வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

கூழாங்கல்

By  - பிரபுசங்கர்| DIN | Published: 16th March 2019 12:00 AM

ஒரு கிராமத்தில் ஒரு மகான் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.
அவரிடம் தனசேகரன் என்று ஒரு சீடன் இருந்தான். அவன் மூடன்! மகானின் அறிவுரைகள் அவனுடைய புத்தியில் ஏறவில்லை.  அவனுக்குத்   தான் பெரும் செல்வந்தனாக வாழ வேண்டும் என்ற பேராசை இருந்தது!
நல்ல வாய்ப்புக்காக அவன் காத்திருந்தான். மகானை தரிசிக்க வருவோரிடம் எப்பொருளையும் காணிக்கையாகப் பெற்றுக்கொள்ள மறுத்து விடுவார். அன்பு மிகுதியால் வரும் காணிக்கைகளை உடனே அங்குள்ள எளியோருக்குத் தந்துவிடுவார். தனசேகரனுக்கு இது பெரிய வருத்தம் தரும். ஒரு காலம் வரும், அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தான். 
ஒரு சமயம், மகானைப் பார்க்க வந்திருந்த ஒரு பிரமுகரிடம் அவர் மகானுக்குச் சமர்ப்பிக்கும் காணிக்கையைத் தன்னிடம் தனியாகத் தந்துவிடும்படி கேட்டுக்கொண்டான். இதை பிரமுகர் மகானிடம் தெரிவிக்க, இனி அவன் தன்னுடன் தங்கியிருக்கலாகாது என்று புரிந்துகொண்டார் மகான். அதுமட்டுமல்லாமல், அந்த ஊரை விட்டே தான் போய்விடுவதுதான் சரி என்றும் யோசித்தார். அவ்வாறு போகுமுன் அவனுக்கு நல்லதொரு பாடம் கற்பித்துவிட்டுப் போகவேண்டும் என்று முடிவு செய்தார். 
தனசேகரனைக் கூப்பிட்டார். ""தம்பி, நான் புண்ணியத் தலங்களுக்குப் போய்வர விரும்புகிறேன்.  நீ இந்த ஊரிலேயே தங்கிவிடு. உனக்காக ஒரு அன்பளிப்பை நான் கொடுக்க விரும்புகிறேன்'' என்றார். 
இந்த சாமியாரிடம் அன்பளிப்பாகக் கொடுக்க என்னதான் இருக்கும் என்று அலட்சியமாக நினைத்துக் கொண்டான். இவரிடம் என்ன அப்படி ஒரு மதிப்பு வாய்ந்த பொருள் இருந்துவிடப் போகிறது?' என்று எண்ணிக்கொண்டான்.      
மகான் ஒரு கூழாங்கல்லை அவனிடம் கொடுத்து,  ""தம்பி, இது வெறும் கூழாங்கல் அல்ல, அற்புதமானது. இதனால் நீ எந்த உலோகத்தைத் தொட்டாலும் அது தங்கமாக மாறும்!''
சீடனுக்கு மகிழ்ச்சி!....""மிக்க நன்றி குருவே!'' என்றான்.
 "" ஆனால் நீ இந்தக் கல்லைப் பயன்படுத்தத் தொடங்கி இரண்டு நாள்தான் இதற்கு அந்த மகிமை இருக்கும். பிறகு கல் தன் சக்தியை இழந்து சாதாரண கூழாங்கல்லாகத்தான் இருக்கும்...''
அந்தக் கூழாங்கல்லை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வந்துவிட்டான்.
மிகுந்த சந்தோஷம் அவனுக்கு. இரண்டே நாட்களில் தான் மிகப் பெரிய பணக்காரனாக விளங்கப் போகிறோம், யாரிடத்தும் இல்லாத அளவுக்குத் தன்னிடம் தங்கம் சேரப்போகிறது என்று மனப்பால் குடித்தான். அந்தக் கூழாங்கல்லை பத்திரமாகப்  பூஜையறையில் கொண்டு வைத்தான். அதை அவன் வெளியில் எடுத்துச் செல்லத் தயங்கினான். மனதில் பேராசைத்  தீ மூண்டது! 
கட்டுப்படுத்த முடியாத ஆசையுடன்  இரும்பு உலோகங்களை நிறையச் சேமிக்கத் துடித்தான்!
அந்த ஊரில் இரும்புப் பட்டறை ஒன்று இருந்தது. அங்கே உபயோகமற்ற பழைய இரும்பு சாமான்கள் ஏராளமாக இருந்தன. அந்த இரும்பையெல்லாம் டன் டன்னாகத் தன் வீட்டிற்குக் கொண்டு வந்துவிட வேண்டும், பிறகு எளிதாகத் தங்கமாக மாற்றிக்கொள்ளலாம் என்று பேராசையுடன் யோசித்தான்.
கடைக்காரர் தனசேகரனை சந்தேகமாகப் பார்த்தார். சும்மா வெறும் கையை வீசிக்கொண்டு வந்திருக்கிறான், அப்படியே வந்தவன் தன்னிடம் எதுவும் பேசாமல், மலைபோல் குவித்து வைத்திருக்கும் இரும்பு ஓட்டை உடைசல்களையே பார்த்துக் கொண்டிருக்கிறானே என்று யோசித்தார். ""என்னப்பா வேண்டும்? இந்தப் பழைய இரும்பு சாமான்களிலிருந்து ஏதாவது புது இரும்பு சாமான் உருவாக்கித் தரவேண்டுமா?'' என்று கேட்டார். 
""அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்,'' அலட்சியமாக பதிலளித்தான் தனசேகரன். தன்னிடம் மந்திர கூழாங்கல் இருக்கும் பெருமை அவனுக்கு!
அவனுடைய முகபாவத்தைக் கடைக்காரர்,  ""உனக்கு என்னதான் வேண்டும்?'' என்று கேட்டார்.  
""இதோ, இந்த இரும்பெல்லாம் எனக்கு மொத்தமாக வேண்டும். என்ன விலை?'' என்று தனசேகரன் கேட்டான்.
கடைக்காரர் யோசித்தார்.  இவனுக்கு எதற்காக இத்தனை பழைய இரும்பு? நம்மிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, வேறு யாரிடமாவது விற்கப் போகிறானோ?...
""சீக்கிரம், நாளைக்குள் நான் இந்த இரும்பு எல்லாவற்றையும் எடுத்திட வேண்டும்... விலை சொல்லுங்கள்,'' என்று தனசேகரன் பரபரத்தான். 
""சரி, உங்கிட்ட எத்தனைப் பணம் வெச்சிருக்கே?'' கடைக்காரர் கேட்டான். 
""பணம் என்ன, பெரிய பணம்! ரெண்டுநாள் கழித்து வந்தீர்களென்றால் நீங்கள் எதிர்பார்ப்பதைவிட மேலேயே நான் தருவேன்,'' என்றான் தனசேகரன்.
இந்தப் பையனிடம் ஏதோ மர்மம் இருப்பதைப் புரிந்துகொண்ட கடைக்காரர், ஒரு விலையைச் சொல்லி, எடுத்துக்கொண்டு போகுமாறு சொன்னார். ""இங்கே வண்டி எதுவும் இல்லை. நீயாக ஏதேனும் வண்டி அமர்த்திக்கொண்டு எடுத்துக்கொண்டு போ.''
தனசேகரன் யோசித்தான். எதற்காக அனாவசியமா வண்டி வாடகை கொடுக்கவேண்டும்? ரெண்டுநாள் அவகாசம் இருக்கிறதே, நாமே கொஞ்சம், கொஞ்சமாக எடுத்துச் சென்றுவிடலாம் என்று முடிவு செய்தான். 
அப்போதே பாதிநாள் கடந்துவிட்டது. மிகவும் சிரமப்பட்டு பெரிய பெரிய இரும்பு சாமானாக எடுத்துப் போக ஆரம்பித்தான். அதற்குள் ஊரில் அனைவரும் கூடிவிட்டார்கள். "என்ன செய்யறான், இந்தக் கிறுக்கன்!' என்று தங்களுக்குள் ஆச்சரியமாகப் பேசிக்கொண்டார்கள். ஆனால தனசேகரனோ யாருடைய உதவியையும் கேட்கவில்லை. தானே தூக்கமாட்டாமல் பழைய இரும்புச் சாமான்களை எடுத்துக்கொண்டு போனான். 
மாலை நேரம். கடைக்காரர் கடையை மூடினார். ""இன்றைக்குக் கடைநேரம் முடிந்துவிட்டது; மறுபடி நாளைக்குதான்,'' என்றார்.
தனசேகரனுக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது. இன்னும் முக்கால்வாசி சாமான்களை அவன் கடையிலிருந்து எடுக்க வேண்டும். மறுநாள்வரை காத்திருக்க அவன் தயாராக இல்லே. அதனால் இரவு முழுவதும் தூங்காமல், தெருத்தெருவாக அலைந்து கீழே கிடந்த ஆணி, ஊசி என்று எல்லா இரும்பு சாமான்களையும் பொறுக்கிச் சேகரித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு தூக்கமே இல்லை!....   இப்படி இரவு முழுவதும் சுத்தியவன், காலையில், கடைக்கு முன்னால் காத்திருந்தான். கடை திறந்தவுடனேயே உள்ளே பாய்ந்துபோய் இரும்பு சாமான்களை வேகவேகமா எடுத்துக்கொண்டான். இரவு முழுவதும் தூங்கவில்லை; சாப்பிடவும் இல்லை. மிகவும் சோர்வாகிவிட்டான். ஐந்து கிலோ இரும்பைக் கூட இப்போது இழுத்துக்கொண்டு போக அவனால முடியவில்லை. மயக்காமாய் வந்தது.  அப்படியே பொத்தென்று விழுந்துட்டான்.
அவனுக்கு மயக்கம் தெளிந்து எழுந்தபோது இரண்டுநாள் பொழுது போய்விட்டது. "ஓ'ன்னு அழுதான் தனசேகரன். இனி அந்தக் கூழாங்கல் பயன்படாதே!
 எல்லாம் பேராசையால் விளைந்த விபரீதம்!

More from the section

அங்கிள் ஆன்டெனா
புத்தகத்தின் மதிப்பு!
விடுகதைகள்
அரங்கம்: இரு நண்பர்கள்!
கடி