இணையதளச் செய்திப் பிரிவு
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 2 லட்சம் வீடுகள் உருவாகும் நிலையில் மேலும் புதிதாக, 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
‘முதல்வரின் கிராமசாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்' கீழ் 1,088 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2,200 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்.
மேலும் 1 லட்சத்து 80 ஆயிரம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.
சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் 2,000 ரூபாயிலிருந்து 3,400 ரூபாயாகவும்; பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இறப்பிக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ. 1,200 வழங்கப்படும்.
அதேபோல குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 2,000 ரூபாயிலிருந்து 3, 200 ரூபாயாகவும், பணி நிறைவின்போது வழங்கப்படும் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இறப்பிக்கான குடும்ப ஓய்வூதியமாக ரூ. 1,000 வழங்கப்படும்.
அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும்; பணி நிறைவின்போது வழங்கப்படும் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இறப்பிக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ. 1,000 வழங்கப்படும்.
சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் மேற்கூறிய பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்குச் செலவினங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.