சருமப் பராமரிப்பு என்பது சருமத்தை அழகாக வைத்துக்கொள்வது மட்டுமல்ல, அதில் அடிப்படை விஷயமாக சருமத்தின் பிஎச் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
சாதாரணமாக வேதியியலில் குறிப்பிடப்படும் பிச் அளவு 0 முதல் 14 வரை இருக்கும், 0 முதல் 7 வரை அமிலத்தன்மை எனவும் 7 முதல் 14 வரை காரத்தன்மை என்றும் வகைப்படுத்தப்படுகிறது.
இந்த பிஎச் சரியான அளவில் உள்ள அழகு தயாரிப்புப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்று தோல் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அதாவது ஒரு ஆரோக்கியமான சருமம் என்பது சிறிது அமிலத்தன்மை கொண்டதாகவே இருக்கும். இயற்கையாகவே சருமம் லேசான அமிலத்தன்மையுடன்தான் இருக்கும். பிஎச் அளவில் குறிப்பிட வேண்டும் என்றால் 4.5 முதல் 5.5 வரை இருக்கலாம்.
அமிலத்தன்மை நிறைந்த சருமத்தின் வெளிப்புற அடுக்குதான் சருமத்தின் பாதுகாப்பு கவசம். இது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது. தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை சருமத்தினுள் அனுமதிப்பதில்லை.
இந்த பிஎச் அளவு மேலும் அதிகரிக்கும்போதுதான் சருமத்தில் பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, பிஎச் அளவு 4.5 முதல் 5.5 வரை உள்ள தயாரிப்புகளைப் பயன்படுத்தவது சருமத்திற்கு நல்லது என்று பரிந்துரைக்கிறார்கள்.
வைட்டமின் சி, ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம், பீட்டா ஹைட்ராக்ஸி அமிலம் உள்ள தயாரிப்புகள் சருமத்தில் அமிலத்தன்மையை சரியான அளவில் மேம்படுத்தி சருமத்தை மேம்படுத்த உதவும். மாய்ஸ்சரைசர்கள் சருமத்தின் இயற்கையான பிஎச் அளவை நிர்வகிக்கின்றன.