புதன்கிழமை 17 ஜூலை 2019

புனித நபி வழியில் மனித வாழ்வு

DIN | Published: 05th July 2019 09:36 AM

பகுத்தறிவு உடைய மனிதன் அல்லாஹ்வின் படைப்புகளில் சிறந்தவன். மனித வாழ்வு புனிதமாய் அமைய அல்லாஹ் அண்ணல் நபி (ஸல்) அவர்களை மனித குலத்தின் வழிகாட்டியாக ஆக்கினான். இந்நோக்கத்தை நமக்கு விளக்குவதே விழுமிய நபி (ஸல்) அவர்களின் நன்மொழிகளும் பொன்னான புனித வாழ்வும். அம்மொழிகள் வாழ்க்கை நடைமுறைகளையும் சட்ட நுணுக்கங்களையும் தெளிவாக அறிய உதவுகின்றன.
 தொழுகையை கடைபிடித்து ஜகாத்தும் கொடுங்கள். தூதரைப் பின்பற்றுங்கள். அருளை அடைவீர்கள் என்று அறிவிக்கிறது அருமறை குர்ஆனின் 24- 56 ஆவது வசனம். தொழுகையை தொழும் முறையையும் ஜகாத்தின் அளவையும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் விளக்கி கூறி நடைமுறையில் நடத்தி காட்டி கடைபிடிக்க வழிகாட்டினார்கள். என்னிடமிருந்து ஹஜ் கடமைகளை அறிந்து கொள்ளுங்கள் என்றும் அறிவித்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். நற்செயல்கள் புரிவதிலும் பிறருக்கு உதவுவதிலும் உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்ததையும் உரைத்தபடி நடந்ததையும் கடைபிடிக்க வேண்டும்.
 கொடுத்ததை ஏற்று தடுத்ததை விலக்கி கொள்ளுங்கள் என்று எடுத்துரைக்கிறது 59- 7 ஆவது வசனம். பனூ நஸீபிடமிருந்து கிடைத்த பொருள்களைப் பங்கிடும்பொழுது இவ்வசனம் இறக்கப்பட்டது. பொருள் பொருளுடையோர் மத்தியில் மட்டும் புரளாது தேவை உடையோருக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. தூதர் தருவதை ஏற்று திருப்தியுற வேண்டும். மறுக்க கூடாது. அல்லாஹ்வின் தூதருக்கு மாறுசெய்வோர் அல்லாஹ்விற்கு மாறு செய்பவராவர் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாவர்.
 இறுதி நாளை உறுதியாக நம்புவோருக்கு இறுதி தூதரிடம் முன்மாதிரி இருக்கிறது என்று இயம்புகிறது 33- 2 ஆவது வசனம். அறிவையும் நேர்வழியையும் நீரோடு ஒப்பிடுகிறார்கள். நீரின் பயனை அறிவோர் நிறை நபி மொழியின் பொருளை உணர்வர். நான் நிலத்தில் விழுந்த பெருமழை. மழை நீர் செடி கொடிகளைச் செழித்து வளர வைக்கிறது. நீரற்ற பூமி வறண்டு விடுகிறது. தூதை ஏற்பது மழை பெறும் பூமி. மறுப்பது மழையற்ற வறண்ட பூமி. அழகிய தூதரில் உஸ்வத் (அழகிய முன் மாதிரி) இருக்கிறது என்பது ஏந்தல் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதும் அவர்களின் வழிகாட்டலில் இருந்து மாறாதிருப்பதும் என்று அல்ஹக்கீமுத் திர்மிதீ (ரஹ்) விளக்கம் அளித்தார்கள்.
 அல்லாஹ்விற்கும் அவனின் தூதருக்கும் தலைமைக்கும் கட்டுப்படுங்கள் என்று கட்டளை இடுகிறது 4-59 ஆவது வசனம். அல்லாஹ்விற்குக் கட்டுப்பட வேண்டும். அல்லாஹ்வை அடைய அல்லாஹ்வின் சட்டங்களைச் சரியான முறையில் கற்பித்து கடைபிடித்து காட்டிய அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்பட்டு நடப்பதே நல்வாழ்வை நல்கும்.
 அல்லாஹ்வின் தூதரின் வழியில் தலைமை ஏற்று சமுதாயத்தை வழிநடத்தும் நாட்டை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்பட்டு ஒத்துழைத்து நல்லன நடக்க துணைபுரிய வேண்டும். அல்லன புரியும் அடாவடி கெடுபிடி தலைவர்களுக்குக் கட்டுப்பட வேண்டாம் என்பதை ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள். கருப்பு திராட்சை போன்ற தலையை கொண்ட கருத்த அடிமை ஒருவர் அதிகாரியாக நியமிக்கப் பட்டாலும் அந்த அதிகாரி அல்லாஹ்வின் வேதத்தை உங்களிடையே நிலைநிறுத்தும் வரை அந்த அதிகாரிக்குக் கீழ்ப்படியுங்கள். அறிவிப்பவர்- அனஸ் (ரலி) நூல்- புகாரி.
 ஒரு சமயம் ஒரு சிறிய படைக்குத் தலைமை வகித்து சென்ற அல்கமா (ரலி) அவர்களைக் கோபமுற செய்த படையினரை நெருப்பை மூட்டி குதிக்க சொன்னார். படையினர் மறுத்து விட்டனர். படை வீரர்கள் மறுத்தது மாறான செயல் அல்ல. சரியான சமயோசித செயல் என்று தீர்ப்பளித்ததைத் தெரிவிக்கிறார் அலி (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸஈ.
 இந்நிகழ்ச்சிகளில் நிலைநிறுத்தப்படும் நீதர் நபி (ஸல்) அவர்களின் போதனைகளை ஏற்று சோதனைகளை வெல்வோம்; சாதனை படைப்போம். புனித நபி வழியில் மனித வாழ்வை மாண்புற செய்வோம்.
 - மு.அ. அபுல் அமீன்
 
 

More from the section

ஆடிப் பௌர்ணமியில் அகிலாண்டேஸ்வரி தரிசனம்!
மலைக்க வைக்கும் மகோன்னத சிற்பங்கள்!
பொருநை போற்றுதும்!49 டாக்டர் சுதா சேஷய்யன்
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 16
நிகழ்வுகள்