புதன்கிழமை 17 ஜூலை 2019

புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 15

DIN | Published: 05th July 2019 09:38 AM

இந்தத் தூதர்கள் லோத்துவிடம், "சீக்கிரம்! உன் மனைவியையும் உன் இரண்டு மகள்களையும் கூட்டிக்கொண்டு இங்கிருந்து போய்விடு!' என்று சொன்னார்கள். லோத்துவும் அவருடைய குடும்பத்தாரும் அந்த இடத்தைவிட்டு போவதற்கு நேரம் கடத்திக்கொண்டே இருந்தார்கள். அதனால் அந்தத் தூதர்கள் அவர்கள் கைகளைப் பிடித்து அந்த நகரத்துக்கு வெளியே இழுத்துக்கொண்டு போனார்கள்.
இந்தத் தூதர்களில் ஒருவர்: "சீக்கிரம், இங்கிருந்து ஓடிவிடுங்கள், திரும்பிப் பார்த்துவிடாதீர்கள். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மலைகளுக்கு ஓடிப்போங்கள்' என்று சொன்னார்.
லோத்துவும் அவருடைய மகள்களும் அதற்குக் கீழ்ப்படிந்து சோதோமை விட்டு ஓட்டம் பிடித்தார்கள், ஒரு நிமிஷம்கூட அங்கு நிற்கவில்லை, திரும்பிப் பார்க்காமல் ஓடினார்கள். ஆனால் லோத்துவின் மனைவி கீழ்ப்படியாமல் போனாள். சோதோமை விட்டு சிறிது தூரம் வந்ததும், ஏக்கத்தோடு அவள் திரும்பிப் பார்த்தாள்.
விவிலியத்தில் ஆதியாகமம் 19: 24 முதல் 26 வசனங்கள்: அப்பொழுது கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி, அந்தப் பட்டணங்களையும், அந்தச் சம பூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார். லோத்துவின் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள். லோத்துவின் மனைவி உப்புத்தூணாக மாறிய இடம் இஸ்ரேல் தேசத்தில் உள்ள சவக்கடல் ஓரத்தில் உள்ளது.
(குறிப்புகள்: ஆதியாகமம் 13:5-13; 18:20-33; 19:1-29; லூக்கா 17:28-32; 2 பேதுரு 2:6-8). 
இயேசு கிறிஸ்து மீண்டும் பூமிக்கு வரும்போது இந்த கடலில் நல்ல தண்ணீர் ஓடும் என்றும், மீனவர்கள் மீன் பிடிப்பார்கள் என்றும் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோயாளிகளை ஈர்க்கும் உப்புக்கடல்:
உப்புக்கடலில் குளித்தால் உடலில் உள்ள தோல் நோய்கள் உடனடியாக குணமாகும். சிறிதளவு தண்ணீர் கண்ணில் பட்டுவிட்டால் கூட குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் கண்ணில் எரிச்சல் உண்டாகும். இந்த கடலில் கிடைக்கும் சகதியை சுற்றுலா பயணிகள் எடுத்து உடலில் பூசிக்கொள்வது வழக்கம். அதேபோல, பாட்டில்களில் அடைத்து எடுத்துச் செல்வதும் வழக்கம். உடலில் சொறி, சிரங்கு போன்ற நோய்கள் இருந்தால் இந்த சகதியை தேய்த்து குளித்தால் எளிதில் குணமாகும். இந்த உப்புக்கடலில் இருந்து எடுக்கப்பட்ட சேற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட சோப்புகளை சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
ஜோர்தான் பகுதியில் உள்ள உப்புக்கடலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலா பயணிகள் இஸ்ரேல் நாட்டு பகுதியில் உள்ள உப்புக்கடலுக்கு செல்வதையே விரும்புகின்றனர். ஜோர்தான் இஸ்லாமிய நாடு என்பதால் அதை தவிர்த்துவிட்டு இஸ்ரேலுக்கு செல்கின்றனர். இஸ்ரேலில் உள்ள உப்புக்கடல் பகுதியில் ரிசார்ட்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது உடல் நோயை போக்குவதற்காக நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 500 அமெரிக்க டாலர்களை செலவு செய்து மாதக் கணக்கில் தங்கியிருந்து உப்புக்கடலில் குளித்துச் செல்கின்றனர்.
இஸ்ரேல் பகுதியில் உள்ள உப்புக்கடல் ஓரத்தில் சோதோம், குமாரா பட்டணம் அழிக்கப்பட்ட இடத்தில் உள்ள மலைகளில் இருந்து இப்போதும் மழை காலங்களில் உப்புக்கள் கரைந்து இந்த உப்புக்கடலை உவர்ப்பாக்கி வருகின்றன.
என்கேதி 
இஸ்ரேலை ஆண்ட தாவீது மன்னர், சவுலுக்கு பயந்து ஓடிய இடம் இந்த என்கேதி மலை பகுதிகள் தான். இது சவக்கடலுக்கு அருகே தான் உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் ஒரு நீரூற்று உள்ளது. விவிலியத்தில் உள்ள சங்கீதங்கள் என்ற ஆகமத்தை தாவீது எழுதிய இடம் இது தான் என விவிலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
1909 -இல் "டெல் அவிவ்' நகரம் (Hill of Spring) அமைக்கப்பட்டது. இந்நகரம் தான் பின்னர் இஸ்ரேலின் தலைநகராகியது என்பது குறிப்பிடத்தக்கது. 1917-இல் முதலாம் உலகப்போர் தொடங்கியது. ஆலன்பை தலைமையில் பிரிட்டிஷ் படைகள் எகிப்திலிருந்து சினாய் பாலைவனம் வழியாக ஜெருசலேம் நோக்கி விரைந்தன. அக்டோபர், 1918 - இல் ஜெருசலேம் நகரை வெற்றி கொண்ட பிரிட்டிஷ் படைகள் நகரின் புனிதத் தன்மை கருதி கால்நடையாகவே நடந்து நகருக்குள் சென்றனர். இந்த வெற்றியை யூதர்கள் தங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதினர். பின்னர் 1948 வரை இஸ்ரேல் பிரிட்டன் வசம் இருந்தது.
இப்படியாகப் பல்வேறு காலகட்டங்களில் பல நாட்டு அரசர்களால் ஆளப்பட்ட இஸ்ரேலை சுதந்திர நாடாக்கி சிதறடிக்கப்பட்ட யூதர்கள் எல்லாம் அங்கு ஒன்றுகூடி வாழவேண்டும் என்ற எண்ணம் மட்டும் யூதர்கள் மத்தியில் இருந்து கொண்டே வந்தது. 1882 முதல் 1903 வரை ஏராளமான யூதர்கள் முக்கியமாக ரஷியாவில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தனர்.
( தொடரும்)
- ஜெபலின் ஜான்


 

More from the section

ஆடிப் பௌர்ணமியில் அகிலாண்டேஸ்வரி தரிசனம்!
மலைக்க வைக்கும் மகோன்னத சிற்பங்கள்!
பொருநை போற்றுதும்!49 டாக்டர் சுதா சேஷய்யன்
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 16
நிகழ்வுகள்