திங்கள்கிழமை 18 பிப்ரவரி 2019

மகாகவி பாரதியின் நிர்வாக இயல்!

DIN | Published: 09th September 2018 03:05 AM

ஒரு நிர்வாகம் எப்படிச் செயல்பட வேண்டும்; அதிலும், ஒரு தேச நிர்வாகம், தேசிய செயல்பாடு, அதை நிர்வகிப்பவர்கள், அதில் செயல்படுபவர்களின் தரம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதை மகாகவி பாரதியார் சொல்கின்ற விதத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
 "கண்ணன் என் ஆண்டான்' என்கிற அதி அற்புத நுண்ணிய விறுவிறுக் கவிதை. துப்புரவுத் தொழிலாளர், கல்வியாளர்கள், காவல் துறையினர், வானிலை அறிவுறுத்துபவர்கள்; கடந்த - நிகழ்- எதிர் காலங்களுக்கான சிந்தை செயல்திறம் மிகுந்த ஆலோசனையாளர்கள், தோள்கொடுத்து நிற்கும் களப் பணியாளர்கள்; திட்டமிடுபவர்கள், அதை எல்லா நிலை அலுவலர்களுக்கும் மக்களுக்கும் எடுத்துச் சொல்பவர்கள், நன்மை - நலம் தரும் திட்டங்களை, செயல்பாடுகளைப் பிரபலப்படுத்தி எல்லா நிலையினருக்கும் விளம்பரமாகக் கொண்டு சேர்ப்பவர்கள்; வனத்துறையினர், கால்நடை, ஆகாய, நீர் வள, கடல்வளத் துறையினர்;
 நிதி நிர்வாகிகள், நேர்மைக் காவலர்கள், சமுதாயப் பங்கீடு செய்பவர்கள்; அதிரடிகளுக்கு அஞ்சாத வீர தீரர்கள்; நுண்ணிய ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ, பொறியியல், உணவியல், உளவியல், அழகியல் பணியாளர்கள்; கலைகள் பல வளர்ப்பவர்கள், சுற்றம் பேணுபவர்கள், சுகாதாரம் காப்பவர்கள்; நட்பும் நேசமும் நிலைநாட்டுபவர்கள், மானம் காப்பவர்கள், பழைமையின் புரவலர்கள், புதுமையாளர்கள்; அத்தனையிலும் தன்னைக் கண்டவர்களாய் ஒருங்கிணைப்பவர்கள் - என்று எத்தனையோ வித விதமானப் பணியாளர்கள்!
 பணியாளர்கள், ஒரு சமுதாயத்தில் எத்தனை நிலையினர், அவர்களது கடமை என்ன, திறமைகள் என்ன, செயல்திறம் எப்படியிருக்க வேண்டும்; மனப்பாங்கு எப்படியிருக்க வேண்டும்; ஊதியம் எப்படிப் பெற வேண்டும், ஒருவேளை ஏதாவது அதிகப்படியான ஊதியம் பொருளாகவோ, வேறு வடிவிலோ வருகிறது என்றால், அந்தப் பணியாளர் அதை எப்படிக் கையாள வேண்டும்;
 தன் பணியில் வெறுமனே ஈடுபாடு கொண்டவராக மட்டும் செயல் புரியாமல், சமுதாயச் சிந்தனை உள்ளவராக எப்படித் திறம்படச் செயல்பட வேண்டும்; வரும்முன் காப்பவராக முன் நடவடிக்கை எடுப்பவராக எப்படிச் செயல்புரிய வேண்டும், ஆபத்துதவியாக எந்தத் திறனில் செயல்புரிய வேண்டும்; "நேசம் காப்பவராக, வெடிப்புறப் பேசுபவராக, பணி எனும் தவத்தினை நிதம் புரிபவராக, அன்பு வழியில் அறம் வளர்ப்பவராக' எப்படி எதார்த்தமாக செயல்பட வேண்டும்; இத்தனை வீர தீர சூரராகத் திகழும்போதும், சாதாரண எளிய அடித்தட்டு மக்களைக்கூட எளிதில் அணுகும் இயல்பினராக எப்படிப் பணிபுரிய வேண்டும்; தனது முதலாளிக்கு, தலைமைக்கு எப்படி உண்மையாகத் திகழ வேண்டும்; அந்தத் திகழ்வினில் தலைமைக்கும், மக்களுக்கும் நேர்மையான வழிகாட்டுபவராக எவ்விதம் நடத்திக்காட்ட வேண்டும்;
 எத்தனை நேர்மையுடனும் திறமையுடனும் வல்லமையுடனும் செயல்பட்டாலும், ஒருவேளை தவறு விளைந்துவிட்டால், அந்தத் தவறுக்குத் தானே பொறுப்பு ஏற்பவராக, அந்தத் தவறுக்குத் தண்டனை பெறவும் துணிந்தவராக, தனக்குத்தானே தண்டனை தீர்ப்பளித்துக் கொள்பவராக, அந்தத் தண்டனையை நிறைவேற்றுமாறு தன்னுடைய தலைமையை நிர்ப்பந்திப்பவராக எவ்விதம் நடக்க வேண்டும்;
 சமுதாயத்தின் பல்வேறு அடுக்குகளில் பல்வேறு நிலைப்பட்ட மக்களுக்கும் எந்தெந்த விதத்தில் ஆதாரமானவராக, ஓய்தலின்றி சலிப்பின்றி உத்வேகத்துடன் முழு அன்புமய - ஆனந்த ஈடுபாட்டுடன் விறுவிறுப்பாக உற்சாகத்துடன் செயல்பட வேண்டும்;
 இறையுணர்வு தலைமைக் கீழ் மன நிறைவுடன், அந்த நிறைவின் செருக்குடன், அர்ப்பணிப்பு உணர்வுடன் எப்படித் தன்னை வடிவமைத்துச் செயல்பட வேண்டும்; அப்படிப்பட்டவர்களின் தலைமை அதாவது, முதலாளி எப்படி ஒரு தெய்வீகத் தன்மையாளனாகத் திகழ முடியும் - என்பதையெல்லாம் பளீரென்று எளிமையாக, அழுத்தம் திருத்தமான, வலிமையாக, ஒரே பாடலில் மகாகவி பாரதியார் சந்தப்படுத்திப் பாடிச் சொல்லும் விதம் பிரமிக்க வைக்கிறது.
 மேலும், தனக்குக் கூலியாக, சம்பளமாக, ஊதியமாகக் கிடைப்பது மிகவும் குறைவுதான் என்றாலும், தனது வாழ்வாதாரத்தை அது ஏதோ நிரப்புகிறது என்ற அளவிற்குதான் இருக்கிறது என்றாலும், தனது பணிகளுக்காகத் தனக்குக் கிடைக்கும் கூடுதல் வருமானங்களை, தனது தலைமையாளன் மூலமாகவே அவை கிடைக்கப்பெற்று, அதைத் தனது சுயநலத்திற்காக உபயோகப்படுத்தாமல், பொதுநலத்திற்கு வாரி வழங்கும் உன்னதமான லட்சியச் செயல்பாட்டினையும் பாரதியார் வடிவமைக்கிறார்.
 ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு நிலையிலும், நாம் ஆட்சியாளர், நிர்வாகி, பணியாளர் எனும் சங்கம உணர்வு; ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு களத்திலும், ஒவ்வொரு பணியிலும் தன்னையே ஐக்கியமாக்கி, செறிவான சிந்தனைச் செயல் விளக்கம்.
 இந்த மனநிலையின் களத்தில், இந்த அணுகுமுறைக் களத்தில், இனி தொடர்ந்து " கண்ணன் என் ஆண்டான்' பாடலை முழுவதும் அனுபவித்து ஆனந்தம் அடையலாம். அவற்றுள் சில வரிகள் வருமாறு:
 "தஞ்ச முலகினில் எங்கணு மின்றித்
 தவித்துத் தடுமாறி,
 பஞ்சைப் பறையின் அடிமை புகுந்தேன்,
 பார முனக்காண்டே!
 ஆண்டே! - பார முனக்காண்டே!
 துன்பமும் நோயும் மிமையுந் தீர்த்துச்
 சுகமரு ளல்வேண்டும்
 அன்புடன் நின்புகழ் பாடிக் குதித்துநின்
 ஆணை வழிநடப்பேன்!
 ஆண்டே! - ஆணைவழி நடப்பேன்!
 
 காடு கழனிகள் காத்திடுவேன்-நின்றன்
 காலிகள் மேய்த்திடுவேன்!
 தோட்டங்கள் கொத்திச் செடிவளர்க் கச்சொல்லிச்
 சோதனை போடாண்டே!
 காட்டு மழைக்குறி தப்பிச்சொன் னாலெனைக்
 கட்டியடி யாண்டே!
 ஆண்டே! - கட்டியடி யாண்டே!
 இப்படி இந்த அடிமை விண்ணப்பமாய் அடுக்கும்போது, நமக்குள் ஓர் ஏக்கம் எழுகிறது. இப்படி ஒருவர் நம்முடன் இருந்தால், நமக்கு என்ன கவலை? தோல்வி எப்படி வர முடியும்?
 பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்
 பிழைத்திட வேண்டுமையே!
 அண்டை யயலுக்கென் னாலுப காரங்கள்
 ஆகிட வேண்டுமையே!
 உபகாரங்கள் - ஆகிட வேண்டுமையே!
 மானத்தைக் காக்கவோர் நாலுமுழத்துணி
 வாங்கித் தரவேணும்!
 தானத்துக் குச்சில வேட்டிகள் வாங்கித்
 தரவுங் கடனாண்டே!
 சில வேட்டி - தரவுங் கடனாண்டே!
 என் மானத்தைக் காப்பதற்கு எனக்கு ஒரே ஒரு நாலுமுழத் துணி போதும். மேலும், எனக்கு சில வேட்டிகள் வேண்டும். ஆமாம் ஆண்டே... அது ஒரு கடன், அது ஒரு கடமை. ஆம், அதுதான் "தானம் என்கிற கடமை'. தானம் செய்வதற்காகக் கூடுதலாக வேட்டிகள் எனக்கு நீ தரவேண்டும் என்கிறார்.
 மேற்குறித்த வரிகளில் மகாகவி பாரதி ஒரு தனிமனித தர்மத்தை, ஒரு சமுதாய லட்சியத்தை நம்முள் பதியவைத்துவிட்டார் என்றே கூறலாம்.
 -சக்தி முரளி
 
 
 

More from the section

நற்றிணை காட்டும் நற்பண்புகள்
இந்த வாரம் கலாரசிகன்
வெறியாட்டு
"தமிழ்த் தாத்தா'வைப் போற்றும் இலக்கியங்கள்!
 சான்றோர்தம் நட்பு