புதன்கிழமை 17 ஜூலை 2019

காலங்களில் எழுதிய கல்லின் கவிதை!

DIN | Published: 05th July 2019 09:45 AM

அத்திகிரி - 5
 பேரருளாளன் பெருந்திருக்கோயில் 23 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்டு உயர்ந்த மதிற் சுவர்களுடன் வேழமென உயர்ந்த விண்ணகராய் காட்சியளிக்கிறது. இக்கோயில் குன்றைக் குடையாய்ப் பிடித்து குலங்காத்த கொழுநனுக்கு குன்றின் மேல் எடுக்கப்பட்ட கற்றளியாகும். சங்க காலத்திலேயே இருந்துள்ள இத்திருக்கற்றளியை முதலில் பல்லவர்கள் எடுப்பித்திருக்க வேண்டும். தொடர்ந்து சோழர், பாண்டியர், விசயநகரர் ஆகிய பேரரசுகள் காலத்தில் திருக்கோயில் வளாகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதை கற்றளியின் கலைப்பாணிகளைக் கொண்டு அறிய முடிகிறது.
 முதலாம் ராஜாதிராஜன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் இவர்களின் கலைப்பணியே இக்கோயிலின் விரிவாக்கத்திற்கான முக்கிய காரணமாகும். கி.பி.11-ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் இப்பணிகள் துவங்கப்பட்டு தற்போதுள்ள குன்றின் மேல் அமைந்த வரதர் கருவறை மற்றும் அதன் கீழே அமைந்துள்ள நரசிம்மர் சந்நிதி ஆகியவை கட்டுமானம் செய்யப்பட்டது. கி.பி.1073-இல் முதலாம் குலோத்துங்கள் இரண்டாம் மதிற்சுவரை எழுப்பினான். அவனது மகன் விக்கிரம சோழன் காலத்திலும் இக்கோயில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
 கல்லின் கவிதை
 விஜயநகர ஆட்சியின் துவக்கத்தில் பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சந்நிதியும், அபிஷேக மண்டபமும் கட்டப்பட்டன. சோழர்களின் கலைப்பணிக்குப் பின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது. கோபுரத்தைத் தாண்டி உள்ளே பெரிய வளாகத்தின் இடது புறம் நூற்றுக்கால் மண்டபம் விளங்குகிறது. நூற்றுக்கால் மண்டபத்தில் தொங்கும் கல் சங்கிலி கல்லின் கவிதையாய் புகழ் பாடிக்கொண்டிருக்கிறது.
 கல்யாண மண்டபம்
 ராஜகோபுர வாயிலின் வழியாக நுழைந்ததும் நேராக ஒரே வரிசையில் அடுத்தடுத்து அமைந்துள்ள பெருமாள், தாயார் கல்யாண மண்டபங்கள் கல் கட்டுமானங்களைக் காணமுடிகின்றது. இம்மண்டபத்தின் கொடுங்கைப் பகுதியின் நான்கு மூலைகளிலும் தொங்கும் கற்சங்கிலிகள் வியக்க வைக்கும் விந்தையாகும். அதைத் தொடர்ந்து பலிபீடம், ஓங்கி உலகளந்த உத்தமனது கோயில், கொடிமரம் ஆகியனவும் தத்தம் கலைப்பாணிகளை உலகறியக் காட்டி நிற்கின்றன.
 அதனையடுத்த நுழைவாயிலின் இருபுறமும் அமைந்துள்ள சுவர்களில் சோழர்காலக் கல்வெட்டுகள் உள்ளன. அருகிலேயே தெய்வங்களின் ஆடைகளை சேமித்து வைக்கும் வஸ்திரக் கொட்டடி அமைந்துள்ளது. மகாமண்டபம் பெரிய பரப்பில் உயர்ந்த பிள்ளைக்கூட்டுத் தூண்களைப் பெற்று விளங்குகிறது. இவ்வரிசைத் தூண்கள் ஒவ்வொன்றும் வடிவமைப்பில் வேறுபாட்டினைக் கொண்டுள்ளன. மகாமண்டபத்தின் இருபுறமும் நீராட்டு மண்டபம், கிளிக்கூட்டு மண்டபங்கள் அமைந்துள்ளன.
 நீராட்டு மண்டபம் தாயார் சந்நிதியின் அருகே உள்ளது. இம்மண்டபம் நீண்ட நெடிய படிகளுடன் உயரத்தில் உத்தரப்பகுதியில் ஓவியங்களுடன் விளங்குவது குறிப்பிடத்தக்கது. தாயார் சந்நிதியின் எதிரே கிழக்கு நோக்கியபடி உற்சவர் திருமேனி எழுந்தருள்விக்கும் கண்ணாடி அறை உள்ளது. அர்ச்சாவதாரராய் விளங்கும் இம்மூர்த்தியே பிரம்மனின் வேள்வியில் எழுந்த அக்னி வடுக்களை தன் திருமுகத்தில் தாங்கியுள்ளார்.
 விஜயநகர அரசர்களால் கட்டப்பட்ட நீராட்டு மண்டபம், அபிஷேக மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், தாயார் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, மலையாள நாச்சியார் சந்நிதி, அனந்தாழ்வார் மற்றும் கரியமாணிக்க வரதர் சந்நிதி ஆகியன வரதர் கோயிலின் இம்மண்ணின் கைவினைஞர்களின் கட்டடக்கலையை உலகறிய பறைசாற்றும் உன்னதம் அறியமுடிகிறது.
 மூலவர் தேவராஜப் பெருமாள் கருவறை உயரமான குன்றின் மீது நிறுவப்பட்டுள்ளது. கருவறையை அடைய முதல் தளத்திலிருந்து 24 படிகளேற வேண்டும். இரு நிலைகளைக் கொண்ட மாடக்கோயிலாய் கருவறை விமானம் விளங்குகிறது.
 கருவறையின் நேர் கீழே குடைவரைக் கோயில் போன்ற கட்டுமானத்தில் யோக நரசிங்க பெருமாள் வீற்றிருக்கிறார். அத்தி குன்றின் மேல் நிலையில் வரதர் கருவறையும், கீழே நரசிங்கர் கருவறையுமாய் வேழமும் சிம்மமும் விழைந்த நன்மாடக்கோயில் கொண்டுள்ளான். வரதனின் கருவறையானது ஓங்கி உயர்ந்த மாடத்திலிருந்து இறைவன் நம்மை நோக்குவதைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மையப்பகுதியில் நின்ற திருக்கோலமாய் புன்னகை தவழும் அதரங்களுடன் வரதர் அருள்கூட்டுகிறார்.
 கருவறைத் திருச்சுற்றின் வெளிப்புறச் சுவர்களில் தசாவதாரக் காட்சிகள், ராமாயணம் மற்றும் பாகவதக் காட்சிகள் விசயநகர காலத்து ஓவியங்களாகத் திகழ்கின்றன. இத்திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் தொல்வரலாறுடைய பல்லி வடிவம் வணங்கப்பட்டு வருகின்றது. மூலவரை தரிசித்துவிட்டு மீண்டும் படிகள் இறங்கி வரவேண்டும். இவ்வகையில் இரட்டைத் தளங்களாக திருச்சுற்றுமாளிகை வரிசையான தூண்களுடன் நாற்புறமும் சுற்றி அமைக்கப்பட்டிருப்பது அபூர்வமாக மிகச் சில கோயில்களிலே ஆகும்.
 பெருந்தேவித்தாயார் சந்நிதி
 மூலவரை நோக்கியபடி தென்மேற்கே பெருந்தேவி தாயாருக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. பெருந்தேவி தாயார் சந்நிதியின் முன் மண்டபம், படிகள் ஏறிச்சென்றால் வலதுபுறம் அமைந்துள்ள அர்த்தமண்டபம், கருவறை, அதற்கு முன்னால் அமைந்துள்ள மகா மண்டபம் ஆகியன அழகிய புடைப்புச் சிற்பங்களும், குதிரை வீரர்களும் விளங்கும் தூண்களுடன் காட்சியளிக்கின்றன. சோழர்கால சதுர வடிவக் கருவறையில் தாயார் வீற்றிருக்கும் கோலம், கருணையுடனும் வாத்சல்யத்துடனும் நம்மை அன்னை கண்களால் வருடுவதை உணரலாம்.
 திருக்கோயிலின் முதலாம் திருச்சுற்றில் கோயிலில் விளங்கிடும் மலையாள நாச்சியார், ஆண்டாள் நாச்சியார் சந்நிதிகள் முன் அமைந்துள்ள மண்டபத்துத் தூண்களில் இடம் பெற்றுள்ள பாகவதம், ராமாயணம் மற்றும் வாழ்வியல் சிற்பங்கள் விஜயநகரரின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன.
 நரசிம்மர் கருவறையின் முன்மண்டபத்தில் உள்ள நீண்ட நெடிய உருளைத்தூண்களின் கட்டுப்பகுதி என்றழைக்கப்படும் கட்டுமானத்தில் பூதகணங்கள் சங்குகளை ஊதிக்கொண்டு தூண்களைச் சுற்றி வட்டமாக அமர்ந்த நிலையில் குறுஞ்சிற்பங்களாகக் காட்டப்பட்டிருப்பது சிற்பக்கலையின் உன்னதத்தைக் காட்டி நிற்கிறது எனலாம்.
 இரண்டாம் திருச்சுற்றின் திருச்சுற்று மாளிகையின் சிற்றாலயங்களாய் ராமர் கோயில், அனந்தாழ்வார் சந்நிதி, கரியமாணிக்கப் பெருமாள் சந்நிதி ஆகியன அமைந்துள்ளன. இவற்றுள் ராமர் சந்நிதியின் முன் உள்ள மகா மண்டபத் தூண்களின் அமைப்பு கல்லில் வடிக்கப்பட்ட காவியமாய் விளங்குவது காணலாம். ஆச்சார்யர்கள் சந்நிதிகளும் மற்றும் நம்மாழ்வார் சந்நிதியும் உள்ளன. திருக்குளத்தின் கிழக்குத் திசையில் சக்கரத்தாழ்வார் சந்நிதிஅமைந்துள்ளது.
 இத்திருக்கோயிலினுள் உள்ள மூன்றாம் திருச்சுற்றில் அமைந்துள்ள அனந்தசரஸ் என்னும் திருக்குளத்தின் நடுவேயுள்ள நீராழி மண்டபத்தில் தான் அத்தி வரதர் ஜலசயனத்தில் இருந்தார். நீராழி மண்டபத்தின் கீழே செல்ல படிக்கட்டுகள் உள்ளன. மண்டபம் எழில் மிக்க கற்தூண்களால் கட்டமைக்கப் பட்டுள்ளது.
 - முனைவர் கோ . சசிகலா
 
 

More from the section

ஆடிப் பௌர்ணமியில் அகிலாண்டேஸ்வரி தரிசனம்!
மலைக்க வைக்கும் மகோன்னத சிற்பங்கள்!
பொருநை போற்றுதும்!49 டாக்டர் சுதா சேஷய்யன்
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 16
நிகழ்வுகள்