பெருமித அடையாளமான மாமன்னர் இராஜராஜன் - சரித்திரத் தலைவனை ஜாதியத் தலைவனாக அடையாளம் காண்பதைப்போல் அவலம் வேறேது இருக்கவியலும்?
தமிழ்கூறு நல்லுலகின் பெருமித அடையாளமான மாமன்னர் இராஜராஜனின் சமாதி உடையாளூரின் வெயில் மழையில் காய்ந்து வரும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நினைவுமண்டபம் எழுப்பும் வாக்குறுதி
இராஜராஜன் என்பது வெறும் சமாதியுடன் அடங்கிவிடும் பெயரன்று; இந்திய அரசியல் வரலாற்றுக்குப் பெரும் படிப்பினைகளைக் கற்றுத்தரும் பல்கலைக்கழகம்
அரச குடும்பத்தில் தோன்றி, செல்வச் செழிப்பில் வளர்ந்த அருண்மொழிவர்மன் இதற்கு விதிவிலக்கு. அரசர் சுந்தரச்சோழனின் மறைவுக்குப் பின், அரியணை ஆவல் வற்றித் தீரும்வரை உத்தமச்சோழனே ஆட்சியில் இருக்கட்டும் என்று அந்த இளவரசன் ஒதுங்கி நின்றதாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.
ஒரேநேரத்தில் போர்க்கள வீரனாகவும், நிர்வாகப் புலியாகவும் திறம்பட இயங்கும் வல்லமை இராஜராஜனிடம் இருந்தது. கடல் போல் பரந்து கிடந்த சோழமண்டல நிலங்களைக் கணக்கிடுவதற்காகவே 16 சாண் கொண்ட அளவுகோல் ஒன்றை இராஜராஜன் உருவாக்கினார்.உலகளந்தான் கோல் என்னும் பெயர் கொண்ட அந்த அளவுகோல் குறித்த கல்வெட்டுக் குறிப்புகள் திருவாலங்காட்டில் இன்றும் மின்னுகின்றன.
இராஜராஜனின் வாழ்க்கைத் தொடக்கம் முதல் நிறைவு வரை ஒவ்வோர் அங்குலமும் பெருவுடையார் கோயில் கற்களைப் போன்று செதுக்கி வைக்கப்பட்ட பாடங்களே.சிற்றப்பாவுக்காகப் பதவியை விட்டு விலகி நின்ற அப்பெருமன்னர், அதிகாரத்தின் உச்சத்திலிருந்த போதே, கடலுக்கப்பாலும் விரிந்து கிடந்த சோழப் பேரரசை மகன் இராஜேந்திரனின் தோள்களுக்கு மாற்றித் தந்த புதுமையைத் தமிழ்மண் இராஜராஜனிடத்தில் கண்டது.
இராஜராஜன் எங்கள் ஜாதி என்று உரிமை கொண்டாடிக் கொண்டு ஆண்டுதோறும் சதய விழாவிலும் 30 இயக்கங்கள் தனித்தனியே இப்போதும் ஊர்வலம் வருகின்றன. அந்த சரித்திரத் தலைவனை ஜாதியத் தலைவனாக அடையாளம் காண்பதைப்போல் அவலம் வேறேது இருக்கவியலும்?