திங்கள்கிழமை 18 பிப்ரவரி 2019

செங்கையின் சக்தி!

DIN | Published: 07th September 2018 11:00 AM

செங்கல்பட்டு மாவட்டத்தின் வெள்ளைக்கார கலெக்டர் தனக்கு பிரதான அலுவலகம் அருகே கலெக்டர் பங்களா கட்ட குறுக்கே நின்ற சக்திவிநாயகர் திருக்கோயிலை அகற்றும் உத்தரவில் கையொப்பம் போட்டுவிட்டு வீட்டிற்குச் சென்று கண்ணயர்ந்தார். யானை ஒன்று கனவில் பிளிறிக்கொண்டு முட்ட வந்து மிரட்டிவிட்டு மறைந்து போனது. கனவு கண்ட கலெக்டர் ஜோதிடர் ஒருவரிடம் பலன் கேட்டதில் விநாயகருக்கு எதிராக எந்த செயல் செய்வதாக இருந்தாலும் நிறுத்தக் கூறினார். உடனே தன், முன் உத்தரவை நிறுத்தி கலெக்டர் பங்களாவை தொலைவில் கட்டச் சொன்னார். அதோடு தினமும் விநாயகரை வணங்கிவிட்டு செல்லும் வழக்கத்தை மேற்கொண்டார்.
 சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் வியாபாரி ஒருவர் தனது மிளகு மூட்டைகளுடன் வடநாட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். ஒரு பகல் பயணத்தில் வணிகர் செங்கழுநீர்பட்டு என்னும் ஊரில் மலைகள் சூழ்ந்த மரம் அடர்ந்த வனத்தைக் கடந்து கொண்டிருந்தார். வழியில் கள்வர்கள் அவரைச் சூழ்ந்தனர். பயத்தில் "கடவுளே காப்பாற்று!' என இறைவனை வேண்டினார்.
 எதிர்பாராமல் திடீரென்று யானையொன்று அங்கு வந்து ஆரவாரஞ்செய்தது. அருகிலிருந்த மணற்குன்றை குத்தி கிளப்பி அனைவரையும் விரட்டியது. பயங்கொண்ட திருடர்கள் நாற்புறமும் சிதறியோடினர். மேடிட்டிருந்த மணற்குன்று கரைந்து புதையுண்டிருந்த ஒரு விநாயகப் பெருமானின் சிலா ரூபம் வெளிப்பட்டது. யானையும் ஓடி மறைந்தது. நடந்த நிகழ்ச்சியைக் கண்ட வணிகர் மெய்சிலிர்த்து பெருமகிழ்வுற்றார். கிடைத்த லாபத்தில் பெரும் பகுதியைத் தன்னைக் காத்தருளிய ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கென ஒரு திருக்கோயிலை கட்டுவித்து மக்கள் வழிபாடு செழிக்கச் செய்தார்.
 தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கும் விதமாக ஸ்ரீசக்திவிநாயகப் பெருமானின் சந்நிதியுள்ளது. முக்கியமாக, சதுர்த்தி, திங்கள்கிழமைகளில் இத்தல விநாயகரை வணங்குவது சிறப்பு. திருச்சுற்றில் முதலில் நவக்கிரகச் சந்நிதியும் அருகில் வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி சந்நிதியும் உள்ளன. இவரை, கிருத்திகை, செவ்வாய்கிழமை, சஷ்டி திதிகளில் உபவாசம் இருந்து வணங்கினால் கல்யாணத் தடைகள் விலகுகிறது.
 இவ்வாலயம், செங்கல்பட்டு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் ஜி. எஸ். டி சாலையில் அமைந்துள்ளது.
 தொடர்புக்கு: 0442743 1291/ 93400 91600.
 - செங்கை பி.அமுதா

More from the section

நிகழ்வுகள்
அயலகத்தாரோடு நயத்தகு நட்பு
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
வேலைக்கு வழிகாட்டும் வீரட்டேஸ்வரர்!
வெப்பநோய் நீக்கும் வேதநாதர்!