21 ஏப்ரல் 2019

இடாய் புயல்: ஜிம்பாப்வே, மொசாம்பிக் நாடுகளில் 300-க்கும் மேற்பட்டோர் பலி: உதவிக்கரம் நீட்டியது ஐ.நா

DIN | Published: 21st March 2019 12:59 AM
ஜிம்பாப்வேயின் சிமனிமனியில் புதன்கிழமை மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர்.


ஜிம்பாப்வே, மொசாம்பிக் ஆகிய நாடுகளில் இடாய் புயல் தாக்கியதில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் மாயமான நிலையில், புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்வற்கு ஐ.நா.வின் கீழ் இயங்கும் அமைப்புகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
இந்தியப் பெருங்கடலில் உருவான இடாய்  புயல் கடந்த வெள்ளிக்கிழமை மொசாம்பிக் அருகே கரையை கடந்தது. அதனால், மொசாம்பிக் மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக மொசாம்பிக் அதிபர் பிலிப் நியூஸி கூறுகையில், கடந்த 4 நாள்களில் 200-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். 
3,50,000-க்கும் மேற்பட்டோர் வீடு, பொருள்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படகுகளில் சென்று சில இடங்களில் உள்ள மக்களை மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர். 
படகுகள் செல்ல முடியாத இடங்களில் சிக்கியுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாக உணவு கொடுக்கப்பட்டு வருகிறது. நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாள்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
ஜிம்பாப்வே: இதனிடையே, மொசாம்பிக்கை தாக்கிய இடாய்  புயல் அண்டை நாடான ஜிம்பாப்வேயையும் கடுமையாக தாக்கியது. இந்த புயல் தாக்கியதில் கிழக்கு ஜிம்பாப்வே பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஜூலி மோயோ தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பு குறித்த அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிழக்கு ஜிம்பாப்வே பகுதியில் புயல் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மனிகாலாண்ட் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் மாயமானதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ தொடலாம் என்று அஞ்சப்படுகிறது என்றார்.

ஐ.நா. உலக உணவு திட்டம்
ஐ.நா.வின் கீழ் செயல்படும் உலக உணவு திட்டம் அமைப்பின் மூலமாக, மொசாம்பிக் மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது. சுமார் 6 லட்சம் மக்களுக்கு  உதவும் வகையில், 5 டன் எடையுள்ள உணவு பொருள்களை ஐ.நா. அனுப்பியுள்ளது.
யுனிசெஃப்: புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு, புதிதாக குடிசை அமைத்து தருவது, அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதாரப் பொருள்களை ஏற்பாடு செய்வது, வெள்ளத்தில் புத்தகங்களை இழந்த  மாணவர்களுக்கு புதிதாக புத்தகங்களை வழங்குவது ஆகிய உதவிகளை ஐ.நா.வின் கீழ் இயங்கும் யுனிசெஃப் மேற்கொண்டுள்ளது.


 

More from the section

வெளியுறவுத் துறை செயலர் இன்று முதல் சீன சுற்றுப் பயணம்
அபுதாபியில் முதல் ஹிந்து கோயிலுக்கு அடிக்கல்: ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்பு
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த 2 இந்தியர்கள் கைது
20-ஆம் நூற்றாண்டின் பெரும் விபத்துகள்: ஐ.நா. பட்டியலில் போபால் விஷவாயு சம்பவம்
ஆப்கன்: அமைச்சகம் முன் தற்கொலைத் தாக்குதல்: 2 பேர் பலி