இணையதளச் செய்திப் பிரிவு
குளிர் அலை காலத்தில் இதய, சிறுநீரக, நுரையீரல் பாதிப்புடையவர்கள் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ள நேருகிறது.
குளிர் காலத்தில் ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிப்பதால், உடலில் நீர்ச்சத்து அளவு இயல்பாகவே குறைகிறது.மேலும், உப்பின் அளவு உடலில் அதிகரிக்கிறது.
இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது!
இதனைக்கருதி, இதய நோயாளிகள் அதிகாலையில் வெளியில் நடைப்பயிற்சி செல்வதை தவிர்த்தல் நலம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
குளிர் காலத்தில் சுவாசப்பாதையில் நுழையும் குளிர் காற்றால் நுரையீரல் பாதிப்படைகிறது.
குளிர் காற்றை சுவாசிப்பதால் சுவாசப்பாதை இயல்பாகவே சுருங்குகிறது. இதனால் அப்பகுதியிலுள்ள தசைகள் இறுக்கமடைகின்றன.
இந்த நிலை ஏற்பட்டால் சிஓபிடி எனும் நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆஸ்துமா நோயாளிகளுக்கும் இருமலும் இழுப்பும் மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படுகிறது
நிமோனியா ஏற்படவும் கூடும். ஆகவே, இதற்கான தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
அதிலும் குறிப்பாக, முதியோர்களும் நீரிழிவு நோயாளிகளும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
வெளியில் செல்லும்போது உடலுக்கு சூட்டைத் தரும் ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். சூடான உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.
நீரிழிவு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் குளிர் அலை காலத்தில் வெளியில் சென்று இயல்பான உடற்பயிற்சிகளை செய்ய முடியாத நிலையால் கூடுதலாக பாதிக்கப்படுகிறார்கள்.
இதனால் அவர்கள் வீட்டுக்குள்ளேயே யோகா உள்ளிட்ட உடலுக்கு அசைவைத் தரும் பயிற்சிகளை செய்யலாம்.
இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவியாக இருக்கும்.
பச்சிளம் குழந்தைகளின் உடலிலிருந்து சூடு மிக எளிதாக வெளியேறுவதால் அவர்கள் குளிர் அலையால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
குழந்தைகள் உடலில் தலையிலிருந்தே அதிகப்படியாக சூடு வெளியேறுகிறது.
ஆகவே, குழந்தைகள் கட்டாயம் தலையை மூடியபடி இருக்கும் ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும்!
இதனால் சுவாசப் பிரச்னைகள் அதிகரிக்காமல் தடுக்கலாம்.
சிறுநீரக பாதிப்புடையவர்கள் குளிர் காலத்தில் ஹைபர்டென்சனால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது கடினமாகிறது!
அவர்கள் தங்கள் உடலில் ரத்த அழுத்த அளவை 140-145 மிமீ எச்ஜி அளவுக்கு மிகாமல் பார்த்துக்கொள்வது நலம்.
மேலும், அதிகப்படியான உப்பு மற்றும் புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது!
குளிர் காலத்தில் கீரைகளை அதிகம் சாப்பிடக்கூடாதாம். கீரை ரத்தத்தில் பொட்டாசியம் அளவைக் கூட்டுகிறது. ஆகவே, குளிர் காலத்தில் தவிர்த்தல் நலம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
குளிர் அலை காலம் என்பது வெறுமனேயொரு பருவநிலை மாற்ற நிகழ்வாக மட்டும் கருதாமல், உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கருதி, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வதே நலம் காக்கும் வழி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.