21 ஏப்ரல் 2019

மரங்களின் வரங்கள்!: மருத்துவ பொக்கிஷம் - பாதிரி மரம்

By -பா.இராதாகிருஷ்ணன்| DIN | Published: 16th March 2019 12:00 AM

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?  

நான் தான் பாதிரி மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் ஸ்டீரியோஸ்பெர்மம் ஸ்வாவேலென்ஸ் அல்லது  பிக்னோனியா ஸ்வாவேலென்ஸ் என்பதாகும். நான் பிக்னானியாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி என வேறு பெயர்களும் உண்டு.   ஒரு காலத்தில் கடலூர் மாவட்டம், கெடில நதியின் தென்கரையில் பாதிரி மரங்கள் நிறைந்த புலியூர், என் பெயரால் திருப்பாதிரிப்புலியூர் என்று பெயர் பெற்றது.  ஆனால், இன்றோ உங்களுக்குக் காணக் கிடைக்காத அரிய மரமாகி விட்டேன்.   

நான் வேனிற் காலத்தில் பூக்கும் ஒரு வகைப் பூ மரம்.  அதனால் தான் குறுந்தொகையும், “வேனிற் பாதிரிக் கூன் மா மலர் அன்ன” என்று குறுந்தொகையும், “பாதிரித் தூத் தகட்டு எதிர் மலர் வேந்த கூந்தல்” என நற்றிணையும்  என் சிறப்பை உணர்த்துகிறது.   நம்ம ஒளவை மூதாட்டியும் தனது தனிப்பாடலில் என்னை மனிதர்களுடன் ஒப்பிட்டு சொல்லியிருக்கிறாங்க. “சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர்; சொல்லியும் செய்யார் கயவரே, நல்ல; குலாமலை வேல் கண்ணாய் கூறு உவமை நாடில்; பலா, மாவைப் பாதிரியைப் பார்” என்கிறார்.  அதாவது மனிதர்களிலே மூன்று வகை இருப்பார்களாம். சிலர் நல்ல விஷயங்களைச் சொல்லாமலே செய்வார்கள், பலா மரம் பூக்காது. ஆனால், காய்த்து இனிமையான பலாச்சுளைகளைத் தரும். முதல் வகை மனிதருக்கு பலா மரம் உவமை.  வேறு சிலர் சொல்லிவிட்டு செய்வார்கள், மாமரம் பூக்கும், காய்க்கும், பழுக்கும், எதையும் சொல்லிவிட்டுச் செய்கிற இரண்டாவது வகை மனிதருக்கு இது உவமை. வேறு சிலர் சொல்வார்கள், ஆனால்,  செய்ய மாட்டார்கள். பாதிரி மரம் பூக்கும், ஆனால், காய்க்காது  பழுக்காது, பந்தாவாகச் சொல்லி விட்டு எதுவும் செய்யாமல் இருக்கிற மூன்றாவது மனிதருக்கு இது உவமை. 

குழந்தைகளே,  என்னை தப்பா நினைக்காதீங்க. இது இயற்கை எனக்குத் தந்த வரம்.  நான் உங்களுக்கு இளஞ்சிவப்பு நிறப் பூக்களைக் கொடுக்கிறேன். சங்கக்காலப் புலவர் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் என்னை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். ஓவியர்களின் செந்நிறம் தோய்த்த தூரிகை போல என் தூய மலர் இருக்கும்.  எனது இலை, பூ, விதை,  அனைத்தும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன. 

எனது வேர் உடலுக்குக் குளிர்ச்சி தந்து பலமூட்டும். வேரை காய வைத்து இடித்து, சலித்து வைத்துக் கொண்டு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும், இரத்தத்தில் சேரும் நச்சுப் பொருள்களை நீக்கி, இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, இரத்தச்சோகையைக் கட்டுப்படுத்தும்.    எனது பூவை அரைத்து தலையில் பற்றுப் போட்டால் ஒற்றைத் தலைவலி நிற்கும். பூவை நசுக்கி தேனுடன் கலந்து உண்டால் இதயத்தின் தசைகள், இரத்தக் குழாய்கள், வால்வுகள் ஆகியவற்றை பலப்படுத்தும். ஆஸ்துமா, காய்ச்சல், மூலநோய், புண், வீக்கம், எரிச்சல், மலச்சிக்கல், மூச்சுவிடுதலில் சிரமம், வாயுத்தொல்லை, குடல்புண், சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சல் ஆகியவற்றை சரிசெய்யும் மருத்துவக் குணங்கள் என்னிடம் உண்டு. 

நான் கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர், அருள்மிகு பாடலீஸ்வரர், திருவாரூர்,  அருள்மிகு தியாகராஜர்,  திருப்பூர் மாவட்டம், அவிநாசி, அருள்மிகு இலிங்கேஸ்வரர், காஞ்சிபுரம் மாவட்டம், வல்லக்கோட்டை,  அருள்மிகு சுப்பிரமணியசுவாமி, சென்னை, பாடி, திருவலிதாயம், அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் ஆகிய திருக்கோவில்களில் தலவிருட்சமாக இருக்கிறேன்.  நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

More from the section

நேர்மையின் பரிசு!
அங்கிள் ஆன்டெனா
பொருத்துக...
விடுகதைகள்
சேவை மனப்பான்மை!