புதன்கிழமை 17 ஜூலை 2019

அம்மனும் ஆடியும்..!

DIN | Published: 05th July 2019 09:42 AM

தமிழ் வருடம் 12 மாதங்களை கொண்டது. இதனை ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன புண்ணிய காலம் என்றும் (சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலம்) தை முதல் ஆனி வரை உத்திராயன புண்ணிய காலம் என்றும் (சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலம்) நம் முன்னோர்கள் விஞ்ஞான அடிப்படையில் தெளிவாக இரு அயனங்களாக பிரித்துள்ளார்கள். ஆடி மாதம் 1 -ஆம் தேதி கடக ரவி (தட்சிணாயன) புண்ணிய காலமாக பிறக்கிறது. இந்த 6 மாத தட்சிணாயன காலத்தை மூன்று ருதுக்களாக "வர்ஷருது, சரத்ருது மற்றும் ஹேமந்தருது' என்று ஒன்றன் பின் ஒன்றாய் வருவது போல் பிரித்து இதனை தேவர்களின் இரவு நேர மாதங்கள் ஆக்கினார்கள்.
 ஆடி மற்றும் மார்கழி மாதங்களை நம் மக்கள் சுப காரியங்கள் செய்வதை தவிர்கிறார்கள். அதனால் தெய்வங்கள் பார்த்தார்கள் நாம் உருவாக்கிய எல்லா மாதங்களுமே நல்ல மாதம் தான் இதில் பேதம் இல்லை என்பதை தெளிவு-படுத்தும் முகமாக ஆண் தெய்வங்கள் தனக்கு உகந்த மாதமாக மார்கழியையும் (திருவாதிரை மற்றும் வைகுண்ட ஏகாதசி) பெண் தெய்வங்கள் ஆடி மாதத்தையும் (நிறைய உற்சவங்கள் வருகிறது) எடுத்துக் கொண்டு அருளாட்சி செய்து வருகிறார்கள்.
 ஆண்டாள் பிறந்த தினமான ஆடிப்பூரம், வரலட்சுமி விரதம், காவிரித் தாயை கொண்டாடும் பதினெட்டாம் பெருக்கு, முருகனை வழிபடும் நாளான ஆடிக்கிருத்திகை போன்ற திருவிழாக்களை நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள். ஆடி செவ்வாய், வெள்ளி அம்பாளுக்கு உகந்த நாள்களாக கொண்டாடப்படுகிறது.
 மாரி என்றால் தமிழில் மழை ஆகும். மாரியம்மனை, மாரியாயி, மாரி ஆத்தா, அன்னை மாரி என்று பல பெயர்களில் தமிழகத்தில் அழைப்பார்கள். நம் வாழ்வாதாரமான நீரைத்தரும் நல்ல மழையை வேண்டி மாரியம்மன், காளியம்மன் போன்ற அருட்கடவுளர்களுக்கு இம்மாதத்தில் நம் மக்கள் பக்தியுடன் கூழ் ஊற்றி வழிபடுகிறார்கள். இது தவிர, அம்மன் கோயில்களில் சக்தி வழிபாடு ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பெளர்ணமி நாள்களில் மிகச் சிறப்பாக திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவள் பார்வதி மற்றும் துர்க்கையின் மறுபதிப்பு என்றும் வடநாட்டில் இவளை சீதளா தேவி, காளி, பைரவி, மானஸா என்றும் அழைக்கிறார்கள்.
 இவள் கிராமதேவதை ஆகையால் ஊருக்குள் இல்லாமல் ஊருக்கு வெளியில் தான் கோயில் அமைந்திருக்கும். இதற்கென்று ஒரு பூசாரி இருப்பார். கோடைக்காலத்தில் ஏற்படும் அம்மை நோய் என்றால் உடனே மாரியம்மனை தொழுது வேப்பிலைப் படுக்கையில் படுத்து விரதமாய் இருந்தால், வந்தது தானே சென்றுவிடுவது கண்கூடு! மருந்தில்லா வைத்தியம். மகாபாரதத்தில் திரௌபதி மகாகாளியின் அவதாரமாக சொல்லப்படுவதால் அவளை திரௌபதி அம்மன் என்ற பெயரில் தென்னகத்தில் வழிபடுகிறார்கள்.
 ஆடி மாதம் வரும் அமாவாசையில் நம் பிதுர்க்களுக்கு ராமேஸ்வரம் போன்ற கடற்கரை மற்றும் காவிரிக்கரை ஸ்தலங்களில் திதி கொடுப்பதால் நம் முன்னோர்கள் அதனை ஏற்று நம் குடும்பம் மேலும் வளர ஆசிர்வதிப்பார்கள் என பிரம்மாண்ட புராணம் சொல்கிறது.
 "ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழி உண்டு. விவசாயிகள் ஆடியில் தான் விதை நெல்லை விதைப்பார்கள். ஆடி 18 -ஆம் நாள் ஆடிப் பெருக்கு அன்று காவிரி பாயும் டெல்டா விவசாயக் குடும்பங்களில் எல்லோரும் காவிரிக்கரைக்குச் சென்று, நல்ல மகசூலுக்கு உதவ வேண்டி காவிரித் தாயை வணங்கி வழிபடுவார்கள்.
 அன்று, மகிழ்ச்சியில் பொங்கிப் பெருகி வரும் காவிரித் தாய்க்கு, அவள் பாய்ந்தோடும் டெல்டா கரையோர மக்கள் எல்லோரும் ஜாதி பேதமின்றி ஒற்றுமையோடு தன் சக்திக்கு தகுந்தார்ப் போல் தேங்காய் சாதம், புளிசாதம், எலுமிச்சம்பழசாதம், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் - குறைந்தது ஐந்துவகை கலந்த சாதங்களை வீட்டில் செய்து, குழந்தைகள் சப்பரம் இழுத்துக்கொண்டு, காவிரிக்குச் சென்று அவளுக்கு படைத்து நாம் அந்த பிரசாதத்தை சாப்பிட்டு பின் கும்மி, கோலாட்டம் ஆடி காவிரித்தாயை மகிழ்வித்து வீடு திரும்புவார்கள் என்றார். வளைகாப்பு, சீமந்தம் நடக்கும் வீட்டில் பார்த்திருப்பீர்கள் ஐந்து வகையான கலந்த சாதம் அந்த பெண்ணிற்கு கொடுத்து; வரும் விருந்தாளிகளுக்கும் அன்று சாப்பாட்டில் பரிமாறுவார்கள்.
 அந்த காலத்தில் வைத்திய வசதி மிகக்குறைவானபடியால், ஆடியில் கற்பம் தரித்தால் 10 மாதம் கழித்து வரும் சித்திரை, வைகாசியில் நல்ல வெயிலில் பிரசவிக்கும் போது பெண்கள் படும் துன்பத்தைத் தடுக்கும் முகமாக, புதிதாக மணமானவர்களை இந்த ஆடி மாதத்தில் பிரித்து வைப்பார்கள். தன் குடும்பத்தில் புதிதாக திருமணமான தம்பதிகளை அழைத்து வந்து காவிரிக்கரையில் மாங்கல்ய சரடு மாற்றும் வைபவங்களை ஒரு விழாவாகவே நடத்துவார்கள். ஆடி 1-ஆம் நாள் புது மாப்பிள்ளையை வீட்டிற்கு அழைத்து தேங்காய்பாலால் செய்த பாயசம் செய்து சுவாமிக்கு படைத்துவிட்டு விருந்து வைப்பார்கள்.
 இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்று திரிசக்திகளாக பெண் தெய்வங்கள் அருளாட்சி செய்கிறார்கள். பெண்கள் உண்ணா நோன்பிருந்து தன் குடும்ப நலனுக்காக வரலட்சுமியை பிரார்த்தனை செய்வதால் சர்வ மங்கலங்களும் அனைவருக்கும் கிடைக்கும்.
 மதுரை பக்கம் ஆடி முளைகூட்டுத் திருவிழா 10 நாள்கள் மிகவும் பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. தேவர்களும் இறைவனை வணங்கும் மாதமாக இந்த ஆடியை பற்றி பெருமைப்படுகிறார்கள். இது போன்ற திருவிழாக்களில் பூ மிதித்தல் என்று பக்தியுடன் விரதமிருந்து தீ மிதித் திருவிழா நடைபெறும்.
 வடமாநிலங்களில் இம்மாதத்தை "ஆஷாடம்' என்பர். பாண்டுரங்க பக்தர்கள் ஜாதிமத பேதமின்றி; ஒருமைப்பாட்டிற்கு ஒர் எடுத்துக்காட்டாக பல ஊர்களிலிருந்து கால்நடையாய் கிளம்பி விரதமிருந்து பாண்டுரங்க பஜனை செய்து கொண்டு ஏகாதசியன்று பண்டரிபுரத்திற்குச் செல்வார்கள்.
 - எஸ். எஸ். சீதாராமன்
 

More from the section

ஆடிப் பௌர்ணமியில் அகிலாண்டேஸ்வரி தரிசனம்!
மலைக்க வைக்கும் மகோன்னத சிற்பங்கள்!
பொருநை போற்றுதும்!49 டாக்டர் சுதா சேஷய்யன்
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 16
நிகழ்வுகள்