புதன்கிழமை 17 ஜூலை 2019

பொருநை போற்றுதும்! 48 - டாக்டர் சுதா சேஷய்யன்

DIN | Published: 05th July 2019 09:41 AM

யார் இந்த கடனா?
 "கடயதி இதி கடனா' "கட' என்னும் சொல்லுக்குப் பற்பல பொருள்கள் காணப்படுகின்றன. "(ஏதோவொன்று குறித்து) பணி செய்துகொண்டே இருப்பது, சாத்தியப்படுத்துவது, இணைப்பது, அருகிலோ தொடர்பிலோ கொணர்வது, செயல்படுத்துவது' போன்ற பலவிதமான பொருள்கள் உள்ளன. தவிர, மேற்கூறிய பொருள்களை அடியொற்றியே, "கட' அல்லது "கடம்' என்றால் ‘குடம், கொள்கலன், கலசம்' போன்ற பொருள்களும் தோன்றியுள்ளன. இந்த வகையில், "கடனம்' அல்லது "கடனா' என்னும் சொற்களுக்கு, "சாதித்தல்', "இணைத்தல்' ஆகிய பொருள்களைக் கொள்ளலாம். ஹிந்தி மொழியில், "கடனா' என்பது "குறைத்தல்' என்னும் பொருளில் கையாளப்படுகிறது.
 நம்முடைய பாவங்களைக் குறைத்து, இறைவனுக்கு அருகில் நம்மை அழைத்துச் சென்று, கலச நீராக நம்மைத் தூய்மைப்படுத்திச் சாதிப்பவளே கடனா என்று பெருமிதப்படலாம். இதனாலேயே, கடனா நதிப்பெண்ணுக்குக் "கருணை' நதி என்னும் பெயரும் வழங்கி வருகிறது.
 திருப்புடைமருதூர் பகுதியில், பொருநையாளின் இடக்கரையில் வந்து கடனா சேர்கிறாள்.
 கடனாவோடு கலக்கும் சகோதர-சகோதரிகள்
 கடனாவைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னர், இவளோடு வந்து கலந்துகொள்கிற குட்டிக் குட்டிச் சகோதர சகோதரிகளையும் தெரிந்துகொள்ள வேண்டாமா?
 அம்பாசமுத்திரத்திற்கு வடக்காகவும் திருப்புடைமருதூர்—ரங்கசமுத்திரம் பகுதிகளுக்கு வடமேற்காகவும் உள்ளன மன்னார் கோவில், பிரம்மதேசம், அடைச்சாணி, இடைகால் ஆகிய ஊர்கள். இன்னும் சற்றே வடமேற்காக நகர்ந்தால், கீழாம்பூர், ஆழ்வார் குறிச்சி, ரவண சமுத்திரம், பொட்டல்புதூர் போன்ற ஊர்கள். ரவணசமுத்திரத்திற்குச் சுமார் 1.5 கி.மீ. வடக்கே, கடையம்; கடையத்திற்கும் வடக்கே கடையம் பெரும்பற்று.
 கீழக் கடையம், மேலக் கடையம், கடையம் பெரும்பற்று ஆகிய பகுதிகள், மேற்கு மலைத் தொடரின் கிழக்குச் சரிவுகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளன. பெரும்பற்றுக்கு மேற்கேயுள்ள சரிவுகளில் ஜம்பு நதி தோற்றமெடுக்கிறது. மேலக் கடையச் சரிவுகளில் ராம நதி தோன்றுகிறது. இரண்டும், ரவணசமுத்திரத்தில் சந்தித்துக் கலக்கின்றன. இவ்வாறு இணைந்து உருவாகும் புதிய நதிக்கு வராஹ நதி என்னும் பெயர் தோன்றுகிறது. ஜம்பு நதி என்பது இப்போதைய காலங்களில் தெற்காறு என்று வழங்கப்படுகிறது. இணைப்பு நதிக்கு வராஹ நதி என்னும் பெயர் ஏடுகளில் குறிக்கப்பட்டிருந்தாலும், கிளை ராம நதியின் தொடர்ச்சியாக, இதுவும் ராம நதி என்றே இக்காலங்களில் அழைக்கப்படுகிறது.
 அத்ரி மலையிலிருந்து அம்மை பாதம் வரை
 ஆழ்வார்குறிச்சிக்கு நேர் மேற்காகச் சிவசைலம். சிவசைலத்திற்கும் மேற்கே உள்ள அத்ரி மலைக் காட்டுப் பகுதியில் உற்பத்தி ஆகிறாள் கடனா. இங்கிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறாள். சாம்பன்குளம், சிவசைலம், கருத்தப்பிள்ளையூர், மேல ஆம்பூர், பூவன்குளம், கீழ ஆம்பூர் ஆகிய ஊர்களைத் தொட்டுக் கொண்டே பாப்பான்குளத்தை அடைகிறாள்.
 பாப்பான்குளம் பகுதியில், சற்றே வடக்கிலிருந்து வரும் ராம நதி (அல்லது வராஹ நதி) கடனாவோடு இணைகிறது. இதனால் அகலமாகிற கடனா, மேலும் கிழக்காகப் பாய்ந்து, அடைச்சாணி, ரங்கசமுத்திரம் வழியாகப் பொருநையை அடைகிறாள்.
 கடனாவும் ராம நதியும் இணைகிற பாப்பான்குளம் மன்னார்கோவில் பகுதியிலேயிருந்து அகன்ற வாய்க்கால் அடைச்சாணிப் பெருங்குளத்திற்கு ஓடுகிறது.
 கடனா என்னும் கருணையாற்றைக் குறித்துச் செவிவழிக் கதையொன்று இந்தப் பகுதிகளில் வழங்குகிறது. சிவசைலத்தில் எழுந்தருளியிருக்கும் சுவாமி அருள்மிகு சிவசைலநாதர்; அம்பாள் அருள்மிகு பரமகல்யாணி. அம்பாளின் திருநாமத்தையும் சேர்த்துச் சுவை கூட்டுகிறது இந்தக் கதை.
 அகத்தியர் வாசம் செய்யும் பொதிகை மலைப் பகுதியில் தாமும் தவம் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தார் அத்ரி மஹரிஷி. சிவசைலத்திற்கு மேற்கே உள்ள மலைக்காட்டுப் பகுதியில் ஆச்ரமம் அமைத்துத் தவம் செய்தார். அத்ரியின் சீடர்களில் ஒருவர்தாம் பிருங்கி முனிவர். தம்முடைய ஆசானின் ஆச்ரமத்தில் வந்து தங்கிச் சிவனாரை வழிபட விரும்பிய இவர், அவ்வாறே செய்ய முற்பட்டார்.
 இருந்தாலும் ஒரு சங்கடம். இறைவனாரின் அருள்விளையாடல்தான் காரணமோ, பிருங்கியின் மதர்ப்பு காரணமோ, அம்மையை விட்டுவிட்டு ஐயனை மட்டுமே கும்பிடவேண்டும் என்கிற அவருடைய அறியாமை காரணமோ எதுவென்று தெரியவில்லை. இவற்றில் ஏதோ ஒன்றின் காரணமாகவோ அல்லது எல்லாவற்றின் காரணமாகவோ, தம்முன் காட்சி கொடுத்த பார்வதி பரமேச்வரத் திருவடிவில், பார்வதியை விடுத்துப் பரமேச்வரரை மட்டுமே பிருங்கி வலம் வந்தார்.
 தன்னை உதாசீனப்படுத்திவிட்டார் என்று சினமடைந்த அம்மை, ஐயனிடமிருந்து அகன்று ஓடினாள்.
 அம்மையின் கோபத்தைத் தணிப்பதற்கு முயன்ற சிவனார், "கல்யாணி, இங்கே வா' என்றழைத்தார். அம்மை வரவில்லை. மாறாக, தாமிரவருணிக் கரையில் போய் நின்றுகொண்டாள்.
 அம்மையின் சினத்தை எப்படித் தணிப்பது என்று சிந்தித்த சிவனார், தம்முடைய ஜடாபாரத்தில் சுருண்டுகிடந்த கங்கையை அழைத்தார். அவளும் எதிர் வந்து நின்றாள். "அம்மையின் சினத்தைத் தணித்து அழைத்து வா' என்று ஐயன் ஆணையிட, அம்மை ஓடிய தடத்திலேயே தானும் ஓடினாள் கங்கை. தாமிராவின் கரையில் அம்மை நிற்பதைக் கண்டு அங்கு வந்து அம்மையின் பாதம் தொட்டு வலம் வந்து தாமிராவிலும் மூழ்கி நின்றாளாம். அம்மையின் சினம் தணிய, மெல்ல அம்மையின் கைபற்றி மீண்டும் ஐயன் நின்ற இடத்திற்கு அழைத்துச் சென்றாளாம். அம்மையின் வழித்தடத்தைப் பின்பற்றி கங்கை ஓடிய தடம்தான் கடனா நதி ஆனது. தாமிராவில் மூழ்கி நின்ற கங்கையே, கடனாவாகத் தாமிராவில் இப்போது கலக்கிறாள்.
 "கடனா' என்கிற பெயருக்கேற்ப, அம்மையையும் ஐயனையும் இணைக்கிற பணியையும் கடனா செய்திருக்கிறாள்.
 கடனாவின் கரையில் காலப் புதையல்கள்
 பண்டைத் தமிழர்கள், பொதிகை மலைப்பரப்புகளிலும் கடனா நதிக்கரையிலும் குடியேறி இருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் பலவும் கிட்டியுள்ளன. கடனா நதிக் கரையில் உள்ள பாப்பான்குளம், அடைச்சாணி, வெள்ளக்குளம், காக்கநல்லூர், கல்யாணிபுரம், ஆம்பூர் ஆகிய இடங்களில், "முதுமக்கள் தாழி' எனப்படும் பிரம்மாண்ட மண்பாண்டங்கள், நிலத்தடி அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.
 2010-2011 வாக்கில் நடந்த அகழ்வாய்வில் கறுப்பும் சிவப்புமாகக் காட்சியளிக்கும் இத்தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மலைப்பாங்கான மேட்டு நிலங்களில் வாழ்ந்து, அங்கிருந்து ஆற்றுக் கரையின் ஓரமாக நகர்ந்து, சமவெளிப் பகுதிக்கு மக்கள் குடிபெயர்ந்த தடத்தை, இத்தாழிகள் காட்டுவதாகவும் வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஆதிச்சநல்லூர் நாகரிகக் காலத்திற்கும் முந்தையவர்களாக, இத்தகைய குடியேற்றத்தைச் சேர்ந்தோர் இருந்திருக்கக்கூடும். அப்படியானால், ... மிக மிக மிகப் பண்டைய காலத்தைச் சேர்ந்தவர்கள் நம்முடைய தமிழ் முன்னோர்கள்!
 கடனா நதிக்கு அத்ரி கங்கை (அத்ரி மலைக் காட்டில் தோன்றுவதால்), கடல் கங்கை, சிவ கங்கை, கல்யாண கங்கை போன்ற பெயர்களும் உள்ளன. ஒரு காலத்தில் இந்த நதிப்பெண்ணாள், கல்லாறு என்றும் அழைக்கப்பட்டிருக்கிறாள். இப்போதும்கூட, இவளின் படுகையில் சிவலிங்க வடிவம் கொண்ட கற்கள் கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு சென்று, அவரவர் ஊர்களின் திருக்கோயில் சிவலிங்கங்களின் ஆவுடையார்மீது வைத்து வழிபடுகிறார்கள்.
 கல்வெளிகளின் இடையே கல்லாறாக ஓடி, தர்மத்தை ஒன்றிணைக்கும் கடனாவாகப் பாய்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அன்பின் நிலையில் கருணையாறாகப் பெருமை சேர்ப்பவள், தாமிராவின் இந்தத் தங்கை நல்லாள்!
 - தொடரும்...
 
 

More from the section

ஆடிப் பௌர்ணமியில் அகிலாண்டேஸ்வரி தரிசனம்!
மலைக்க வைக்கும் மகோன்னத சிற்பங்கள்!
பொருநை போற்றுதும்!49 டாக்டர் சுதா சேஷய்யன்
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 16
நிகழ்வுகள்