வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

பொருநை போற்றுதும்! 6 - டாக்டர் சுதா சேஷய்யன்

DIN | Published: 07th September 2018 11:00 AM

இப்போதைய தண்பொருநை, அதாவது தாமிரவருணி, பொதிகை மலையில் (மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவு), கடல்மட்டத்திலிருந்து சுமார் 5659 அடி உயரத்தில் பிறக்கிறாள். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அசம்பு மலைகளில் அசைந்தாடித் தொடர்கிறாள். அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, ஹரிகேசநல்லூர், வீரவநல்லூர், காருகுறிச்சி, சேரன்மாதேவி, அரியநாயகிபுரம், சுத்தமல்லி, திருநெல்வேலி, மருதூர், மணற்கரை, ஆதிச்சநல்லூர், ஸ்ரீ வைகுண்டம், ஆழ்வார் திருநகரி என்று ஊர்கள் பலவற்றின் வழியோடி, (ஆற்றூர்) ஆத்தூர்- புன்னைக்காயல் பகுதியில் கடலோடு சங்கமிக்கிறாள். மலைப் பகுதிகளில் இவள் ஓடிவரும்போதே, பேயாறு, உள்ளாறு, பாம்பாறு, கீரியாறு ஆகிய நதிகள் இவளோடு கலக்கின்றன. கரையாறு நீர்த்தேக்கப் பகுதியில் கரையாறும் கலக்கிறது. தொடர்ந்து, வாணதீர்த்த அருவியாக 130 அடி கீழே பாய்பவள், பாபநாசப் பகுதியை அடைகிறாள். பாபநாசத்தை இவள் அடையும்போது, சேர்வலாறு சேர்ந்துவிடுகிறது. பாபநாச மலைகளிலிருந்து கல்யாண தீர்த்தமாகவும் அகத்தியர் அருவியாகவும் சுமார் 90 அடி கீழே சரிகிறாள்.
 பாபநாசத்திலிருந்து கிழக்கு முகமாகச் சமவெளிகளில் ஓடத் தொடங்குகிற தாமிரவருணியோடு, கல்லிடைக்குறிச்சிக்கு அருகே, மாஞ்சோலை மலைகளில் தொடங்கும் மணிமுத்தாறு வந்து இணைகிறது. திருப்புடைமருதூரை அடையும்போது கடனா நதி வந்து கலக்கிறது. இதற்கு முன்பாகவே, வராக நதி, ராம நதி, ஜம்பு நதி, கல்லாறு, கருணையாறு போன்றவை, கீழாம்பூர் பகுதியில் கடனா நதியில் சேர்ந்துவிடுகின்றன. களக்காட்டில் உற்பத்தியாகும் பச்சையாறு, தருவையில் வந்து தாமிரவருணியோடு இணைகிறது.
 திருநெல்வேலி பாளையங்கோட்டை இடைபுகுந்து ஓடிவரும் தாமிரவருணித் தாய், சீவலப்பேரிக்கு அருகே சிற்றாற்றைச் சந்திக்கிறாள். குற்றால மலைகளில் தோன்றி, குண்டாறு, அனும நதி, கருப்ப நதி, அழுதகண்ணி ஆறு ஆகிய நீரோடைகளைத் தன்னோடு சேர்த்து கொண்டுவரும் சிற்றாறுதான், தாமிரவருணியின் மிக முக்கியமான கிளைநதி எனலாம். சித்திரா நதி என்றும் சித்தாறு என்றும் வழங்கப்படுவது சிற்றாறுதான்.
 தாமிரவருணி நல்லாள் உற்பத்தி ஆவது, பெரும் பொதிகை என்றழைக்கப்படுகிற பொதிய மலையில் ஆகும். பொதியில், சிவஜோதிப் பர்வதம், தென் கைலாயம், அகத்தியர் மலை, பொதலேகா போன்ற பெயர்களாலும் வழங்கப்படுகிற பொதிகை, மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் தென்பகுதியான அசம்பு மலைகளில் உள்ள உயர்சிகரமாகும். சுமார் 1866 மீட்டர் உயரமுள்ள இதன் வடிவமைப்பு, திபெத்- மானசரோவர் கைலாய மலையமைப்பை ஒத்திருக்கிறது. சுற்றிலும் உள்ள மலைகளும் குன்றுகளும், மலைத் தொடர்களாக, அதாவது, அலை அலையான அமைப்பைக் கொண்டிருக்க, பொதிகை மட்டும் (வடக்கே கைலாயம் போல்), முக்கோண வடிவில் தனித்தோங்கி நிற்கிறது. மேற்கில் திருவனந்தபுரத்திலிருந்தும் கிழக்கில் பாளை அம்பாசமுத்திரப் பகுதிகளிலிருந்தும் இந்த வடிவமைப்பைத் தெளிவாகக் காணலாம். கிரேக்கர்களால் "பெட்டிகோ' (பொதிகை என்பதன் மரு) என்றழைக்கப்பட்ட இம்மலை, "மலையம்' என்றேகூட குறிக்கப்படுகிறது. தென் மலையான இங்குப் புறப்படும் காற்று, "தென்றல்' ஆனது; தென்றலுக்கு, வடமொழியில் "மலையமாருதம்' என்று பெயர் (மலைய + மாருதம்=காற்று).
 அகத்தியர் அகம்கொண்ட பொதியம்
 இந்த மலையில்தான் அகத்தியர் நிரந்தர வாசம் செய்வதாகக் கருதப்படுகிறது. "பொதிந்து' என்றால், "உள்ளுறை' என்றும் "மறைவாக' என்றும் பொருள்கள் உண்டு. அகத்தியரும் சித்தர்கள் பலரும் இம்மலைமீதும் இதன் குகைகளிலும், உலகப் பார்வையிலிருந்து மறைந்து வாழ்வதால், இப்பெயர் போலும்! இப்போதும்கூட, அகத்தியர் அவ்வப்போது இங்கு உலவுவதாகவும், மகாஞானிகளின் கண்களுக்கு மட்டும் புலப்படுவார் என்றும் சொல்கிறார்கள். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலங்களில், வ வே சு ஐயர் இம்மலைக் காடுகளில் அகத்தியரோடு உரையாடினார் என்றும் கூறுகிறார்கள்.
 இம்மலைமீதுதான், சிவபெருமான் தமிழ் மொழியை வெளியிட்டு, அகத்தியரிடம் தந்தாராம். தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்திய மாமுனி, தம்முடைய மாணாக்கரான தொல்காப்பியருக்கு அதனைக் கற்றுக் கொடுத்த இடமும் இதுவே. அகத்தியருக்கு இங்கொரு கோயில் இருந்ததாகப் பண்டைய தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
 வீரசோழியம் உள்ளிட்ட பெüத்தத் தமிழ் நூல்கள் சில, அவலோகிதேஸ்வரர் என்னும் போதிதருமரிடத்தில் அகத்தியர் தமிழ் கற்றதாகக் குறிப்பிடுகின்றன. சீனப் பயணி ஸுவான்ஸாங், பொதல மலையுச்சியில் அவலோகிதேஸ்வரருக்குக் கோயில் இருந்ததாக எழுதுகிறார். தேராவாத பெüத்த நூல்கள், அவலோகிதேஸ்வரரைப் "பொதலகிரிநிவாசி' என்றே விவரிக்கின்றன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வாழ்ந்தவரும், சிலப்பதிகார மணிமேகலை இரட்டைக் காவியங்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தவருமான ஷு ஹிகோஸகா என்னும் அறிஞர், கீழுள்ள உலகைப் பார்த்தபடி நின்ற கடவுள், மீண்டும் வானோக்கிக் காற்றில் மறைந்த இடம் பொதிகை மலையுச்சியே என்றும் அவலோகிதேஸ்வரரின் உறைவிடமாகப் போற்றப்படுவதும் இதுவே என்றும் உறுதிப்படுத்துகிறார்.
 தாமிரவருணியின் பெயருக்கு, அறிவியல்ரீதியான காரணம் ஒன்றும் உண்டு. இந்நதியின் நீரில் செப்பு, அதாவது தாமிரம் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதனாலேயே, ஆற்றின் சில இடங்களில், லேசான செம்மை நிறம் தென்படுகிறது. தாமிரவருணியின் தனிச் சுவைக்கும் (திருநெல்வேலி அல்வாவின் தனிச் சுவைக்கும்தான்) இதுவே காரணம் என்கிறார்கள்.
 தாமிரத்துக்கும் தாமிரவருணிக்குமான தொடர்பில் இன்னுமொரு சுவாரசியம் உண்டு. தாமிரவருணிக் கரையில், திருநெல்வேலியில், தாமிர சபையில் (செப்பம்பலம்), நடராஜப் பெருமான் ஆனந்தத் திருநடனம் ஆடுகிறார். சிவப் பரம்பொருளின் பஞ்ச சபைகளில் ஒன்றான இங்கு, நடராஜர் ஆடுவது முனி தாண்டவம் அல்லது காளிகா நடனம். இது "படைத்தல்' (சிருஷ்டி) தொழிலுக்கான நடனம். மானுட இனம் பெருமளவில் பயன்படுத்திய முதல் உலோகம், தாமிரமே ஆகும்.
 தாமிரவருணி என்னும் தமிழ்த் தொட்டில்
 தமிழின் ஊற்றுக்கண்ணாகப் போற்றப்பெறுகிற தாமிரவருணிக் கரைக்குப் புலவர்களோடும் தமிழோடும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு உண்டு. மாறோக்கத்து நப்பசலையார், வெள்ளூர்க் காப்பியனார், பனம்பாரனார் போன்ற பண்டைக் கால புலவர்களும், அதிவீரராம பண்டிதர், நன்னூல் உரையாசிரியரான சங்கர நமசிவாயர், மயிலேறும் பெருமாள் பிள்ளை போன்ற இடைக்காலத்தவரும், மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர், திருநெல்வேலி நெல்லையப்பப் பிள்ளை, சிவஞான முனிவர், விக்கிரமசிங்கபுரம் நமச்சிவாயக் கவிராயர், முத்தாலங்குறிச்சி கந்தசாமிப் புலவர், வேணுவன புராணம் பாடிய அருணாசலக் கவிராயர் போன்ற பிற்காலத்தவரும், நெல்லையப்பன் கவிராயர், குட்டிக் கவிராயர், சுப்பிரமணிய பாரதியார், கா.சு.பிள்ளை, வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், டி. கே. ராமானுஜக் கவிராயர், ஆசுகவி அழகிய சொக்கநாதப் பிள்ளை, வையாபுரிப் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, தொ.மு.சி.ரகுநாதன், ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார், ஜே.ஆர்.ரங்கராஜு, வல்லிக்கண்ணன், தி.க.சிவசங்கரன், மீ.ப.சோமசுந்தரம் (சோமு), ர(வணசமுத்திரம்). சு.நல்லபெருமாள், சு.சமுத்திரம், கல்யாண்ஜி என்னும் வண்ணதாசன், க.ப.அறவாணன், வண்ணநிலவன் போன்ற நவீன காலத்தவரும் பொருநைக் கரையின் புதல்வர்களேயாவர். புதுமைப்பித்தனின் சொந்த ஊரும் திருநெல்வேலியே ஆகும்.
 - தொடரும்

More from the section

கல்லுவயல் ஸ்ரீகண்டீஸ்வரர்!
ராகு - கேது பகவான்கள் தோன்றிய வரலாறு!
ஆழ்வார்திருநகரி மாசி தீர்த்தவாரி!
குண்டனி சக்தி அருளும் குண்டலீஸ்வரர்!!
பொருநை போற்றுதும்! 29 - டாக்டர் சுதா சேஷய்யன்