சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

"எந்தரோ மகானுபாவுலு..!'

DIN | Published: 18th January 2019 03:36 PM

 

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் ஸத்குரு ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் திருவாரூரில் பிறந்து திருவையாறில் வசித்தவர். ஸ்ரீ வால்மீகியின் அவதாரமென்று கருதப்படுபவர். நாரதர் இவர் கனவில் தோன்றி "ஸ்வரார்ணவம்' என்ற கிரந்தத்தை அளித்தார். 96 கோடி ராமநாம ஜபம் செய்து ஸ்ரீராமபிரானை ப்ரத்யக்ஷயமாக பார்த்தவர். "ராம' என்ற இரு அக்ஷரங்களை நினைத்து விட்டால் வேறு ஒன்றும் அவர் மனதில் தோன்றவே தோன்றாது. எளிய உஞ்சவிருத்தி வாழ்க்கையை மேற்கொண்டு ஸ்ரீராமனின் புகழ்பாடும் கீர்த்தனங்களை இயற்றினார். பலவித கர்நாடக சங்கீத ராகங்களினால் மாலை தொடுத்து சங்கீதத்தினால்தான் பகவானுக்கு இவர் செய்யும் ஆராதனை, அவருடைய எல்லா கிருதிகளுமே அழகு. அவருடைய ஸ்மரணத்தின் கற்பனைகளுக்கு எல்லையே இல்லை. இவருடைய கீர்த்தனங்கள் உலகில் இவர் காலத்திலேயே பிரஸித்தி அடைந்தன.

இவருடைய ஆழ்ந்த ராம பக்தியையும், இசைப்புலமையையும் கேள்வியுற்று பல ஊர்களிலிருந்து பல சங்கீத மேதைகள் இவரைக்காண திருவையாறுக்கு வந்து சென்றனர். அப்படிவந்தவர்களில் ஒருவர், கேரள மாநிலத்தில் ராமமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த "கோவிந்த மாரார்' என்ற சிறந்த நாதயோகி. இவர் இசையில் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்கினார். பல்லவியை ஆறுகாலங்களில் அனாயசமாகப் பாடுபவராகத் திகழ்ந்ததால் "ஷட் கால கோவிந்த மாரார்' என்று அழைக்கப்பட்டார். திருவாங்கூர் சமஸ்தானத்தின் முக்கிய வித்வானாக இருந்தார்.  "தனக்கு ராமபக்தியை விட உயர்ந்த பதவி உலகத்தில் வேறு என்ன இருக்கிறது?" என்ற வைராக்யத்துடன் வாழ்ந்தவர். தியாக பிரம்மத்தைக் காண கோவிந்தர் மிகவும் ஆவல்கொண்டு திருவையாறுக்கு ஒரு சமயம் வந்தார்.

கோவிந்தமாரார் வந்த சமயத்தில், ஸ்ரீ தியாக பிரம்மம் கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி இருந்தார். புகழ்பெற்ற வித்வான் மாராரைக் கண்டதும் தியாகராஜருடைய சீடர்களுக்கு வியப்பும், பரபரப்பும் உண்டாயிற்று. அதே சமயம் தங்களது குருவின் தியானத்தின் இடையே குறுக்கிடவும் பயம் ஏற்பட்டது. சற்றுநேரத்தில் தியானம் கலைந்த தியாகராஜர், மாரார் காத்திருப்பதை அறிந்து அவரைக் காக்க வைத்ததற்காக சீடர்களைக் கடிந்துகொண்டார். வந்த விருந்தாளியிடம் மன்னிப்பும் கேட்டார். இதனால் பதைபதைத்துப் போன மாரார், "இப்படி தாங்கள் மன்னிப்புக் கேட்கும் படியான அருகதை எனக்கில்லை, தங்களுக்குள்ள ராம பக்தியை எனக்குக் கொஞ்சம் பிச்சை  போட்டால் போதும்" என்று சொல்லிவிட்டுக் கண்ணீர் உகுத்தார்.

மாரார், தியாகராஜரை சந்தித்த தினம் ஒரு "ஏகாதசி' நாள். அன்றிரவு ஏகாதசி பஜனைக்கு வேண்டிய ஏற்பாடுகளை வழக்கம்போல் சீடர்கள் செய்திருந்தனர். ஆனால் தியாகபிரம்மம் சீடர்களிடம், "இன்றைக்கு கோவிந்த மாரார் பஜனை செய்வார். நாம் கேட்டுக் கொண்டிருப்போம்' என்று சொன்னார்.தியாகராஜர் முன்னால் பாடவேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்த கோவிந்தமாராருக்கு இந்த வார்த்தை தேனாகப் பாய்ந்து தன்னுடைய ஏழு தந்திகள் கொண்ட தம்பூராவை மீட்டிக்கொண்டு, இனிய குரலில் கானம் இசைக்கத்தொடங்கினார். "சந்தன சர்ச்சித' என்று தொடங்கும் ஜயதேவர் அஷ்டபதியை விடியவிடியப் பாடினார். ஜய தேவரின் அஷ்டபதியிலும், மாராரின் கானத்திலும், லய லாவண்யத்திலும்  மனம் பறிகொடுத்த தியாகராஜர், அவரைப் பாராட்டி அக்கால வழக்கப்படி அவருடைய தம்பூராவின் சிரத்தில் ஒரு பட்டு நூலைச் சுற்றி அவரிடம் தனக்குள்ள பெருமதிப்பை வெளியிட்டார்.

மிகவும் பரவச நிலையில் இருந்த மாராரும் தியாக பிரம்மத்திடம் ஒரு கீர்த்தனம் பாடும்படி வேண்டினார். சுவாமிகளும் மனமுவந்து மாராரைப் போன்று ஒரு சிறந்த ராமபக்தரைக் காண கிடைத்தது தன்னுடைய பாக்கியம் என்றும், தான் முன்னதாகவே திருவாங்கூருக்கு வந்து அவரை சந்தித்திருக்க வேண்டும் என்றும், தன்னுடைய பக்தன் ஒருவனை தியாகையரின் இடம் தேடி வரும்படிச் செய்து தியாகராஜனுடைய அன்பராக்கி ஸ்ரீராமன் கிருபை புரிந்துள்ளான் என்றும், மாராரைப் போன்று பகவானுடைய பாதார விந்தங்களில் தன்னுடைய இதயக்கமலத்தை அர்ப்பணம் செய்பவர்கள் அனைவருக்கும் தான் மிகவும் கடமைபட்டவன் என்றும் சொல்லி, இன்று நாம் அனைவரையும் ஈர்க்கவல்ல, நாம் உலகெங்கும் அனுபவித்துப் பாடும் "எந்தரோ மகானுபாவுலு" என்றும் ஸ்ரீராக பஞ்சரத்ன கீர்த்தனையைப் பாடினார். இந்த கீர்த்தனையில் தவமுனிசிரேஷ்டர்கள் முதல் யார்யார் எந்த எந்த வகையில் மேன்மையுடையவர்கள் என்று ஒரு பெரிய பட்டியலே இட்டு அத்தனை பேருக்கும் தன் வந்தனம் என்று தெரிவிக்கின்றார் தியாகபிரும்மம். 

தியாகராஜரால் "மகானுபாவர்கள்' (பெருமக்கள்) என்று குறிப்பிடப்பட்டவர்களுள் கோவிந்தமாராரும் ஒருவர் என்று ஊகிக்க முடிகின்றது. இந்த அதிசயமான கீர்த்தனத்தை சுவாமிகள் பாடக்கேட்ட மாரார் மெய் மறந்தார். தியாக பிரம்மத்தின் இசைப்புலமையையும், பக்தியையும் மேலும் அனுபவிக்க விருப்பம் கொண்டு சில நாட்கள் அவரின் தனிப்பட்ட விருந்தினராகத் தங்கிவிட்டு தனது யாத்திரையை தொடர்ந்தார் என்பர்.

ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் 172 ஆவது ஆராதனை விழா திருவையாறில் காவிரிக்கரையில் அவருடைய சமாதி வளாகத்தில் ஜனவரி 21} இல் ஆரம்பமாகிறது. ஐந்து நாட்களுக்கு நடைபெறும் இந்த விழாவில் நாடெங்கும் உள்ள சங்கீத வித்வான்களும், விதூஷிகளும் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்துகின்றனர். ஜனவரி 25 }ஆம் தேதி வெள்ளிக்கிழமை (புஷ்ய பகுள பஞ்சமி தினம்) அவருடைய ஆராதனை நாளாகும். அன்று காலை 9 மணி அளவில் அவருடைய பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் கோஷ்டிகானமாக பாடப்படும். ஏற்பாடுகளை ஸ்ரீதியாக பிரம்ம மஹோத்சவ சபா விரிவாகச் செய்துள்ளது. தஞ்சாவூரிருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவையாறு.

- எஸ்.வெங்கட்ராமன்

More from the section

பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
ஆழ்வார்திருநகரி மாசி தீர்த்தவாரி!
குண்டனி சக்தி அருளும் குண்டலீஸ்வரர்!!
பொருநை போற்றுதும்! 29 - டாக்டர் சுதா சேஷய்யன்
தேடி வந்து நலம் தரும் தேவன்