தற்காலத்தில் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் ஆழ்துளைக் கிணறுகளே மக்களின் தண்ணீர்த் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்துவருவது கண்கூடு.
உள்ளூர் நிர்வாகம் வழங்கும் தண்ணீர் ஒவ்வொரு நாளும் கிடைத்தாலும் சரி, அல்லது பல நாள்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டாலும் சரி, அத்தணீரைச் சூழ்நிலைக்கு ஏற்றபடி மிகவும் சிக்கனமாகச் செல்வழிப்பதைத் தவிர அம்மக்களுக்கு வேறு வழியே இல்லை.
அவ்வாறு வழங்கப்படுகின்ற தண்ணீரும் எல்லா நாள்களிலும் ஒரே தரத்துடன் வழங்கப்படும் என்பதற்கு இங்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பதே யதார்த்தமாக இருக்கின்றது. மழைக்காலம் வந்தாலே நம் வீட்டுக் குழாய்களில் குளோரின் வாசத்துடன் கூடிய தண்ணீர் வருவது நமக்கெல்லாம் பழகிப்போய்விட்ட ஒன்று.
நிலத்தின் அடியில் பதிக்கப்பட்டுள்ள கழிவுநீர்க் குழாய்களில் ஏற்படும் உடைப்பு அல்லது கசிவு காரணமாக வெளிப்படும் கழிவுநீர் பொதுமக்களின் பயன்பாட்டுக்குரிய தண்ணீரோடு கலந்துவிடும்போது தீவிரமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.தமிழகத்திலும் டிசம்பர் 2024- இல் சென்னை பல்லாவரம் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரைப் பயன்படுத்தியதால் மூவர் இறந்துள்ளனர்.