பெ. கண்ணப்பன் ஐபிஎஸ்
மனிதர்கள் வேட்டையாடி வாழ்ந்த காலத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்குதல், பொருள்களைப் பறித்துக் கொள்ளுதல் போன்ற செயல்கள் நடந்துள்ளன. தங்களின் உயிரையும், வாழ்க்கையையும் தற்காத்துக் கொள்வதற்காக, தீங்கு விளைவிக்கும் அத்தகைய செயல்களில் ஆதி மனிதர்கள் ஈடுபட்டனர். அவை அந்தக் காலத்தில் சட்ட மீறல்களாகவோ அல்லது குற்றச் செயல்களாகவோ கருதப்படவில்லை.
குற்றங்களுக்கான காரணங்கள், நிகழ்த்தப்படும் முறைகள், குற்றங்களை எதிர்கொள்ளும் முறைகள் சமுதாயத்தில் காலத்துக்கேற்ப மாற்றம் அடைந்தன. மன்னர்களின் ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்த காலகட்டத்தில், குடிமக்களின் நலனில் மன்னர்கள் கவனம் செலுத்தினர். சமுதாயத்தில் நிலவிவந்த குற்றங்கள், அவற்றுக்கான தண்டனைகள் குறித்த விதிகள் வகுக்கப்பட்டன. பண்டைய இந்தியாவில் திருட்டு, தாக்குதல், மோசடி, பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களுக்கான தண்டனைகள் குறித்த விவரங்கள் மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறிப்பாக 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய தொழில்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட நகரமயமாக்கல் குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையை சமுதாயத்தில் அதிகரிக்கச் செய்தது. அதைத் தொடர்ந்து, குற்றங்கள் மீது துப்பு துலக்கி, உண்மை கண்டறியும் குற்றப் புலனாய்வு முறையானது சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. தொழில்முறை குற்றப் புலனாய்வு அமைப்பானது உலகிலேயே முதன் முதலில் 1749-ஆம் ஆண்டில் பிரிட்டனின் லண்டன் நகரில் தொடங்கப்பட்டது. "போ ஸ்ட்ரீட் ரன்னர்ஸ்' என்றழைக்கப்பட்ட அமைப்பை லண்டன் நகரிலுள்ள போ ஸ்ட்ரீட் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஹென்றி ஃபீல்டிங் ஏற்படுத்தினார்.
குற்றம் நடைபெற்ற இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்தல், சேகரித்த ஆதாரங்களை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்தல், ஆய்வின் முடிவுகளை நீதிமன்றத்தில் சாட்சியமாக சமர்ப்பித்தல் போன்றவற்றுக்கு அறிவியலைப் பயன்படுத்தும் முறை 19-நூற்றாண்டில் நடைமுறைக்கு வந்தது. குறிப்பாக, கைவிரல் ரேகை ஆய்வு, டி.என்.ஏ. பரிசோதனை, ரத்தம், முடி போன்ற உயிரியல் ஆதாரங்களின் ஆய்வு, கையெழுத்து ஆய்வு, உடற்கூறு ஆய்வு போன்றவற்றை குற்றப் புலனாய்வில் பயன்படுத்தும் முறைகள் நடைமுறைக்கு வந்தன.
கணினி, இணையம், செயற்கை நுண்ணறிவு போன்றவை பொதுமக்களின் பயன்பாட்டில் அதிகளவில் இருந்து வருகின்ற தற்போதைய சூழலில், சைபர் குற்றங்கள், நிதி மோசடிகள், அடையாளத் திருட்டு, டீப்-பேக் தொழில்நுட்பக் குற்றங்கள் போன்றவை சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதிகரித்துவரும் நவீன குற்றங்களில் விரைந்து துப்பு துலக்குவதற்கும், குற்றங்கள் நடைபெறும் இடங்களை முன்கூட்டியே கணித்து, குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பங்கள் பெரிதும் பயன்படுகின்றன.
சமூக ஊடகங்களில் உள்ள பதிவுகளை செயற்கை நுண்ணறிவு ஆய்வு செய்து, மிரட்டல், வெறுப்பு பேச்சு, கலவர அறிகுறிகள் போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிந்து, வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க துணைபுரிகிறது. விபத்து அதிகளவில் நடைபெறும் இடங்கள், அதிக வேகம் மற்றும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டுதல் போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்து, விபத்துகளால் ஏற்படக்கூடிய குற்றங்களைத் தடுக்கும் விதத்தில் போக்குவரத்து காவல் துறைக்கு உரிய தகவல்களை செயற்கை நுண்ணறிவு வழங்குகிறது.
வன்முறையைப் பயன்படுத்தி கார் ஒன்றைக் கடத்தியதாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் முக அடையாள மென்பொருள் அந்த பெண்ணைக் குற்றவாளி என அடையாளம் காட்டியதால், அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில், அந்தப் பெண் உண்மையான குற்றவாளி அல்ல என்பதை உணர்ந்த காவல் துறையினர், அவரை உடனடியாக விடுதலை செய்தனர்.
குற்றப் புலன் விசாரணையில் துப்பு துலக்க பயன்படுத்திய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறான குற்றவாளிகளை அடையாளம் காட்டிய சம்பவங்கள் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் கடந்த காலத்தில் நிகழ்ந்துள்ளன. செயற்கை நுண்ணறிவின் முடிவுகளை மனித நுண்ணறிவு சரி பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்பதை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.