புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

நச்சுத் தாக்குதலில் குற்றம் சாட்டப்படுபவர்கள் அப்பாவிகள்: பிரிட்டனிடம் புதின் திட்டவட்டம்

DIN | Published: 13th September 2018 12:56 AM
ரஷியாவின் விளாதிவாஸ்டாக் நகரில் புதன்கிழமை நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் உரையாற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின். உடன் (வலமிருந்து) சீன அதிபர் ஷி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே.


பிரிட்டனில் முன்னாள் ரஷிய உளவாளி மீது நச்சுத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் 2 ரஷியர்கள் படைத் துறையைச் சேர்ந்தவர்களோ, குற்றவாளிகளோ அல்ல என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை கூறினார்.
இதுகுறித்து அந்த நாட்டின் விளாதிவாஸ்டாக் நகரில், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ  அபே, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் பங்கேற்ற வர்த்தக மாநாட்டில் அவர் பேசியதாவது:
பிரிட்டனில், முன்னாள் ரஷிய உளவாளி செர்கெய் ஸ்க்ரிபால் மீது நச்சுத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் இரு ரஷியர்கள் யார் என்பதை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். அவர்கள் இருவரும், பிரிட்டன் கூறியதைப் போல ரஷிய உளவு அமைப்பில் பணியாற்றுபவர்கள் கிடையாது. அவர்கள் சாதாரண பொதுமக்களே ஆவர்.
அவர்களில் யாரும் குற்றவாளிகள் இல்லை என்பதை உறுதியாக கூற முடியும். இந்த உண்மை விரைவில் வெளிவரும். பிரிட்டனின் குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் அந்த இருவரும், செய்தியாளர்களைச் சந்தித்து தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் அவர்.
கடந்த 1990-ஆம் ஆண்டுகளில், ரஷிய ராணுவ உளவு அமைப்பில் பணியாற்றி வந்த செர்கெய் ஸ்க்ரிபால் (66), பிரிட்டனின் உளவுப் பிரிவான எம்ஐ6-இலும் ரகசியமாக இணைந்து பிரிட்டனுக்கு ராணுவ ரகசியங்களை அளித்து வந்தார்.
அவரது நடவடிக்கையைக் கண்டுபிடித்த ரஷிய அதிகாரிகள், 2004-ஆம் ஆண்டு செர்கெய் ஸ்கிரிபாலை கைது செய்து சிறையிலடைத்தனர். எனினும், உளவுக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட செர்கெய் ஸ்கிரிபால், பிரிட்டனில் வசித்து வருகிறார்.
இந்தச் சூழலில், செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது 33 வயது மகள் யூலியா மீது கடந்த மார்ச் மாதம் 4-ஆம் தேதி நச்சுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதையடுத்து, கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இருவரும் சாவின் விளிம்புக்கே சென்று திரும்பினர்.
இந்த நச்சுத் தாக்குதலுக்கு ரஷியாதான் காரணம் என்று பிரிட்டன் குற்றம் சாட்டி வருகிறது. எனினும் ரஷியா அந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் பிரிட்டனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் ஆகியவை தங்கள் நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட ரஷியத் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டன.
ரஷியாவும் அதற்குப் பதிலடியாக அந்த நாடுகளின் தூதர்களை வெளியேற்றியது. இதனால், ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் பதற்றம் நிலவி வந்தது. இந்தச் சூழலில், செர்கெய் ஸ்க்ரிபால் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நோவிசோக் நச்சுப் பொருளால் பாதிக்கப்பட்ட டான் ஸ்டர்கெஸ் என்ற பெண்மணியும், அவரது நண்பர் சார்லி ரோலேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் டான் ஸ்டர்கெஸ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சாலையில் கிடந்த ஒரு சிறு குடுவையை வாசனை திரவியம் என்று நினைத்து எடுத்து வந்ததாகவும், அதனை டான் ஸ்டர்கெஸ் தனது உடலில் செலுத்தியதைத் தொடர்ந்து தங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் சார்லி ரோலே தெரிவித்தார்.


அதையடுத்து, இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்திய பிரிட்டன் புலனாய்வுத் துறையினர், ரஷிய உளவுத் துறையைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் பெட்ரோவ், ரஸ்லான் பாஷிரோவ் ஆகிய இருவரும்தான்  முன்னாள் ரஷிய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மீது நச்சுத் தாக்குதல் நடத்தியதாகக் கூறினர். ரஷிய கடவுச் சீட்டில் (பாஸ்போர்ட்), போலியான பெயர்களில் பிரிட்டனுக்கு வந்த அந்த இருவரும் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதையடுத்து, இந்த சம்பவங்கள் தொடர்பாக அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
மேலும், இந்த நச்சுத் தாக்குதலுக்கு, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்தான் முதன்மை பொறுப்பாளி என்று பிரிட்டன் குற்றம் சாட்டியது.
ஜிஆர்யு என்று அழைக்கப்படும் ரஷிய உளவுத் துறைக்கு, தனது பாதுகாப்புத் துறை மூலம் விளாதிமிர் புதின் தலைமையிலான ரஷிய அரசுதான் இந்த நச்சுத் தாக்குதலை நடத்துவதற்கான உத்தரவையும், நிதியுதவியையும் வழங்கியதால், அந்தத் தாக்குதலுக்கு அதிபர் புதின்தான் முதன்மை பொறுப்பாளி என்று பிரிட்டன் அரசு தெரிவித்தது. இந்தச் சூழலில், புதின் தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.

 

More from the section

ஐ.நா.வில் மசூத் அஸாருக்கு எதிராக தீர்மானம்: பிரான்ஸ் முடிவு
ஈரான் ராணுவம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் பயங்கரவாதி
இந்தியா தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கொடுப்போம்: இம்ரான் கான்
குல்பூஷண் வழக்கை ஒத்திவைக்க பாக். கோரிக்கை: சர்வதேச நீதிமன்றம் நிராகரிப்பு
பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான்!: இந்தியா பதிலடி