சி. மகேந்திரன்
நம் நேசத்துக்குரிய மூத்த தோழர் ஆர். நல்லகண்ணு நம்மைச் விட்டு பிரிந்து மறைந்து விட்டார். மூத்த ஆலமரம் ஒன்று வேரோடு சாய்ந்துவிட்ட பேரோசை நம் காதுகளில் கேட்கிறது. அவர் வாழ்க்கை மிகுந்த வினோதங்களைக் கொண்டிருந்தது.
மிக மிக எளிமையானவர் என்று அறியப்பட்ட தோழர் நல்லகண்ணு, வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பதைப் பலரும் அறிய மாட்டார்கள். அவரது தந்தை ராமசாமி தேவர் பிரிட்டிஷ் ஆட்சியில் நீதிமன்ற ஜூரியாகப் பணியாற்றினார். அவருக்குப் பாதுகாவலாக ஒரு காவலர் சைக்கிளில் முன்செல்ல பின்னால் ஓர் அலங்கார மாட்டு வண்டியில் அவர் நீதிமன்றத்துக்குச் சென்று வருவார் என்று கூறப்படுகிறது.
இவரது மூத்த சகோதரர் முத்துராமலிங்கம் சுங்கத் துறை துணை ஆட்சியராகப் பணியாற்றியவர். இந்த விவரங்கள் நல்லகண்ணுவுடன் பல ஆண்டுகள் மிக நெருங்கிப் பழகியவர்களுக்குக்கூட தெரிந்திருக்கவில்லை.
பணக்காரத்தனத்தைக் காட்டிக் கொள்வது ஒருவிதமான நோய். இந்த நோய் வந்தவர்கள் படும்பாட்டை நான் கவனித்திருக்கிறேன். இதற்காக பொய்களை சிலர் மனம் துணிந்து சொல்லத் தொடங்கி விடுகிறார்கள். பொதுவுடைமை இயக்கத்தின் பொதுப் பண்புகளில் ஒன்று தனது குடும்ப செல்வப் பின்னணியை கூறிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்வது.
1995-ஆம் ஆண்டு தென் மாவட்டங்கள் கலவர பூமியாக மாறின. அந்தக் காலம் தமிழ்ச் சமூகத்தின் நல்லிணக்கத்துக்கு ஒரு சோதனைக் காலம். அந்தச் சோதனைக் காலத்தை தனிப்பட்ட முறையில் நேருக்குநேர் சந்தித்தவர் தோழர் நல்லகண்ணு.
இந்த மாபெரும் மனிதர் குறித்த இவ்வாறான நினைவுகள் ஒருபுறம் கரை புரண்டு ஓடினாலும் மறுபுறம் எழுந்து நிற்கும் மனக்குமுறல் அமைதி கொள்ள மறுக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.