இணையதளச் செய்திப் பிரிவு
மாறிவரும் வாழ்க்கைச் சூழலால் குழந்தைகளுக்குக்கூட இன்று உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் குழந்தைகளிடையே உயர் ரத்த அழுத்தம் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகளவில் கடந்த 20 ஆண்டுகளில் குழந்தைகளிடையே உயர் ரத்த அழுத்தம் இருமடங்காக அதிகரித்துள்ளது.
உடல் பருமன் உள்ள குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்டவை இப்போது இல்லையென்றாலும் பிற்காலத்தில் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடல் பருமன் மற்றும் அதனால் ரத்த அழுத்தம் இருந்தால் உணவுப்பழக்கவழக்கம், உடல் செயல்பாடுகள் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் சரிசெய்ய முடியும் என்கின்றனர்.
மிகவும் மோசமான உணவுப்பழக்கவழக்கம், உடல் செயல்பாடு இல்லாதது, குடும்பத்தில் யாருக்கேனும் உயர் ரத்த அழுத்தம் இருப்பது, பள்ளியில் மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் பருமன் உள்ளிட்டவை முக்கிய காரணங்கள்.
குழந்தைகள் அதிகமாக ஸ்மார்ட்போன், டிவி அதிகம் பார்ப்பதால் உடல் செயல்பாடுகள் குறைகின்றன. அவர்களின் உணவுப்பழக்கவழக்கமும் மாறிவிட்டதால் உடல் பருமன் ஏற்பட்டு அதனால் பிற விளைவுகளும் ஏற்படுகின்றன.
குழந்தைகளுக்கு காலையில் தலைவலி, அதிக சோர்வு, எரிச்சல், மூச்சுத்திணறல், திடீர் எடை அதிகரிப்பு, இரவில் குறட்டை விடுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது அவசியம்.
உடல் பருமன் மற்றும் இதர பிரச்னைகள் உள்ள குழந்தைகளுக்கு ரத்த அழுத்தத்தை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். குழந்தைகள் தினமும் குறைந்தது 40-50 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
உணவில் அதிக பழங்கள், காய்கறிகள் இருப்பதுடன் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகளைத் தவிர்க்கவும் வேண்டும். குழந்தைகள் வயதுக்கேற்ப தூக்கம் சீராக இருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.