சனிப்பெயர்ச்சி பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

DIN

பொதுப் பலன்கள்..

குரு வீட்டிற்கு சனி மாறுவதால் சுப நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய தடை இருக்கும். திருமணம் சம்பந்தப்பட விஷயங்களில் தொய்வு ஏற்படும். ஆனால் பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரயங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும்.

அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும்.

இடி மின்னல் அதிகம். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம்.

உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். புராதன ஆலயங்களுக்கு அரசு கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும்.

மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசு உருவாக்கும். பல முக்கிய வழக்குகளுக்கு இந்த ஆண்டு எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும்.

மேஷம்

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சரளமான பண வரவால் சந்தோஷம் அடைவீர்கள்.

அஸ்வினி: எந்த சூழ்நிலையிலும் தங்களது தனித்தன்மையை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்னை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள்.

பரணி: தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

ரிஷபம்

கடும் குழப்பத்திற்குப் பிறகு மனதில் தெளிவு பிறக்கும். திட்டமிடாமல் காரியங்களைச் செய்யும்போது அலைச்சல்கள் அதிகரிக்கும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம்.

ரோகிணி: எவரையும் கண்டு அஞ்சாமல் தன் மனசாட்சிப்படி செயல்படுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். புத்தி தெளிவு ஏற்படும்.

மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்: அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வரவும்.

மிதுனம்

சற்று மந்தமான நிலை உண்டாகலாம். மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர்கொள்ளலாம்.

மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்: திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும்.

திருவாதிரை: உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்னைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.

பரிகாரம்

புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.

கடகம்

பொருளாதார நிலை மேம்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள்.

புனர்பூசம் 4ம் பாதம்: வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும். எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றி கிடைக்கும். யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது.

பூசம்: எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து எடுத்து கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.

ஆயில்யம்

மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும்.

பரிகாரம்: அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

சிம்மம்

செழிப்போடு செல்வாக்கையும் உங்களுக்கு அள்ளித் தருவார் சனிபகவான். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள்.

மகம்: குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

பூரம்: வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

உத்திரம் 1ம் பாதம்

பணவரவு அதிகமாகும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோயிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.

கன்னி

இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். எந்த வேலையை எடுத்தாலும் உறுதியான எண்ணத்துடன் பணியாற்ற வேண்டும். உடலில் சோர்வு, மனதில் தெளிவின்மையும் கூட உண்டாகலாம்

உத்திரம் 2, 3, 4 பாதம்: முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது.

அஸ்தம்: மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

சித்திரை 1, 2, பாதம்: வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்னைகள் தீரும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

துலாம்

உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும்.உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்கவும். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடி வரும்.

சித்திரை 3, 4 பாதம்: சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும்.

சுவாதி: கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும்.

விசாகம் 1, 2, 3ம் பாதம்: பயணங்களின் போது கவனம் தேவை. வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும்.

பரிகாரம்: குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்

பலவிதமான குழப்பங்கள் இருந்தும் திட சிந்தனைகளுடன் உங்கள் குறிக்கோள்களை அடைவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கு நல்ல வழிகள் உதயமாகும். எதிர்பாராத பதவி உயர்வால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போவீர்கள்.

விசாகம் 4ம் பாதம்: அனுபவ அறிவால் வெற்றியடைவீர்கள். பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள்.

அனுஷம்: குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள்.

கேட்டை: காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். நீண்ட நாட்களாக இருந்த கஷ்டம் நீங்கும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.

தனுசு

உடல் சோர்வு அதிகரிக்கலாம். வருமானம் சீராகவே இருக்கும். கடுமையாக உழைத்துச் செய்யும் காரியங்களில் வெற்றிவாகை சூடுவீர்கள். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளிடம் கவனமாக இருக்கவும்.

மூலம்: எதிரியை தகுந்த நேரம் பார்த்து வெற்றி கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பூராடம்: குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

உத்திராடம் 1ம் பாதம்

புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். கவனம் தேவை. பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும்.

பரிகாரம்: ராகு-கேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.

மகரம்

புத்தி தெளிவுடன் சனி பகவான் சில சந்தர்ப்பங்களில் அவசர புத்தியைக் கொடுப்பார். எதிர்பாராத விதத்தில் தீயவர்களின் தொடர்பும் ஏற்படும். இதற்காக அஞ்சத் தேவையில்லை.

உத்திராடம் 2, 3, 4 பாதம்: தலைமை தாங்கி துணிச்சலுடன்  எதையும் செய்வீர்கள். செலவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

திருவோணம்: பணிபுரியும் இடங்களில் எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம்.

அவிட்டம் 1,2 பாதம்: மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். கடன் பிரச்சனை தீரும்.  இதுவரை இருந்த இறுக்கமான நிலை மாறும். கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க  வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

கும்பம்

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். எப்போதோ உங்களுக்கு உதவியவர்களுக்கு நீங்கள் மனமுவந்து உதவும் காலகட்டம் இது. எவரிடமும் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

அவிட்டம் 3, 4 பாதம்: கடின உழைப்பினால் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். திடீரென்று வரும் கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம். புத்திக் கூர்மையுடன் செயல்களை செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

சதயம்: தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதம்: மருத்துவம் தொடர்பான செலவு ஏற்படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றை கையாளும் போது கவனமாக இருப்பது நல்லது. புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

மீனம்

உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்: எந்த நிலையிலும் அடுத்தவர் பற்றி ரகசியங்களை வெளியே சொல்லாமல் மனதில் வைத்துக்கொள்வீர்கள். பணவரத்து அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும்

உத்திரட்டாதி: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு தேவையான பொருள்கள் வாங்குவீர்கள்.

ரேவதி: பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல்திறன் கூடும். மாணவர்கள் பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை.

பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..