தேர்தல் நடத்தி, வாக்கெடுப்பின் மூலம் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, தங்களுக்கான ஆட்சியை அமைத்துக் கொள்வது ஜனநாயக ஆட்சிமுறையாகும்.
உலகிலுள்ள 195 நாடுகளில் 70 முதல் 75 நாடுகளில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதாகவும், உலகிலுள்ள மொத்த மக்கள்தொகையில் 50 சதவீதத்தினர் தங்களின் நாட்டை ஆட்சி செய்யும் பிரதிநிதிகளைத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர் என்பதும் சமீபத்திய ஆய்வுகளில் இருந்து தெரியவருகின்றன.
மூன்றில் ஒரு வாக்காளர் "தேர்தல் தரம்' குறைந்துவரும் நாடுகளில் வசித்து வருகிறார். ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களான நீதித் துறை, தேர்தல் ஆணையம், ஊடகங்கள் ஆகியவற்றின் சுதந்திரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் பிரசாரங்களும், ஒழுங்குபடுத்தப்படாத எண்ம (டிஜிட்டல்) தளங்களும் தேர்தல் நேர்மையைச் சீர்குலைக்கின்றன.
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எனப் பெயர் பெற்ற இந்தியாவில் தேர்தல்கள் சுதந்திரமான முறையில் நடைபெற்றாலும், இந்திய ஜனநாயகத்தின் தரம் குறைந்து வருகிறது என்ற கருத்தை சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் அதிகமான வாக்காளர்கள் பங்கெடுப்பதன்மூலம் மத்திய, மாநில அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், வாக்காளர்களுக்கு பணம் அல்லது அன்பளிப்புகளைக் கொடுத்து, வாக்குகளைப் பெறுவது என்ற தேர்தல் நடைமுறை இந்திய ஜனநாயகத்தின் பின்னடைவை உணர்த்துகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் மதம், இனம், மொழி அடிப்படையிலான அரசியல் பாகுபாடுகள் அதிகரித்து, தேசத்தின் ஒருமைப்பாடு சீர்குலைய ஜனநாயகப் பின்னடைவு காரணமாக அமைந்துவிடும் என்பதை சர்வதேச ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.