DIN
இந்துக்களின் முக்கிய தமிழ் கடவுளான முருகனைத் தேடுவதும், அவரின் திதி அன்று வழிப்பட்டு விதியை வெல்ல முயற்சிப்பதும் முக்கியமான ஒன்று. ஒருவர் ஜாதகத்தில் மங்களகாரகன் செவ்வாயின் பலத்தை சரிசெய்ய முருகரை பற்றுவது நன்று.
ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் பலத்தின் தன்மையை பொறுத்து சரியான கோயிலுக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு குறையாவது கட்டாயம் இருக்கும்.
ஜாதகத்தில் ஏற்படும் தோஷம் மற்றும் கெட்ட தசை புத்தி அகலவும், குழப்பம், திருமணத்தடை, குடும்ப ஒற்றுமையின்மை, தொழிலில் மந்தம், நோய், குழந்தையின்மை என வாழ்வில் ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும். அவற்றைத் தவிடு பொடியாக்க மகா சஷ்டி விரதம் சரியான அருமருந்து.
செவ்வாயின் ரூபமான முருகரை வணங்குவதும் அவரின் காலை பற்றிக்கொள்வது சிறப்பு. இன்று முதல் கந்த சஷ்டி ஆரம்பம்.
12 ராசிக்காரர்களும் வழிப்படும் முருகன் கோயிலைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
மேஷம்
அதிபலம் பெற்ற கிரகங்கள் சூரியன், செவ்வாய் மற்றும் பலமற்ற நிலையில் கர்மக்காரகன் சனி.
இந்த ராசிக்காரர்கள் தலைமை பொறுப்பு, புகழ், போர்க்குணம், பெரியோர் சொல்வதை வேதவாக்காக எடுத்து செயல்படுவார்கள்.
மேஷ ராசிகாரர்களுக்கு சூட்டின் தன்மை அதிகம் என்பதால் இவர்களுக்கு வேகம், தொழிலில் அழுத்தம் அதிகம். அதனால் இவர்கள் தங்கள் உயர்வுக்காக உழைப்பையும் ஓட்டத்தையும் அதிகப்படுத்தவேண்டும். இவர்கள் அக்னியின் ரூபாமான முருகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவது சிறந்தது.
கோயில்: திருத்தணிகை முருகன், ரத்தினகிரி முருகன், எண்கண் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி.
ரிஷபம்
சுக்கிரன் ஆட்சி மற்றும் சந்திரன் அதிபலம் பெற்ற இவர்களுக்கு தாய் பாசமிக்கவராக, கலகலப்பானவராக, கலையில் ஆர்வமிக்கவராக, குறிக்கோள் மிக்கவராக, அழகுடன் கூடிய தனித்துவமானவராக இருப்பார்கள்.
இவர்கள் வெள்ளி கிழமை / சுக்கிர ஹோரையில் நெய்விளக்கு ஏற்றுவது விசேஷம்.
கோயில்: சென்னிமலை சுப்பிரமணியசாமி, வல்லக்கோட்டை முருகன், திருவிடைக்கழி கந்தன்.
மிதுனம்
இந்த ராசிகாரர்கள் புதனின் பலம் கொண்ட அதிபுத்திசாலிகள், பேச்சாற்றல் மிக்கவராக, இரட்டை குணமிக்கவர்.
இவர்களுக்கு குருவின் ஆசீர்வாதம் கொஞ்சம் குறைவு. இவர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு வேலையில் ஈடுபாடு இருப்பதால், இவர்களுக்கு சரியான வெற்றியின் பாதை காட்ட, தீர்க்கமான முடிவுக்கு செவ்வாயின் ரூபமான முருகருக்கு சஷ்டி திதி நாள்களில் மௌன விரதம் இருக்கலாம்.
செவ்வாழை / பால்பாயாசம் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கும் கொடுப்பது நன்று.
கோயில்: பழமுதிர்சோலை முருகன், அழகாபுத்தூர் சங்கு சக்கர முருகன், வடபழனி ஆண்டவர்.
கடகம்
இந்த ராசிகரார்கள் குரு சந்திரன் பலமுண்டு, செவ்வாயின் பலம் குறைவு. நண்டு தன்னுடைய குட்டிகளை அரவணைத்து செல்வது போல குடும்பத்தை ஒற்றுமையாக எடுத்துச் செல்லும் பாசக்காரர்கள், செல்வமிக்கவர், தைரியம் குறைவு.
இவர்களுக்கு சனியின் பார்வையோ சேர்க்கையோ இல்லாமல் இருந்தால் நன்று. இவர்களுக்கு செவ்வாயின் பலம் கூட்ட செவ்வரளி மாலை முருகருக்கு அணிவித்து கந்த குருக்கவசம் பாடினால் சிறப்பு.
கோயில்: விண்ணில் போர்புரிந்த திருபோரூர் தலம், திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் மற்றும் மயிலம் முருகன்
சிம்மம்
இந்த ராசியில் சூரியன் மூலத்திரிகோண கூடிய பலம் கொண்ட இவர்கள் மனபலம் அதிகம்.
யாருக்கும் அடிபணிய மாட்டார்கள், பேச்சாற்றல், பிரகாசமிக்கவர், தவறை சுட்டெரிக்கும் முறையில் வெளிப்படுத்துபவர்கள்.
இவர்கள் ஒரு செயலில் வெற்றி பெரும் வரை போராடிக் கொண்டே இருப்பார்கள். முருகருக்கு தேர் இழுப்பது, காவடி எடுப்பது அவர்களின் வெற்றிக்கு வழி.
கோயில்: நிலத்தில் போர் புரிந்த திருப்பரங்குன்றம், வயலூர் முருகன் மற்றும் சிம்மத்தில் வீற்றுருக்கும் ஆண்டார்குப்ப பாலசுப்பிரமணியர்.
கன்னி
இந்த ராசிகாரர்களுக்கு புதனின் அதிபலத்தால் கலை மற்றும் கூர்மையான புத்தி, மென்மையானவர், அறவழியாளர், மற்றும் கைதொழிலில் ஆர்வமிக்கவர்.
சுக்கிரனும் செவ்வாயும் இங்கு பலம் குறைவாக உள்ளதால் ஒருசிலருக்கு திருமண வாழ்க்கை குறை அல்லது தீரா நோய் இருக்கும்.
இவர்கள் ஒரு மண்டலம் சஷ்டியில் விரதம் இருந்து மற்றும் வேல்மாறல் படிப்பதால் நல்வழி கிட்டும்.
கோயில்: சிறுவாபுரி பாலசுப்பிரமணியர், நடுபழனி மரகத தண்டயுதபாணி சுவாமி, உத்தரமேரூர் பாலசுப்பிரமணியர்.
துலாம்
இந்த ராசிகாரர்க்கு மூலதரிகோண ஆட்சி பெற்ற சுக்கிரன், உச்ச பலம் பெற்ற சனி, சூரியன் பலமில்லாமலும் இருப்பார்கள்.
இந்த ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்கள் பிரச்னையை சமாளிக்கும் தன்மை மிக்கவர், மற்றவர்களை சந்தோசப்படுத்தும் குணம், நீதிவான், கஞ்சதன்மை, வியாபார நோக்கமிக்கவர்.
காற்றின் வேகம் போல செயலில் திடீர் முடிவு எடுப்பர். இவர்கள் மகா சஷ்டி விரதம் இருந்து முருகனை நினைத்து தான தர்மம் செய்வது நன்று.
கோயில்: பழனி மற்றும் அங்குள்ள போகர் மற்றும் புலிப்பாணி சித்தர் வழிபாடு, திருச்செந்தூர் முருகர், சிக்கல் சிங்கரா வேலன்.
விருச்சிகம்
இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பலம் அதிகம் இருப்பதால் வேகம் இருக்கும். இவர்கள் நில் கவனி செல் என்ற கோட்பாட்டின் வழியில் செல்ல வேண்டும்.
சந்திரன் பலமில்லாமல் இருப்பதால் பாசத்திற்கு ஏங்குபவராகவும், ஆன்மீக ஈடுபாடு உடன் கூடிய தூய்மையான மனம் கொண்டவராகவும், மற்றவர் நலனில் கவனமிக்கவராகவும், ஆராய்ச்சியாளராகவும் இருப்பர்.
தேளின் குணம் இருப்பதால் இவர்கள் பேச்சில் ஒரு விஷமத்தன்மை இருக்கும். செவ்வாய், வியாழன் அல்லது விசாக நட்சத்திரத்தில் முருகரை வழிபடுவது சிறந்தது.
கோியில்: சென்னை கந்த கோட்டம், கோபிசெட்டிபாளையம் பச்சைமலை சுப்பிரமணியர், எட்டுக்குடியில் உள்ள முருகன், வான்மீக சித்தர். மற்றும் இந்திரனின் யானை வாகனம் உள்ள முருகனை தரிசிப்பது நன்று.
தனுசு:
இந்த ராசிக்காரர்கள் குருவின் ஆசீர்வாதம் மிக்கவர்கள்.
செல்வந்தர். குறிக்கோள் கூடிய கூர்மையான புத்தி, போராட்ட குணமும் இருக்கும். இவர்கள் எவ்வளவு உழைத்தாலும் கடைசி நேரத்தில் செயலுக்கான பலன் குறைவாகக் கிட்டும்.
இவர்களுக்கு வெற்றி தோல்வி என்பது மாறி மாறி வரும். இவர்கள் வியாழன் விரதம் இருந்து காவடி அல்லது தங்கத்தேர் இழுப்பது சிறந்தது.
கோயில்: சுவாமிமலை முருகன், குன்றத்தூர் முருகன், திருவையாறு தனுசு சுப்ரமண்யர் .
மகரம்
இங்கு கர்மக்காரன் சனியின் மற்றும் செவ்வாய் பலம் பெற்று இருப்பதால் தொழிலில் சிக்கல் கோபம் கூடிய பேச்சும், ஆன்மிக தொண்டு, ஊனமிக்கவருக்கு உதவும் இரக்க குணமும், குடும்ப வாழ்க்கையில் குறை இருக்கும்.
ஆனால் குருவின் பலம் குறைவாக இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் வியாழக்கிழமை முருகன் கோயிலில் உள்ள தேவர்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவது அவசியம்.
கோயில்: குமரன்குன்றம், எழுச்சூர் நல்லிணக்கேஸ்வரர் கோயிலில் உள்ள முருகர், மருதமலை முருகர், பேளுக்குறிச்சி பழனியப்பன்.
கும்பம்
இந்த ராசிக்காரர்கள் சனியின் மூலதிரிகோண பலமிருப்பதால் பல்வேறு தொழிலில் ஆர்வம், உழைப்பால் உயரத்தைத் தொடுவார்கள்.
சோகத்தையும் இன்பத்தையும் மனதில் பூட்டி வைப்பவர், முதலாளித்துவ மிக்கவர், இரக்கமிக்கவர். இவர்கள் தங்களால் முடிந்தவரைப் பழமையான முருகன் கோியிலுக்கு புனரமைக்கத் தேவையான பொருள்கள் வாங்கி கொடுப்பது நன்று.
கோயில்: கந்தாசரம கோவில், திருச்செங்கோட்டு முருகன், வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரர், திருநள்ளாற்றில் மாம்பழத்துடன் காட்சி தரும் முருகன்.
மீனம்
இந்த ராசிக்காரர்கள் பெரியவர்கள் ஆசீர்வாதம் மற்றும் குருவின் பலம் பெற்றவர்கள். இந்த ராசிக்காரர்கள் மீனின் ஓட்டம் போல தன்னுடைய இருப்பிடத்தை அல்லது வேலையையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
இவர்கள் புத்திர பாக்கியம் பெற, மற்றும் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் நிரந்தரமாக இருக்க வருடம் ஒரு முறையாவது முருகன் கோியிலில் உள்ள தீர்த்ததில் குளித்து சாதுக்களுக்கு உணவு, நீர், மோர் மற்றும் காவி உடை வாங்கி தருவது நன்று.
கோயில்: திருச்செந்தூர், சுவாமிமலை, வைத்தீஸ்வரன் கோியிலில் உள்ள தன்வந்தரி, மருதமலை பாம்பாட்டி சித்தர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.