ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

DIN

வாக்கிய பஞ்சாங்கப்படி, சித்திரை மாதம் 13ம் தேதி (26.04.2025) மாலை 04.20க்கு கன்னியா லக்னத்தில் ஸ்ரீராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், ஸ்ரீகேது பகவான் கன்னியா ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.

பொதுப் பலன்கள்

உலகளவில் அரசு சார்ந்த விஷயங்களில் சிறிது பிரச்னைகள் தலைதூக்கலாம். அரசு ஒவ்வொரு முடிவையும் தவறாக எடுப்பதும் அதற்குப் பரிகாரமாக மேல் நிலையில் இருக்கும் அதிகாரிகள் அதைச் சரி செய்வதுமாக இருக்கும். ராகுவினுடைய மாற்றம் சனி வீட்டில் இருக்கிறது. நாடுகளுக்குள் மோதல்கள் வரலாம். இவ்வருடம் வெப்பம் அதிகமாக இருக்கும்.

பணநடமாட்டம் சீராக இருக்கும். கல்வி சார்ந்த விஷயங்களில் தொய்வு ஏற்படும். அதேவேளையில் குருவின் பார்வையால் ராகு பலம் பெறுகிறார். ஆன்மிகம் மிக அதிகமான வளர்ச்சி காணும். பூமி நிலம் சம்பந்தமான பிரச்னைகள் அதிகமாவதும் அதை தீர்க்க நீதிமன்றத்தை நாடுவதும் அதிகமாகும். அறுவைச் சிகிச்சை சம்பந்தமான புதிய கண்டுபிடிப்பு உருவாகும்.

கலப்புத் திருமணங்கள் அதிகமாகும். நிலம் - நீர் - காற்று - ஆகாயம் - நெருப்பு என பஞ்சபூதங்கள் மூலமாகவும் மக்களுக்கு பிரச்னைகள் ஏற்படும். தற்கொலைகள் அதிகமாகும்.

மேஷம்

நினைத்தது நிறைவேறும் பெயர்ச்சியாக அமையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இதுவரை தடைப்பட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைவிலகி இனிதாக நடைபெறும். புத்திர பாக்கியம் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும்.

அஸ்வினி: நீங்கள் பயமின்றி எந்த காரியத்திலும் இறங்கலாம். அவசரமாக எதையும் செய்ய தோன்றும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும்.

பரணி: வாடிக்கையாளர்களிடம் சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில் வேகம் காட்டுவீர்கள்.

கார்த்திகை 1ம் பாதம்: கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக செய்யும் வேலைகளில் தடை ஏற்படலாம்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வலம் வரவும்.

ரிஷபம்

இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: அவசரப்படுவதை தவிர்ப்பது நன்மை தரும். வீண் செலவும், அலைச்சலும் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம்.

ரோகிணி: உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை. தீ, ஆயுதம் இவற்றை கையாளும் போது கவமனாக இருப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.

மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்: மற்றவர்களுக்கு உதவி செய்யபோய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை. மாணவர்களுக்கு: கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று தேங்காய் தீபம் ஏற்றி 11 முறை வலம் வரவும்.

மிதுனம்

நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் - மனைவிடையே சிறு சிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. பொன்பொருள் சேரும்.

மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்: எல்லாவிதமான முன்னேற்றத்தையும் தரும். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.

திருவாதிரை: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்: தொலைதூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். காரிய தடை நீங்கும்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று நல்லெண்ணையில் தீபம் ஏற்றி 7 முறை வலம் வரவும்.

கடகம்

ராகு குடும்ப ஸ்தானத்திற்கு வந்தாலும் உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான குருவுடன் இணைந்திருக்கிறார். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

புனர்பூசம் 4ம் பாதம்: மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பூசம்: சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும்.

ஆயில்யம்: குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: திங்கள்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று இலுப்பை எண்ணையில் பஞ்சமுக தீபம் ஏற்றி வணங்கி 16 முறை வலம் வரவும்.

சிம்மம்

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும்.

மகம்: தடைபட்டு வந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும்.

பூரம்: அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆர்டர்கள் பெறுவதில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும்.

உத்திரம் 1ம் பாதம்

கௌரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடந்து முடியும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.

கன்னி

நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றியினைப் பெற்றிடுவீர்கள். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் சுபவிரயங்கள் ஏற்படும் என்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும்.

உத்திரம் 2, 3, 4 பாதம்: நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள்.

அஸ்தம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுக்காக பொறுப்புகள் ஏற்கும் போது மிகவும் கவனமாக இருப்பது வீண்பழி ஏற்படாமல் தடுக்கப்படும். அனுபவபூர்வமான அறிவுதிறன் கூடும்.

சித்திரை 1, 2, பாதம்: செலவு செய்ய நேரிடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு மற்றவர்கள் உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோயிலுக்குச் சென்று நெய் அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வரவும்.

துலாம்

குடும்பத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. சுக வாழ்வு அமையும். சொந்தமாக வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கக்கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும்.

சித்திரை 3, 4 பாதம்: எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. ராசியாதிபதியால் திடீர் உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம். பணவரத்து இருக்கும்.

சுவாதி: தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நன்மைதரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும்.

விசாகம் 1, 2, 3ம் பாதம்: குடும்பத்தில் கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைப்பட்டு வந்த காரியங்கள் நடந்து மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் லக்ஷ்மி பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.

விருச்சிகம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும்.

விசாகம் 4ம் பாதம்: மனோதைரியம் அதிகரிக்கும். எல்லாகாரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும்.

அனுஷம்: தொழிலில் இருந்து வந்த போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள். கடன் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும்.

கேட்டை: குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோயிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும்.

தனுசு

குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

மூலம்: எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்னைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்ம சிந்தனை அதிகரிக்கும்.

பூராடம்: வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும்.

உத்திராடம் 1ம் பாதம்

கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள் மற்றும் துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும்.

பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும்.

மகரம்

இந்த ராகு கேது பெயர்ச்சியால் அதீதமாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், குடும்பத்தில் முன்னேற்றமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம். திருமன சுபகாரியங்களில் சிறு சிறு தடைகளுக்கு பின் வெற்றிகிட்டும். பணம் கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் இருப்பது நல்லது.

உத்திராடம் 2, 3, 4 பாதம்: மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும்.

திருவோணம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும்.

அவிட்டம் 1,2 பாதம்: உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும்.

கும்பம்

பணவரவுகளுக்கான பஞ்சமிருக்காது. கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். நல்ல வரன்கள் தேடிவரும். புத்திர பாக்கியமும் உண்டாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும்.

அவிட்டம் 3, 4 பாதம்: பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துணிச்சல் உண்டாகும். எதை பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள்.

சதயம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதம்: கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.

மீனம்

தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் மறையும். வீண் வம்பு, வழக்குகள் முடிவிற்கு வரும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும்.

பூரட்டாதி 4ம் பாதம்: வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம்.

உத்திரட்டாதி: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம்.

ரேவதி: அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது.

பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..