செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

கவி பாடலாம் வாங்க - 41

By "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன்| DIN | Published: 09th September 2018 03:06 AM

8. வெண்பா இனம் (2)
வெண்டாழிசை
மூன்று அடிகளை உடையதாய் முதல் இரண்டும் நாற்சீரடிகளாகவும், ஈற்றடி வெண்பாவைப் போல முச்சீர் அடியாகவும் நிற்பது வெண்டாழிசை ஆகும். இதனை வெள்ளொத்தாழிசை என்றும் கூறுவது உண்டு. 
"நண்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவு செய்யார்
அன்பு வேண்டு பவர்'
இது வெண்டாழிசை வெண்டளை பிறழாமல் இச்செய்யுள் வந்திருந்தால் சிந்தியல் வெண்பாவாகும். அப்படி வாராமையால் இது வெண்டாழிசையாயிற்று.
சிந்தியல் வெண்பா ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கி வந்தால் அதையும் வெள்ளொத்தாழிசை என்று சொல்வதுண்டு.
"அன்னாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
ஒன்னா ருடைபுலம் போல நலங்கவர்ந்து
துன்னான் துறந்து விடல்'
"ஏடீ அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
கூடா ருடைபுலம் போல நலங்கவர்ந்து
நீடான் துறந்து விடல்'
"பாவாய் அறங்கொல் நலங்கிளர்சேட்சென்னி
மேவார் உடைபுலம் போல நலங்கவர்ந்து
காவான் துறந்து விடல்'
இந்த மூன்றும் ஒரு பொருளை மூன்று வேறு வகையில் சொல்வதால் ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கி வந்தன. இம் மூன்றும் இணைந்து ஒரு வெள்ளொத்தாழிசையாக அமைந்தன.
வெண்டுறை
மூன்று அடி முதல் ஏழடி வரையில் உடையனவாய், பின் உள்ள சில அடிகள் சில சீர்குறைந்து வருவன வெண்டுறை ஆகும். எத்தனை சீராலும் அடிகள் அமையலாம். அடிகள் யாவும் ஒரே ஒலியாக வந்தால் ஓரொலி வெண்டுறை என்றும், சீர் குறையும் பின்னடிகள் வேறு ஒலியாக வந்தால் வேற்றொலி வெண்டுறை என்றும் பெயர் பெறும்.
"குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட்
குலைமேற் பாய
அழலெரியின் மூழ்கினவால் அந்தோ அளியவென்
றயல்வாழ் மந்தி
கலுழ்வனபோல் நெஞ்சழிந்து கல்லருவி தூஉம்
நிழல்வரை நன்னாடன் நீப்பானோ அல்லன்'
இது நான்கடியாய், ஈற்றடி இரண்டும் இரண்டிரண்டு சீர்குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.
"தாளாளர் அல்லாதார் தாம்பல ராயக்கால்
என்னா மென்னாம்
யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்
பீலிபோற் சாய்த்துவிடும் பிலிற்றி யாங்கே'
இது மூன்றடியால் வந்து, ஈற்றடி இரண்டும் இரண்டிரண்டு சீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.
"முழங்குதிரைக் கொற்கைவேந்தன் முழுதுலகம் புரந்தளித்து
முறைசெய் கோமான்
வழங்குதிறல் வாள்மாறன் மாச்செழியன் தாக்கரிய
வைவேல் பாடிக் 
கலங்கிநின் றாரெலாம் கருதலா காவணம்
இலங்குவா ளிரண்டினா லிருகைவீ சிப்பெயர்ந்
தலங்கன்மா லையவிழ்ந் தாடவா டும்மிவள்
பொலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்துநின் றாரெலாம்
விலங்கியுள் ளந்தப விளிந்துவே றாபவே'
இது ஏழடியாய் முதல் இரண்டடியும் ஆறு சீராய் ஓரோசையுடையனவாய், பின்புள்ள ஐந்தடியும் நாற்சீராய் வேற்றோசையாய் வந்த வேற்றொலி வெண்டுறை. ஈற்றடி ஒரு சீர் குறைந்து வருவதும் வெண்டுறையின் பாற்படும். 
"வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும்
உறவுற வரும்வழி உரைப்பன உரைப்பன்மன்
செறிவுறு தகையினர் சிறந்தனர் இவர்நமக்
கறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின்
பிறபிற நிகழ்வன பின்'
இது ஐந்தடியாய் இறுதி அடி ஒரு சீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை. 
(தொடர்ந்து பாடுவோம்...)
 

More from the section

நற்றிணை காட்டும் நற்பண்புகள்
இந்த வாரம் கலாரசிகன்
வெறியாட்டு
"தமிழ்த் தாத்தா'வைப் போற்றும் இலக்கியங்கள்!
 சான்றோர்தம் நட்பு