12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

DIN

பொதுப் பலன்கள்

2024-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 1-ஆம் தேதி நிகழ்கிறது. குரோதி வருஷம் சித்திரை மாதம் 18ம் நாள் ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் க்ருஷ்ணபக்ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22க்கு - மாலை 05.01க்கு துலா லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

தற்போது மாறக்கூடிய குருபகவான் ரிஷப ராசியிலிருந்து தனது ஐந்தாம் பார்வையால் கன்னி ராசியையும் - ஏழாம் பார்வையால் விருச்சிக ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் மகர ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விடப் பார்க்கும் பலமே அதிகம். எனவே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.

நன்மை பெறும் ராசிகள்: கடகம், கன்னி, விருச்சிகம், மகரம்

நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: மேஷம், ரிஷபம், சிம்மம், கும்பம்

பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மிதுனம், துலாம், தனுசு, மீனம்

மேஷம்

செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷ ராசியினர் கம்பீரமான தோற்றத்தை கொண்டவர்கள். பரந்த மனப்பான்மை உடையவர்கள். இந்த பெயர்ச்சியில் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறுவீர்கள்.

அஸ்வினி: இந்த பெயர்ச்சியில் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள்.

பரணி: தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். எதிர்பாராத செலவு இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த பெயர்ச்சியில் பிரச்னைகள் மற்றும் விவகாரங்கள் தீர ஆலோசனை செய்து முடிவெடுப்பீர்கள். நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள்.

பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.

ரிஷபம்

சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷப ராசியினர் வசீகரமாக பேசுவதில் வல்லவர். இந்த பெயர்ச்சியில் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகலாம். தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.

கார்த்திகை 2, 3, 4 பாதம்: இந்த பெயர்ச்சியில் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

ரோகிணி: தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும்.

மிருகசிரீஷம் 1, 2, பாதம்: இந்த பெயர்ச்சியில் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும்.

பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

மிதுனம்

புதனை ராசிநாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்கள் சாதுவான தோற்றத்தைக் கொண்டவர். குரு பகவானால் திட சிந்தனைகளுடன் உங்கள் குறிக்கோள்களை அடைவீர்கள்.

மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்: மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

திருவாதிரை: இந்த பெயர்ச்சியில் அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்துக் கொள்வீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்: உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.

பரிகாரம்: முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

கடகம்

சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட கடக ராசி நேயர்கள் எதையும் திட்டமிட்டு செய்பவர்கள். இந்த பெயர்ச்சியில் மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம்.

புனர்பூசம் 4ம் பாதம்: இந்த பெயர்ச்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்வது நல்லது.

பூசம்: இந்த பெயர்ச்சியில் பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.

ஆயில்யம்: இந்த பெயர்ச்சியில் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். பணவரத்து இருக்கும்.

பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று 16 முறை வலம் வரவும்.

சிம்மம்

சூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசியினர் தன்மானம் அதிகம் கொண்டவர்கள். தடைபட்டு வந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும்.

மகம்: தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

பூரம்: பணவரத்து திருப்தி தரும். நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம்.

உத்திரம் 1ம் பாதம்: துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். நியாயமாகவும், நேர்மையாகவும் அதனை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும்.

பரிகாரம்: ஞாயிறுதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.

கன்னி

புதனை ராசிநாதனாகக் கொண்ட கன்னி ராசியினர் புத்திக்கூர்மை கொண்டவர்கள். இந்த பெயர்ச்சியில் நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம்.

உத்திரம் 2, 3, 4 பாதம்: குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அஸ்தம்: புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவீர்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் மதிப்பை உணருவர். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

சித்திரை 1, 2, பாதம்: தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வரவும்.

துலாம்

சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட துலா ராசிக்கு தொழில் நுணுக்கம் தெரிந்தவர்கள். இந்த பெயர்ச்சியில் எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. திடீர் உடல்நல பாதிப்பு உண்டாகலாம்.

சித்திரை 3, 4 பாதம்: எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம்.

சுவாதி: இந்த பெயர்ச்சியில் எந்த நேரத்திலும் தகுதி குறையாமல் செயல்படுவீர்கள். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

விசாகம் 1, 2, 3ம் பாதம்: சிறந்த பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் குல தெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.

விருச்சிகம்

செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே நீங்கள் வாக்கிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். மனோதைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும்.

விசாகம் 4ம் பாதம்: எத்தனை தடை வந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின்வாங்க மாட்டீர்கள். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்.

அனுஷம்: தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

கேட்டை: எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவீர்கள். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினரின் படைப்புத்திறன் வளரும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும்.

தனுசு

குரு பகவானை ராசிநாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் பழமையான விஷயங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

மூலம்: எந்த காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கும். நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர். நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது. அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.

பூராடம்: பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

உத்திராடம் 1ம் பாதம்: வீண் அலைச்சல் உண்டாகலாம். மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும்.

பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோியிலை வலம் வரவும்.

மகரம்

சனி பகவானை ராசிநாதனாகக் கொண்ட மகர ராசியினர் வாதாடுவதில் வல்லவர்கள். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். ஆனால் மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது.

உத்திராடம் 2, 3, 4 பாதம்: குடும்பத்தில் அக்கறை காட்டுவீர்கள். நீங்கள் கவலை, பயம் இல்லாமல் செயல்படக்கூடியவர். எல்லா விஷயத்திற்கும் மனசாட்சியை நம்புபவர். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும்.

திருவோணம்: தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும்.

அவிட்டம் 1,2 பாதம்: இந்த பெயர்ச்சியில் திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாப கரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும்.

கும்பம்

சனி பகவானை ராசிநாதனாகக் கொண்ட கும்ப ராசியினர் உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடைபவர்கள். பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துணிச்சல் உண்டாகும்.

அவிட்டம் 3, 4 பாதம்: பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும்.

சதயம்: எதையும் திட்டவட்டமாக பேசி காரியங்களில் குழப்பம் இல்லாமல் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரத்து கூடும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதம்: உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் வாக்கு வாதங்கள் உண்டாகலாம்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.

மீனம்

குரு பகவானை ராசிநாதனாகக் கொண்ட மீன ராசியினர் இரக்க சிந்தனை கொண்டவர்கள். இந்த பெயர்ச்சியில் வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம்.

பூரட்டாதி 4ம் பாதம்: எப்போதும் ஒரே கருத்தை கொள்ளாமல் அவ்வப்போது எண்ணங்களும் கருத்துக்களும் மாறிக்கொண்டே இருக்கும். நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள்.

உத்திரட்டாதி: பிரச்னைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள்.

ரேவதி: சுறுசுறுப்பாகவும் அடுத்தவரை அடக்கி ஆளும் திறமையும் வெளிப்படும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும்.

பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்