- முனைவர் இளங்கோ கட்டிமுத்து
மனிதகுலம் 1950-களில் ஒரு புதிய திறனைப் பெற்றது; அது பூமிக்கு அப்பால் செல்லும் திறனும், இன்றைய புரட்சிகரமான தொழில்நுட்பங்களைப் போன்ற திறனும் ஆகும். யார் அதிக சக்தி வாய்ந்தவர், திறமையானவர் என்பதை உறுதி செய்வதற்காக இரண்டு வல்லரசுகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட முயன்றதாலேயே இந்த விண்வெளி தொழில்நுட்பம் உருவானது.
1957-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி ஸ்புட்னிக்-1 செயற்கைக்கோளை புவிவட்டப் பாதையில் செலுத்தியதன் மூலம், உலக நாடுகளின் விண்வெளிப் போட்டியில் முதல் நாடு என்ற வெற்றியை ரஷியா பெற்றது.1958-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி, அமெரிக்காவால் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் எக்ஸ்ப்ளோரர்-1 ஆகும். ஜப்பானின் முதல் செயற்கைக்கோளான ஓசுமி 1970-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி ஏவப்பட்டது.
டோங் ஃபாங் ஹாங்-1 இது சீனக் குடியரசின் முதலாவது விண்வெளி செயற்கைக்கோள். இது 1970 ஏப்ரல் 24-ஆம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டது. 1975-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி 'ஆரியபட்டா' செயற்கைக்கோளை விண்வெளி சுற்றுப்பாதைக்கு அனுப்பிய உலகின் 11-ஆவது நாடாக இந்தியா ஆனது. இந்தியாவின் புகழ்பெற்ற கணிதவியலாளர்- வானியலாளர் ஆரியபட்டாவின் நினைவாக செயற்கைக்கோளுக்கு பெயர் சூட்டப்பட்டது.
51 ஆண்டுகள் கழிந்த பின்னரும், ஆரியபட்டாவாலும், இந்தியாவின் செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் முன்னோடிகளாலும் உருவாக்கப்பட்ட மரபு ஒவ்வொரு வெற்றிகரமான ஏவுதலிலும், ஒவ்வொரு புதிய செயற்கைக்கோளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
சந்திரயான் மூலம் சந்திரனை ஆய்வு செய்தோம். செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன் மூலம் செவ்வாய்க்கு சென்றோம். இன்று நாம் பயன்படுத்தும் செயற்கைக்கோள் தொடர்பு, காலநிலை கணிப்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு போன்ற அனைத்துக்கும் அடிப்படை ஆரியபட்டா ஆகும்.
காலத்தால் பின்னோக்கிச் செல்லும் அதே வேளையில், உத்வேகம் நிறைந்த எதிர்காலத்தை நோக்கியும் நமது இளைய தலைமுறை பயணிக்க வேண்டும். சுருக்கமாகக் கூறின், இந்திய செயற்கைக்கோளான 'ஆரியபட்டா' இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.