வியாழக்கிழமை 21 மார்ச் 2019

எங்கள் ஆதரவாளர்களின் தகவல்களை ராஜபட்ச அரசுக்கு வழங்க வேண்டாம்: முகநூல் நிறுவனத்துக்கு ரணில் கட்சி கோரிக்கை

DIN | Published: 18th November 2018 01:04 AM


இலங்கையில் சட்டவிரோதமாக அமைந்திருக்கும் ராஜபட்ச அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என்று முகநூல் நிறுவனத்துக்கு, ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, தங்கள் கட்சி ஆதரவாளர்களுடைய கணக்குகளை அரசு முடக்கிவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று அந்நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
இலங்கையில் கடந்த மாதம் 26-ஆம் தேதியில் இருந்து அதிரடி அரசியல் மாற்றங்களும், எதிர்பாராத திடீர் திருப்பங்களும் அரங்கேறி வருவதுடன், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே எம்.பி.க்கள் கைகலப்பில் ஈடுபடும் அளவுக்கு களேபரக் காட்சிகளும் நிகழ்ந்து முடிந்துள்ளன.
பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை, அதிபர் மைத்ரிபால சிறீசேனா பதவிநீக்கம் செய்த பிறகு, புதிய பிரதமராகப் பதவியேற்ற மகிந்த ராஜபட்சவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்ட இயலாத நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது. அதிபர் பிறப்பித்த அந்த உத்தரவுக்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதன் பின்னர் கூட்டப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்தில், ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இருமுறை நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், அவர் இதுவரையில் பதவி விலகவில்லை. அதே சமயம், நாடாளுமன்றத்தில் மிளகாய் பொடி தூவுதல், நாற்காலி உடைப்பு போன்ற களேபரக் காட்சிகளும் நடந்து முடிந்துள்ளன.
முகநூலுக்கு கடிதம்: இத்தகைய சூழலில், ராஜபட்ச அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என வலியுறுத்தி, முகநூல் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்கிற்கு ஐக்கிய தேசிய கட்சி, கடிதம் எழுதியுள்ளது. 
அதில், நீதிமன்றம் முறையாத பரிந்துரை வழங்காத பட்சத்தில், சட்டவிரோத அரசின் அதிகாரிகள் சார்பில், முகநூல் பயனாளர்கள் குறித்த தகவல்கள் கேட்கப்பட்டால் அவற்றை வழங்க வேண்டாம் என்று முகநூல் நிறுவனத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் மாபெரும் ஊர்வலம் நடத்தப்பட்ட சமயத்தில், கட்சியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் முடக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், கடிதத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய சிக்கல்: முன்னதாக, இலங்கையில் 3 பேரை பலி கொண்ட மதக் கலவரம் ஒன்றிற்கு காரணமான, வெறுப்புணர்வூட்டும் பேச்சுக்களையும், பதிவுகளையும் முகநூல் நிறுவனம் தடுக்கத் தவறிவிட்டதாகக் கூறி, முகநூலுக்கு தடை விதித்து அதிபர் சிறீசேனா உத்தரவிட்டிருந்தார்.
அதற்குப் பிறகு, இலங்கை பயனாளர்கள் வெளியிடும் சர்ச்சைக்குரிய பதிவுகளை கண்டறிந்து நீக்குவதற்கென கூடுதல் பணியாளர்களை நியமித்து, முகநூல் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
 

More from the section

தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் கைது: 29-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
மசூத் அஸார் சர்வதேச பயங்கரவாதி: ஐரோப்பிய யூனியனில் தீர்மானம் தாக்கல்
இடாய் புயல்: ஜிம்பாப்வே, மொசாம்பிக் நாடுகளில் 300-க்கும் மேற்பட்டோர் பலி: உதவிக்கரம் நீட்டியது ஐ.நா
பாலைவனத்தில் காணாமல் போன சிறுவன் 24 மணி நேரத்துக்கு பிறகு மீட்பு!
கனடா: நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி நபர்