வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

இந்த வார கலாரசிகன்

DIN | Published: 02nd September 2018 02:35 AM

கடந்த வாரம் புலவர் செ.இராசு எழுதிய "நமது கச்சத்தீவு' என்ற புத்தகம் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தேன். சேலத்திலிருந்து, பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மோகன் குமார் அந்தப் பணியைத் தொடங்கிவிட்டதாகத் தெரிவிக்கிறார். அவருக்கு நன்றி!


கடந்த புதன்கிழமை, திருப்பரங்குன்றத்தில் "தினமணி'யின் திருநெல்வேலி பதிப்பில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் ஜெயந்திநாதனின் திருமணம். அந்தத் திருமணத்தில் கலந்துகொள்ள வைகை விரைவு ரயிலில் பயணித்தபோது, வழித்துணையாக நான் எடுத்துச் சென்றது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய "குகைகளின் வழியே' என்கிற புத்தகம். பயணிப்பது எவ்வளவு சுகமோ அதைவிட சுகம் எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துக்களுடன் பயணிப்பது. அவரது எழுத்துக்களுடன் பயணிப்பதே சுகம் என்றால், அவரது பயணக் கட்டுரையுடன் பயணிப்பது எந்த அளவு சுகமாக இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

இதற்கு முன்பு ஜெயமோகனின் "புல்வெளி தேசம்' எனும் புத்தகம் குறித்து நான் பதிவு செய்திருக்கிறேன். இப்போது ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஸா முதலிய பல மாநிலங்களிலுள்ள குகைகள் வழியே அவருடன் பயணிப்பது புதியதோர் அனுபவம். அவர் கண்டு ரசித்த பல குகைகளை நானும் பார்த்திருக்கிறேன் என்றாலும், ஆள் நடமாட்டமே இல்லாத குகைகளுக்குள் எல்லாம் அவர் நுழைந்து பார்த்திருப்பது மூக்கில் விரலை வைக்க வைக்கிறது.
அவரே கூறுவதுபோல, ஜெயமோகனின் இந்தக் குகைப் பயணத்தில் குறிப்பிட வேண்டியது அந்தக் குகைகள் அருகருகே இல்லாமல் இருப்பது என்பதுதான். அதனால், குகைகள் இருக்கும் இடங்களை நோக்கி அவர் நடத்திய பயணத்தில் கடந்து சென்ற பல இடங்களையும் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

""ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அனுபவம். இவற்றில் ஆந்திரத்திலுள்ள "பெலும் குகை' ஓரளவு வசதி செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் குகைகள் முழுமையாக கைவிடப்பட்டவை. பல குகைகளில் இருளில், சேற்றில் தவழ்ந்தும், நெளிந்தும் உள்ளே சென்றோம். உள்ளே பார்க்க  ஒன்றும் இல்லை, உள்ளிருக்கும் உணர்வை அடைவதைத்தவிர'' என அவர் பதிவு செய்யும்போது, இந்தக் குகைப் பயணத்தில் அவர் எத்தனை எத்தனை ஏமாற்றங்களை எதிர்கொண்டிருப்பார் என்பது தெரிகிறது. 

சத்தீஸ்கர் மாநிலம் "பஸ்தர்' பகுதிக்கு நான் பலமுறை பயணித்திருக்கிறேன் என்பதால் அதுகுறித்த அவரது பதிவுகளை ரசித்துப் படித்தேன். அதேபோலத்தான் அவரது ஒடிஸா மாநிலப் பயணமும்.

புவனேஸ்வர் அருகே உள்ள புஷ்பகிரி, ரத்தினகிரி, லலிதகிரி ஆகிய மூன்று குன்றுகள் குறித்து மிகவும் தெளிவாக அவர் பதிவு செய்திருக்கிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பு நானும் பாவை சந்திரனும் "புதிய பார்வை' இதழின் ஒடிஸா சிறப்பிதழுக்காக இங்கெல்லாம் பயணித்தது நினைவுக்கு வந்தது. 

குகைகள் குறித்த பதிவாக மட்டும் இல்லாமல் அந்தந்த மலைப்பகுதிகளில் வாழும் பல்வேறு பழங்குடியினர் குறித்த பதிவாகவும் அமைந்திருக்கிறது ஜெயமோகன் எழுதியிருக்கும்  "குகைகளின் வழியே' என்கிற  பயண நூல். 
அவர் கூறியிருப்பது போல குகைகளின் வழியே'  எங்கோ புதைந்து சென்றுகொண்டே இருக்கும் ஒரு சுகானுபவத்தைத் தருகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் தனது புத்தகத்தில் எழுதியிருக்கும் கடைசி வரிகளைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை. எனது உணர்வும் அதுவே -
""ஒவ்வொரு பயணம் முடியும்போதும் தோன்றுவதுதான், இன்னும் இப்படி எத்தனை பயணங்கள் சென்றால் இந்த மண்ணை அறியமுடியும்? அதற்கு எத்தனை ஆயுள் தேவை!''  


"தினமணி'யின் இணைப்பான இளைஞர் மணியில் த.ஸ்டாலின் குணசேகரன் எழுதிவந்த "இளைய பாரதமே எழுக!' என்கிற கட்டுரை தொடர் இப்போது "விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்' என்கிற பெயரில் புத்தக வடிவம் கண்டிருக்கிறது. இந்தப் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியவர்களில் நானும் ஒருவன். மதிப்புரைக்கு வந்திருந்த புத்தகத்தை எடுத்துப் புரட்டினேன்.  நான் எழுதிய அணிந்துரையை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க விரும்பினேன், படித்தேன்.

ஏற்கெனவே தொடராக வெளிவந்தபோது வாரம்தோறும் படித்ததுதான். அணிந்துரை எழுதுவதற்காக மீண்டும் ஒரு முறை படித்தேன். இப்போது புத்தக வடிவில் அதைக் கையில் எடுத்தபோது மீண்டும் படிக்காமல் கீழே வைக்கத் தோன்றவில்லை. அதற்குக் காரணம், இது என் மானசீக குருநாதர் சுவாமி விவேகானந்தர் குறித்த புத்தகம் என்பதும், ஸ்டாலின் குணசேகரனின் பேச்சாலும் எழுத்தாலும் கவரப்பட்ட ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதும்தான். 

இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் எந்த அளவுக்குப் பின்புலமாக இருந்திருக்கின்றன என்பதை ஆய்வு நோக்கோடும், தக்க ஆதாரங்களுடனும் எடுத்துச் செல்லும்  முயற்சிதான் "விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்'
என்கிற இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
ஒருபுறம், இந்தப் புத்தகம் விவேகானந்தரின் ஆன்மிகப் பயணத்தைப் பதிவு செய்கிறது. இன்னொரு புறம், அவரது ஆன்மிகப் பயணத்துடன் இந்தியாவின் விடுதலை வேட்கையும் எப்படி இணைந்து நடைபோட்டது என்பதை எடுத்தியம்புகிறது. இதற்கிடையே நிலத்தடி நீரோட்டம் போல, இளைய பாரதத்தின்  வருங்கால மேன்மைக்கும் அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டவும் பல செய்திகளை மிகவும் அழுத்தமாக சொல்லிச் செல்கிறது இந்தப் புத்தகம். 

""தனது சொல்லால் இந்திய இளைஞர்களை செயலில் இறக்க முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் சுவாமி  விவேகானந்தர். இது அவரது சொல்லாற்றலினால் மட்டும் விளைந்ததெனக் கொள்ள இயலாது. தனது உயிரையே உருக்கி அவற்றை  உரையாக்கியதால் கிடைத்த விளைச்சல்'' என்கிற ஸ்டாலின் குணசேகரனின் கருத்தை மறுக்க இயலாது. இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருக்கும் குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளாரைவிட சிறப்பாக "விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்' புத்தகம் குறித்து வேறு எவராலும் எடைபோட முடியாது. அவரது பதிவு இது - ""சுவாமி விவேகானந்தர் என்ற ஆன்மிக இமயத்தை இளைய தலைமுறை உள்வாங்கிக் கொள்ளும் வண்ணம் தம் அற்புத எழுத்தாற்றலால், சிந்தனையால், செயலாற்றலால் செதுக்கிய எழுத்துச் சிற்பி திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் எழுத்தாற்றலைப் பாராட்ட வார்த்தைகள் வசப்படவே இல்லை''


எப்போதோ வெளிவந்த "மாதவம்' என்கிற மாத இதழ் இப்போது என் கையில் கிட்டியது. அதில்  கண்ணில் பட்ட கவிதை இது. அரவிந்த் என்பவர் எழுதியது. 
அதிக கிளைகள் கொண்ட
அதிநவீன கடை
உள்ளே இருந்தவையோ
பிளாஸ்டிக் குருவிகள்!

More from the section

அணியரங்கர் நடத்தும் (அ)நீதி!
இந்த வாரம் கலாரசிகன்
விருந்தில் பாயசம்
திருவிருத்தப் பாசுர உரையில் மெய்ப்பாட்டியல்
மேலோர் இயல்பு