மே மாதம் யாருக்கெல்லாம் கைகொடுக்கும்!

DIN

மேஷம்

உங்கள் பிடிவாதத்தை விட்டுவிட்டு சற்று இறங்கி வாருங்கள். உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வாகனம், இயந்திரங்கள், நீர்நிலைகளில் கவனம் தேவை. சோம்பல் கூடவே கூடாது. தந்தையாருடன் நல்ல இணக்கமான சூழ்நிலை நிலவும்.

குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். கடன் கொடுப்பதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவும். வாக்கு கொடுப்பதற்கு முன் யோசனை செய்து கொடுக்கவும். காப்பாற்ற முடியாமல் போகலாம். தைரியம் சிறக்கும். அதற்காக அசட்டு தைரியம் எதிலும் கூடாது. இளைய சகோதரத்திடமிருந்து அனுகூலம் கிடைக்கும். வீடு, மனை, வாகனம் யோகம் உண்டு. பயன்படுத்தி கொள்ளவும்.

உத்யோகஸ்தர்களுக்கு உங்களுக்கு பணியிடத்தினில் அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம்.

தொழிலில் லாபகரமான முதலீடுகளில் முதலீடு செய்ய தகுதியானவர்களின் ஆலோசனைகளை பெற்று செய்யவும். தூங்கப்போகும் முன் வீண் கற்பனைகள், சந்தேகங்கள் கூடவே கூடாது.

பரிகாரம்: தினம்தோறூம் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று வலம் வருவது.

ரிஷபம்

இந்த மாதம் முயற்சி செய்த அளவுக்கு வெற்றி, ஆனால் நினைத்த இடத்திற்கு வரத்தடைகள் என அனைத்தும் இனி மாறும். முயற்சிகளை இருமடங்காக்குங்கள், வெற்றிகள் உங்களைத் தேடி வரும் காலமிது. உங்கள் பொன்னான நேரத்தை அடுத்தவருக்காக வீணாக்காதீர்கள்.

குடும்பத்தில் வாழ்க்கைதுணையுடன் உறவு சிறக்கும். உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவை. வாகனங்களை கையாளும்போது எச்சரிக்கை தேவை. புதிய நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. தந்தையுடன் உறவு சிறக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலமிது.

தொழில் செய்பவர்கள் உங்கள் வியாபாராத்தை பெருக்கும் காலமிது. மிகவும் லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். தூங்கப் போகும் முன் எந்த விதமான யோசனைகளும் வேண்டாம்.

பரிகாரம்: அம்பாளை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய் தொழில் சிறக்கும்.

மிதுனம்

இனிய சொற்கள் பேசும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்திருந்த தனலாபம், தேக ஆரோக்கியத்தில் நன்மை, தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்த சுமூக நிலைமை என அனைத்து நல்ல பலன்களும் அப்படியே நடக்கும்.

குடும்பத்தில் இளையசகோதரத்தின் மூலம் லாபம் கிடைக்கும். சந்தாண பாக்கியம் கிட்டும். தெய்வ யாத்திரை, புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். முன்னோர்களை வழிபட மறக்க வேண்டாம். கோபம் கூடவே கூடாது.

உத்யோகஸ்தர்களுக்கு பணி செய்யும் இடத்தினில் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாடு அயலூர் செல்ல வேண்டி வரலாம்.

தொழில் செய்பவர்கள் லாபகரமான முதலீடுகள் செய்ய தயங்க வேண்டாம். எந்த முதலீடுகளையுமே குறுகிய காலம் செய்யாமல் நீண்ட காலமாக செய்யுங்கள். தாய் தந்தையரை வணங்கி எந்த காரியத்தையும் ஆரம்பித்தால் வெற்றியே.

பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று வலம் வரவும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

கடகம்

குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் சகோதரத்துடன் சின்ன சின்ன நெருடல்கள் இருக்கும். சின்ன சின்ன குழப்பங்களனைத்தும் மறையும். தாய் தந்தை ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை. அவர்களின் மருத்துவ செலவிற்கு சிறிது தொகையை செலவழிக்க வேண்டி வரலாம்.

குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கும். உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டும். முன்னோர்களை அமாவாசை தோறும் வழிபடவும். மறைவிடங்களில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் இருந்த வந்த மனக்கசப்பு நீங்கி புதிய உத்வேகம் பிறக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அங்கீகரிக்கப்படுவீர்கள்.

தொழில் செய்பவர்கள் லாபகரமான முதலீடுகளில் யாரையும் நம்பவேண்டாம். உங்கள் மீது யார் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை நம்பவும்.

பரிகாரம்: புதன்கிழமைதோறூம் ஸ்ரீஹயக்ரீவ வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

சிம்மம்

இந்த மாதம் வாழ்க்கைத்துணையுடன் இருந்த பிணக்க நிலை மாறும். முன்கோபம், பிடிவாதம் நீங்கும். குடும்பத்தில் இருந்த வந்த மந்த நிலை மாறி உற்சாகம் துளிர்விடும். வரவுக்கு மேல் செலவு இருந்த நிலைமையும் மெல்ல மெல்ல மாறும்.

குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை சத்தம் போடுவதை குறையுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களை விட புத்திசாலிகள். தாய், தாய்வழி உறவினர்களுடன் உறவு பலிக்கும். மருத்திவ செலவுகள் காத்திருக்கிறது. கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களிடம் பேசும் போதும் கவனமுடன் பேசவும். தேவையில்லாதவற்றை பேச வேண்டாம்.

தொழில் செய்யும் இடத்தில் தர்க்கம் கூடாது. மேலதிகாரிகள் பளு கொடுக்கலாம். எதையும் செய்யும் திறமை உங்களிடம் இருப்பதை உணருங்கள். பாராட்டுகளும், பரிசுகளும் குவியும்.

கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும்.

பரிகாரம்: சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும்.

கன்னி

இந்த மாதம் உங்கள் பேச்சிற்கும் அடையாளம் கிடைக்கும். சிறிய சிறிய செலவுகள் வந்து பயமுறுத்தினாலும் அதை சமாளித்து விடுவீர்கள். தைரியமாக எதையும் எதிர் கொள்வீர்கள். உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.

தொழில் செய்யும் இடத்தில் இடமாற்றம், பணி பளு வரலாம். எதிர்கொள்ள தயாராகுங்கள். மிகுந்த சாமர்த்தியசாலியான நீங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவீர்கள்.

உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலிடம் கொடுக்கும் அனைத்து வேலைகளையும் திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

குடும்பத்தில் தாய் தாய் வழி உறவினர்கள் மீது உங்களுக்கு நல்ல அபிப்ராயங்கள் எழும். பிள்ளைகள் மீது கவனம் தேவை. அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். தண்ணீரை காய்ச்சிக் குடிக்க பழகுங்கள். அலர்ஜியும் வரலாம். கவனம்.

கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும்.

பரிகாரம்: முடிந்தவரை பெருமாள் ஆலயத்தை வலம் வந்தால் நல்லது.

துலாம்

இந்த மாதம் தடைபட்டிருந்த திருமணம், தடை பட்டிருந்த கல்வி, என தடையாக இருந்த அனைத்து காரியங்களும் தடைகள் விலகி ஒன்றன் பின் ஒன்றாக சிறப்பாக நடக்கும். கடுஞ்சொற்களை பேசுவவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் மதிப்பு உயரும்.

குடும்பத்தில் தாய் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு நீங்கும். வீடு வாகனம் யோகம் சிறப்பாக அமையும். பிள்ளைகள் இல்லாதவர்கள் பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் மேல் பாசமாக இருப்பர். ஆனாலும் நீங்கள் அவர்கள் மேல் சின்ன சின்ன பயங்களை கொண்டிருக்கீறீர்கள். அவர்கள் மனசாட்சிக்கு பயப்படுகிறவர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கலாம்.

தொழில் செய்பவர்கள் எங்கு முதலீடு செய்வது என்பதனை தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள். நீங்களாகவே எதிலும் முயற்சி செய்து பார்த்தல் கூடாது.

பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.

விருச்சிகம்

புதிய உறவுகள் அதிகமாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் வீடு, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் இருந்து வந்த தடைகள் நீங்கும். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம்.

தொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்யும் போது கவனம் தேவை. அனுபவமிக்கவர்களுடன் கலந்து ஆலோசித்து முதலீடு செய்வது நலம். உங்கள் முயற்சி வீண் போகாது.

குடும்பத்தில் பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.

பரிகாரம்: அறுபடை வீடு முருகனை தரிசித்து தீபம் ஏற்றி வழிபட இழுபறி யான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும்.

தனுசு

இந்த மாதம் உங்களது யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் மதிப்பார்கள். உங்களது மேலான யோசனைகளை சொல்ல தயாராகுங்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது. தைரியம் பிரகாசிக்கும். எனவே எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம்.

தொழில் செய்பவர்களுக்கு நண்பர்கள் உதவிகள் செய்வர். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். சிலர் வெளிநாடு பயணங்கள் செல்வீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் கிடைக்க கூடும். வேலை இடமாற்றம், பதவிஉயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும்.

குடும்பத்தில் எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று வியாழக்கிழமைதோறும் வலம் வரவும்.

மகரம்

எதையும் திட்டமிட்டு செய்யும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாகவும், பொறுப்பாகவும் செயல்படவேண்டும். தங்கள் உடல்நிலை சிறப்பான முன்னேற்றம் அடையும். இருந்தாலும் அவ்வப்போது சிற்சில அசௌகரியங்கள் வந்து போகலாம். தூக்கத்திற்கு ஆசைப்படாமல் உழைத்தீர்களென்றால் வெற்றி நிச்சயம். உங்கள் வாக்கு வன்மை கூடும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தினில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்ல பெயர் கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள்.

தொழில் செய்பவர்கள் லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள்.

பரிகாரம்: வில்வ இலையைப் பறித்து சிவனுக்கு அர்ச்சனைக்குக் கொடுக்கவும்.

கும்பம்

நம்பியவர்களை கைவிடாத கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த காரியத்தையும் துணிந்து செய்வீர்கள். இளைய சகோதரத்தின் உடல்நிலையில் கவனம் தேவை. தாயார் தாய்வழி உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் யோகம் ஏற்படும். ரொம்ப நாளாக வசூலாகாமல் இருந்த கடன் வசூலாகும்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். உங்கள் பேச்சு எடுபடும். முக்கியஸ்தர்களின் பழக்கம் ஏற்படும். பணியிட மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு வேலையே மாறலாம்.

தொழில் செய்பவர்கள் முதலீடுகள் செய்யும்போது மனைவியின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். தூங்கப் போகும் போது தேவையற்ற வீண் குழப்பங்களை களையுங்கள்.

குடும்பத்தில் பிள்ளைகளின் படிப்பு மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் பிள்ளைகள் படிப்பில் சாதனைகள் புரிய வேண்டிய காலமிது.

பரிகாரம்: புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சந்தணம், குங்குமம் கொடுத்து வழிபடவும்.

மீனம்

காரியத்தில் கண்ணாக இருக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியின் விளிம்பில் சென்று முழு வெற்றியடையாமல் இருந்து வந்த நிலை மாறும். உடல் நிலை சீரான நிலையில் இருக்கும்.

சிலருக்கு கண் கோளாறுகள் இருந்தால் அது நீங்கும். பேச்சை பாதியாக குறைப்பது நல்லது. நீங்கள் சொல்லாததை எல்லாம் சொன்னதாக சொல்லி வம்பிழுக்கும் மனிதர்கள் உங்களை சூழ்ந்து இருக்கலாம்.

உத்யோகஸ்தர்களுக்கு வாகனம், இயந்திரங்கள் பயன்படுத்தும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தினில் நல்ல மதிப்பு கிடைக்கும். உங்களுக்கு பணி இட மாறுதல், பணி உயர்வு கிடைக்கும். பணம், நகை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை.

தொழில் செய்பவர்கள் யாருக்கும் கடன் கொடுக்கும் முன் எச்சரிக்கை தேவை. நன்கு விசாரித்து எதையும் செய்யவும். எங்கும் பயணம் செய்யும் முன் மிகுந்த முன்னேற்பாடுடன் செல்லவும்.

பரிகாரம்: சிவனை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..