முன்னதாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மூட்டு வலி ஏற்படும். ஆனால் இப்போது 30, 40 வயதுகளிலேயே மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர்.
உடல் பருமன், உடல் இயக்கம் இல்லாதது, நேராக நிமிர்ந்து உட்காராதது, மோசமான உணவுப் பழக்கவழக்கம், மன அழுத்தத்துடன் தினமும் வேலை செய்வது ஆகியவை மூட்டு வலிக்கு காரணங்களாகக் கூறப்படுகிறது.
மேலும், ஆர்த்ரிடிஸ் எனும் கீல்வாதம், வீக்கம், காயம் ஆகியவற்றின் காரணமாகவும் ஏற்படுகிறது.
இதற்கு முதலில் சரியான நிலையில் உட்கார வேண்டும். நன்றாக நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். காலையும் நேராக வைத்து உட்காருவது அவசியம். மூட்டு வளையக் கூடாது.
மூட்டை மடக்கி வைத்துக்கொண்டு நீண்ட நேரம் உட்காரக் கூடாது. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை எழுந்து அசைவு கொடுக்க வேண்டும்.
இரண்டு கால்களையும் சமமாக வைத்து நடக்க வேண்டும், அதாவது ஒரே காலில் எடையைத் தாங்கும் விதத்தில் ஒரு காலுக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து நடக்கக் கூடாது. இது கண்டிப்பாக மூட்டு வலி பிரச்னையை ஏற்படுத்தும்.
உடல் எடை மூட்டு வலிக்கு முக்கிய காரணம். எனவே, உடல் எடையைக் குறைப்பது, மருத்துவரின் ஆலோசனைப்படி யோகா, மூட்டுப் பயிற்சிகள் செய்வது, மூட்டு பலம் பெற சில சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது என முயற்சிக்கலாம்.
மன அழுத்தத்தை சரியான அளவில் நிர்வகிப்பதும் முக்கியம். ஏனெனில் மன அழுத்தத்தால் உடல் எடை கூடுவது போன்ற உடல்ரீதியான கோளாறுகள் ஏற்படும்.