முனைவா் கோ. விசுவநாதன்
இந்தியாவின் முதல் இடைக்கால பட்ஜெட்டை தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார். 1950-இல் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே அது தொடர்பான விவரங்கள் வெளியாகி சர்ச்சையானது. அதன் பிறகு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு விவரங்கள் வெளிவராமல் பாதுகாப்பதற்கான எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பட்ஜெட் குறித்து நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி "இது வெறும் நிதிநிலை அறிக்கை அல்ல; இது ஓர் அரசியல் ஆவணம்' என்று குறிப்பிட்டார். பட்ஜெட் என்பது வறுமை ஒழிப்பு, நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிச் சலுகை, விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்க வேண்டும். பட்ஜெட் என்பது தொலைநோக்குப் பார்வையை உணர்த்தும் ஒரு திட்டமிடல் என்பதுதான் என் கருத்து.
1991-இல் இந்தியாவின் நிதியமைச்சரான மன்மோகன் சிங் சமர்ப்பித்த பட்ஜெட், நாட்டின் பொருளாதாரக் கொள்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் போன்றவற்றை அவர்தான் அறிமுகப்படுத்தினார். இன்றுவரை அவரது இந்தப் பார்வையின் அடிப்படையில்தான் எல்லா நிதி அமைச்சர்களும் பட்ஜெட் தயாரிக்கிறார்கள்.
கடன் தொல்லையால் தவிக்கும் லட்சக்கணக்கான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வி, மருத்துவச் செலவுகளை ஏழை, நடுத்தர மக்களுக்கு குறைப்பதற்காக கல்விக்கூடங்கள், மருத்துவமனைக்கு விதிக்கப்படுகிற ஜி.எஸ்.டி. உள்பட எல்லா வரிகளையும் நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் எந்த அரசியலும் கூடாது. மாநிலத்துக்கான நிதி கேட்டு உச்சநீதிமன்றம் வரை மாநிலங்கள் போவது என்பது சரியான அணுகுமுறை அல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.