செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

தாயைப் போற்றுவோம்!

DIN | Published: 18th January 2019 03:47 PM

 

அம்மாவின் அன்பு போற்றுதலுக்குரியது. அம்மா என்ற சொல், பாசம், பரிவு, தியாகம், தாழ்மை, எளிமையின் பிரதிபலிப்பு. தாய் மடியில் அன்பை உணராதவரோ, தாயின் தோளில் உறங்காத மனிதரோ எவரும் இலர்! 

தாய், தந்தை, ஆசிரியர், தெய்வம் என்ற வரிசையில் முதல் தெய்வம் தாய்தான். 

அம்மாவின் அன்பு, அவரின் பேச்சு குழந்தையை வீரமுள்ள அறிவுள்ள குழந்தையாக்கும். தாயின் அன்புக்கு எதையும் ஈடாக வைக்க முடியாது. 

பரிசுத்த வேதாகமத்தில், இயேசுவின் தாய் அன்னை மரியாளும் இயேசுவும் ஒரு திருமணத்திற்குச் சென்ற ஒரு நிகழ்ச்சி குறிக்கப்பட்டுள்ளது. ""கானா ஊரிலே ஒரு கல்யாணம் நடந்தது. இயேசுவின் தாயும் அங்கே இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும்  அந்த கல்யாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். கல்யாண விருந்தில் திராட்சை ரசம் குறைவுபட்டபோது இயேசுவின் தாய் அவரை நோக்கி அவர்களுக்கு திராட்சை ரசம் இல்லை' என்றார். அதற்கு இயேசு,  "அம்மா என் வேலை இன்னும் வரவில்லை' என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி, " அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதன்படி செய்யுங்கள்' என்றார். (யோவான் 2:1}5).

இயேசு தம் தாயின் சொற்களை கேட்டார். அவர் வேலைக்காரரை நோக்கி கூறிய சொற்களையும் கேட்டார். தம் தாய் தன்னிடத்தில் கொண்டுள்ள நம்பிக்கையை அறிந்தார். அங்கே யூதர்கள் பருக வைக்கப்பட்டுள்ள தண்ணீர் ஜாடிகளைக் கண்டார். அங்கே ஆறு கற்ஜாடிகள் இருந்தன. இயேசு, வேலைக்காரரைப் பார்த்து ஜாடிகளில் தண்ணீர் நிரப்பும்படி கூறினார். நிரப்பியவர்கள் ஜாடிகளில் வாய் நிரம்பும்படி தண்ணீர் நிரப்பினார்கள். இயேசு, அவ்வேலைக்காரரைப் பார்த்து ஜாடியில் உள்ளதை மொண்டு பந்தி விசாரிப்பவரிடம் கொடுக்கும்படி சொன்னார். 

அவர்கள் கொண்டு வந்து பரிமாறிய தண்ணீர், நல்ல ருசியுள்ள, வாசனை நிறைந்த உயர்ந்த திராட்சை ரசமாக மாறியிருந்தது. பந்தி விசாரிப்பவர் ருசி பார்த்து வியந்து போனார். மணமகனை நோக்கி, "இவ்வளவு விலை உயர்ந்த திராட்சை ரசத்தை வைத்திருந்தீரே' என்று பாராட்டினார். தம் தாயின் சொற்படி இயேசு, அவர்களின் குறையைப் போக்கி நிறைவாக்கி தண்ணீரை - திராட்சை ரசமாக மாற்றி இவ்வுலகில் அற்புதம் செய்தார். 

தண்ணீர், திராட்சை ரசமாக மாறிய அற்புதம் இயேசுவுக்கும் அன்னை மரியாளுக்கும் சீடருக்கும் வேலைக்காரருக்கும் மட்டுமே தெரியும். இயேசு, இந்த அற்புதத்தை செய்ய வல்லவர் என்று தாய் மரியாளுக்கு தெரிந்திருந்தது. தெய்வமே தன் வயிற்று பிள்ளையானாலும் மரியாள் தன் மகனை உயர்த்தி தன்னை தாழ்த்தி, தான் பாசமிகு அம்மா என்பதை காட்டி உயர்ந்த அம்மாவாக போற்றப்படுகின்றார். 

இயேசு தேவகுமாரனாய் இருந்தாலும் தம் தாய் தந்தையை மதித்து கீழ்ப்படிந்து சொற்கேட்டு தம் பெற்றோரை பெருமைபடுத்தினார். தம் தந்தையின் தொழிலாகிய தச்சு தொழிலையும் செய்தார் என அறிகிறோம்.

நாமும் இயேசுவை பின்பற்றி நமது அம்மாவையும் அப்பாவையும் போற்ற வேண்டும். பெற்றோரை போற்றுவோர் வாழ்வில் உயர்வடைவர்.

- தே. பால் பிரேம்குமார்

More from the section

கிருத கம்பளத்தில் கிருபாகரன்!
காலனை கடிந்த கால சம்ஹாரமூர்த்தி!
நட்பைப் போற்றும் இயேசு
நிகழ்வுகள்
அயலகத்தாரோடு நயத்தகு நட்பு