தமிழ்நாட்டில் குறிப்பாக, புறநகர் மற்றும் கிராமப் பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதானமாக இருப்பதால், சாண எரிவாயுக் கலன் அமைக்கத் தேவையான சாணம் எளிதாகக் கிடைக்கும்.
வீட்டின் பின்புறம் சிறிய அளவு இடம் இருந்தால் போதும். ஒரு முறை முதலீடு செய்தால், 15 முதல் 20 ஆண்டுகள் வரை எரிவாயு சிலிண்டர் வாங்கும் செலவு மிச்சமாகும். எரிவாயு எடுத்த பிறகு வெளிவரும் கழிவுப் பயிர்களுக்கு மிகச் சிறந்த நைட்ரஜன் கலந்த இயற்கை உரம் ஆகும்.
முன்பு சாண எரிவாயு கலன்கள், செங்கல் மற்றும் சிமென்ட்டால் பெரிய அளவில் கட்டப்பட்டன. இப்போது எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய உயிரி வாயு கலன்கள் பிரபலம். இவை சிறிய இடத்தில்கூட இரண்டு நாள்களுக்குள் நிறுவப்படக் கூடியவை.
சாண எரிவாயுத் திட்டங்கள் பொதுவாக தோல்வியடைவதற்கு முக்கியக் காரணம், சரியான பராமரிப்பு இல்லாமை மட்டுமே. எல்பிஜி சிலிண்டரில் உள்ள எரிவாயுவின் எரிசக்தியுடன் (கன மீட்டருக்கு 10,000- 11,000 கிலோ கலோரி) ஒப்பிட்டால், சாண எரிவாயுவின் எரிசக்தி அதில் பாதியே (கன மீட்டருக்கு 4,500- 5,500 கிலோ கலோரி).
சராசரியாக, ஒரு வீட்டுக்கு ஒரு கனமீட்டர் இயற்கை எரிவாயு தேவை. அதுவே சாண எரிவாயு என்றால் இரண்டு கனமீட்டர் தேவை. மாதம் ஒரு சிலிண்டர் உபயோகிக்கும் ஒரு குடும்பத்துக்கு சாண எரிவாயு வேண்டுமென்றால், மூன்று முதல் நான்கு மாடுகளின் சாணம் தினமும் அவசியம்.