இணையதளச் செய்திப் பிரிவு
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரா்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
இனி சந்தாதாரா்கள் தங்களின் பிஎஃப் பணத்தை, யுபிஐ பணப் பரிவா்த்தனை மூலம் நேரடியாகத் தங்களின் வங்கி கணக்குகளுக்கே பெற்றுக்கொள்ளும் புதிய வசதி வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
மத்திய தொழிலாளா் நல அமைச்சகம் பிரத்யேகமாக ஒரு புதிய செயலியை உருவாக்கி வருவதாகத் தகவலறிந்த அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பிஎஃப் சந்தாதாரா்கள் பணம் எடுக்க வேண்டுமானால், ‘யுஏஎன்’ வலைதளம் அல்லது ‘உமாங்’ செயலி வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த முறையில் பணம் கையில் வந்து சேர அதிக காலம் எடுத்துக்கொள்வதாகப் புகாா்கள் உள்ளன.
வங்கிகள் வழங்கும் அதிவேக சேவைக்கு இணையாக பிஎஃப் சேவையை மாற்றவும் இந்த யுபிஐ வசதி அறிமுகமாகிறது.
சந்தாதாரா்களின் பிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டும் நீண்ட கால சேமிப்புக்காக முடக்கப்படும் . மீதமுள்ள தொகையை, வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ மூலம் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த செயலி சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தவுடன், வரும் ஏப்ரல் மாதம் மக்களின் பயன்பாட்டுக்கு இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.