2026ல் நீங்கள் எடுக்க வேண்டிய தீர்மானங்கள் என்னென்ன?

இணையதளச் செய்திப் பிரிவு

2025 ஆம் ஆண்டு முடிந்து 2026 பிறந்துவிட்டது. புத்தாண்டு பிறக்கும்போது நாம் சில தீர்மானங்களை அல்லது உறுதிமொழிகளை (Resolutions) எடுத்துக்கொள்வது வழக்கம். சிலர் அதைச் சரியாக பின்பற்றுவதுண்டு. சிலர் அப்படியே விட்டுவிடுவதுண்டு.

ஆனால் பின்பற்றியவர்களின் அனுபவத்தைக் கேட்டால் அவற்றின் பயன்கள் மிகவும் பிரமிப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் சிறிய மாற்றங்களே, மிகப்பெரிய பலன்களைக் கொடுக்கும்.

இதுவரை எப்படி இருந்தோமோ இந்த புத்தாண்டில் சில தீர்மானங்களை மேற்கொண்டு மாற்றங்களை முயற்சிப்போம்...

உடல்நலம்

நல்ல சத்தான உணவுகளைச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, உடல் பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வது, ஆரோக்கியமாக இருப்பது என தீர்மானங்களை எடுத்துக்கொள்ளலாம்.

உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் பர்கர், பீட்ஸா, பாஸ்ட் புட், பதப்படுத்தப்பட்ட மற்றும் பொரித்த உணவுகளுக்கு 'குட் பை' சொல்லிவிடுங்கள்.

ஸ்மார்ட்போன், டிவி பயன்பாட்டைக் குறைக்கலாம். ஒரு வாரத்தில் ஒரு குறிப்பிட்ட மணி நேரம் ஸ்மார்ட்போன், டிவி பயன்படுத்தக்கூடாது என்று தீர்மானம் எடுக்கலாம்.

புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் உள்ளவர்கள் அதனை முற்றிலும் கைவிவிடுவது அல்லது அதனைக் குறைப்பது குறித்து சிந்திக்கலாம். சிறிய தவறான பழக்கவழக்கங்களையும் கைவிட முயற்சிக்கலாம்.

உதாரணத்திற்கு நீங்கள் அதிகமாக கோவப்படுவீர்கள் என்றால் அதனைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்து முடிந்தவரை முயற்சிக்கலாம்.

சேமிப்பு எதிர்கால நிம்மதியான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. வங்கியிலோ அல்லது அஞ்சல் அலுவலகத்திலோ ஏதேனும் ஒரு சேமிப்புத் திட்டத்தில் இணையலாம். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை முதலீடு குறித்தும் சிந்திக்கலாம்.

அதேபோல நீங்கள் செய்யும் செலவுகளை கண்டிப்பாக பட்டியலிட்டு ஒவ்வொரு மாத இறுதியிலும் பாருங்கள்.

குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஆண்டுக்கு ஓரிருமுறை வெளி இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள். வாரம் ஒருநாள் உங்கள் குடும்பத்தினருடன் முழுவதுமாக நேரம் செலவழிக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.

நீங்கள் வேலை செய்யும் துறை சார்ந்து புதிய படிப்புகளை படிக்கலாம், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.

தவறுகளை மன்னியுங்கள், சிறிய முன்னேற்றங்களை, வெற்றிகளைக் கொண்டாடுங்கள், அன்பு செய்யுங்கள், மற்றவர்களுக்கு உதவுங்கள். வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

நல்ல பழக்கவழக்கங்கள் ஒரேநாளில் உருவாவது அல்ல. படிப்படியான முன்னேற்றம் இருந்தாலே அது கொண்டாடப்பட வேண்டியது.

புத்தாண்டு வாழ்த்துகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...