இணையதளச் செய்திப் பிரிவு
நம் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவ ராசிக்கும் பிறப்பு என்பது ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று உண்டு.
முக்கியமாக ஒரு மனிதன் இறப்புக்குப் பிறகு உள்ள பல்வேறு ரகசியங்கள் கருட புராணத்தில் சொல்லப்படுகிறது.
இறந்தவரின் ஆன்மாவிற்கு ஒரு சில நாள்களுக்கு அடைப்பு என்ற நிகழ்வு ஏற்படுகிறது. அவற்றை தனிஷ்டா பஞ்சமி என்று அழைப்பார்கள்.
ஒருவர் இறந்த மறுகணமே அவரின் உடலை விட்டு அந்த ஆன்மா, அவரவர் கர்மா மற்றும் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மேலுலகம் சென்று, அதற்கேற்ப ஒரு குறிப்பிட்ட காலத்தில் மறுபிறவி என்ற நிலையை அடைவர்.
ஒருவர் இறந்த நட்சத்திரம் அடைப்பா என்று பார்க்க வேண்டும். முக்கியமாக அடைப்பு நட்சத்திரத்தில் இறந்தால் அவர்களுக்கு சரியான நேரத்தில் மேலுலகம் செல்ல விசா கிடைக்காது.
ஒருவர் சிறுவயதில் அகால மரணம், துர் மரணம் நிகழ்வு மற்றும் ஒருவித நிறைவேறாத ஏக்கம் கொண்டவர்கள் இந்த அடைப்பு நட்சத்திரத்தில் இறப்பார்கள் என்பது முன்னோர்கள் கருத்து.
அடைப்பு நட்சத்திரத்தில் இறந்தவர்கள் மேலுலகம் செல்லமுடியாமல் கதவு பூட்டப்படும். ஒருசில குறிப்பிட்ட காலத்தில் இறந்த ஆன்மாவானது தங்களுக்கு தேவையான ஒளி, நீர் மற்றும் உணவு இல்லாமல் வக்ர நிலையில் அலைந்து கஷ்டப்படும். அந்த ஆன்மாவின் குடும்பத்தார், அவர்களுக்கு தேவையானவற்றை ஒருசில பரிகாரங்கள் மூலம் உதவ வேண்டும்.
27 நட்சத்திரங்களில் இந்த 13 நட்சத்திரங்கள் அடைப்பு நட்சத்திரங்களாகவும், மற்ற 14 நட்சத்திரங்கள் அடைப்பு இல்லாத நட்சத்திரங்களாகவும் கூறப்படுகிறது. அடைப்பு இல்லா 14 நட்சத்திரங்களில் இறந்தவர்கள் சரியான காலகட்டத்தில் மேலுலகம் செல்ல முடியும்.
மகர ராசியில் உள்ள அவிட்டம் முதல் மீனம் ராசியில் உள்ள ரேவதி வரை உள்ள நட்சத்திரங்கள் அதாவது அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள் 6 மாதங்கள் அடைப்பு. ரோகிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு. கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு. மிருகசீரிஷம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் தங்கள் பூத உடலை விட்டு மேலுலகம் செல்வதற்குத் தடை இருந்தால் பரிகாரமாக அவர் வாழ்ந்த வீட்டைப் பூட்டக்கூடாது. தனுஷ்டா பஞ்சமி காலகட்டத்தில் விளக்கேற்றி வழிப்பட வேண்டும். அந்த வீட்டின் ஒரு சிறு மூலையில் நான்கு செங்கற்கள் கொண்ட குடில் அமைத்து, அங்கு அகன்ற வெண்கல விளக்கு, அகல் விளக்கு ஏற்றி, ஒரு சொம்பு நிரம்ப நீர் வைத்து, அவருக்குப் பிடித்த உணவைப் படைக்க வேண்டும். அடைப்பு காலம் முடிந்ததும் ஓடும் நீர் அல்லது கடலில் அவர்கள் பயன்படுத்திய பொருள்கள், உடை மற்றும் ஏற்றிய வெண்கல விளக்கு நீரில் விட்டுவிடுவார்கள். இது அடைப்புக்கான பொதுவான பரிகாரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.