செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

ரோஹிங்கயா விவகாரம்: ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு மியான்மர் முதல் முறையாக அனுமதி

DIN | Published: 13th September 2018 12:54 AM


மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து நேரில் விசாரிக்க, ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு முதல் முறையாக புதன்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஐ.நா. அகதிகள் நல ஆணைய செய்தித் தொடர்பாளர் ஓய்ஃபே மெக்டனெல்  கூறியதாவது: மியான்மரில் சிறுபான்மை ரோஹிங்கயா இனத்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்த எங்களது விசாரணை, அந்த நாட்டின் ராக்கைன் மாகாணத்தில் புதன்கிழமை தொடங்கியது.
2 வாரங்களுக்கு நடைபெறவிருக்கும் நடைபெறவிருக்கும் இந்த விசாரணை, மாகாணத்தின் 23 கிராமங்களிலும், 3 குடிசைப் பகுதிகளிலும் நடத்தப்படும். இந்தப் பிரச்னையில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான முதல் கட்ட முயற்சி இதுவாகும். இனி, விசாரணை மேற்கொள்வதற்கான பகுதிகள் விரிவாக்கப்படும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.
பெளத்த மதத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மரில், லட்சக் கணக்கான ரோஹிங்கயா முஸ்லிம் இன மக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். வங்க மொழி பேசி வரும் அவர்கள், ராக்கைன் மாகாணத்தில் பல தலைமுறைகளாக வசித்து வந்தாலும், அவர்கள் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறிவர்களாகவே கருதப்பட்டு வருகின்றனர்.
கடந்த 1982-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது. 2014-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில்கூட ரோஹிங்கயா முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டனர்.
இத்தகைய சூழலில், தங்களது உரிமைகளுக்காக ரோஹிங்கயா முஸ்லிம்களில் சிலர் மியான்மர் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடத் தொடங்கினர். இந்தச் சூழலில், ரோஹிங்கயா விடுதலைப் படையினர் கடந்த ஆண்டு நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் 71 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி ராக்கைன் மாகாணத்தில் ராணுவம் தனது தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியது. இதில் 730 சிறுவர்கள் உள்பட 6,700 ரோஹிங்கயா இனத்தவர்கள் பலியானதாக எல்லைகள் அற்ற மருத்துவர்கள்' அமைப்பு தெரிவித்தது.

 

More from the section

குல்பூஷணை உடனடியாக விடுவிக்க வேண்டும்: சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையீடு
இந்தியாவுக்கான தூதரைத் திரும்ப அழைத்து பாகிஸ்தான் ஆலோசனை
பிரிட்டன் தொழிலாளர் கட்சியிலிருந்து 7 எம்.பி.க்கள் விலகல்
பொருளாதாரப் போர் தொடுத்துள்ளது அமெரிக்கா: ஈரான் தாக்கு
வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு: ஷாபாஸ் ஷெரீஃப் குற்றவாளி என அறிவித்தது லாகூர் நீதிமன்றம்