இறக்கி விட்டார்.   குப்பு அன்று அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை)

ஆசிரியர் - என்ன குப்பு இப்ப உனக்கு சந்தோஷமா ?
குப்பு - ரொம்ப சந்தோஷம் சார்.  இதுவரைக்கும் நான் கார்லேயே போனதில்லே சார்.
ஆசிரியர் - குப்பு.   நீ கார்லே போக ஆசைப்பட்டிருக்கே.  அது தப்பில்லே. அதுக்கு என்ன வழின்னு நீ யோசிச்சிருக்கணும்.   அதை  விட்டுட்டு அந்த ஆசையை நீ உன் மனசுக்குள்ளே போட்டு புதைச்சி ஏங்கியிருக்கே.  அதனாலே உன்னாலே எதிலேயும் கவனம் செலுத்த முடியலே.  அரையாண்டுத் தேர்வு மார்க்கும் குறைஞ்சு போச்சு.   இப்படியே போயிருந்தா நீ 
அரசுத்தேர்வுலே பெயிலாகியிருக்கக் கூட வாய்ப்பிருக்கு. எதுக்காகவும் மனசைப் போட்டு குழப்பிக்காம எப்பவும் தெளிவா வெச்சிக்கப் பழகணும். அப்பதான் நாம எதிலேயும் ஜெயிக்க முடியும்.
(குப்பு மெüனமாக இருந்தான்)

ஆசிரியர் - நீ கூலித் தொழிலாளியின் மகனா இருக்கலாம். அதிலே    தவறில்லே. நீ படிப்பிலே முழுசா கவனம் செலுத்திப் படிச்சா நாளைக்கே நீ ஒரு மருத்துவராகலாம். கலெக்டராகலாம். என்ன வேணாலும் ஆகலாம்.   கார் வாங்கலாம். எப்பவும் நீ கார்லேயே போகலாம்.   கார்லே மட்டுமில்லே விமானத்துலேயும்     பறக்கலாம்.  
(குப்புவின் மனதில் வெளிச்சம் உண்டானது.)

குப்பு - சார்.  இனிமே இதுமாதிரியெல்லாம் நினைத்து மனசைக் குழப்பிக்க மாட்டேன் சார்.    இன்னையிலே இருந்து நான் நல்லா படிப்பேன். முதல் மாணவனா வருவேன்.   உயர்ந்த நிலைக்கு வருவேன்.  கார் வாங்குவேன். என்னோட அப்பாவையும் அம்மாவையும்  கார்லே அழைச்சிகிட்டு போவேன் சார்.

ஆசிரியர் - உன்னோட முயற்சி உன் கனவை நிஜமாக்கும் குப்பு.

(குப்பு மகிழ்ச்சியோடு வீட்டிற்குள் நுழைய ஆசிரியரும் மகிழ்ச்சியோடு தன் வீட்டிற்குப் புறப்பட்டார்)

- (திரை) -
 

More from the section

பிஞ்சுக் கை வண்ணம் - II
பிஞ்சுக் கை வண்ணம் - I
அங்கிள் ஆன்டெனா
எறும்புகள்!
மரங்களின் வரங்கள்!: பூவரசம் மரம்