ஆகவே, கடலின் அழிவு சக்தி குறித்தும் சுனாமி எனப்படும் ஆழிப் பேரலைகள் குறித்தும், தமிழர்களுக்கு முன்பே தெரியும். நிலத்தைப் படைப்பதும் அழிப்பதும் கடல்தான். பல சங்கப் பாடல்கள் சுனாமிக்கு காரணமான நில அதிர்ச்சி குறித்தும், கடல் எல்லை மீறுவது குறித்தும் பொதுவாகப் பாடுகின்றன.
இலக்கியங்கள் பலவற்றில் கடல் மிக முக்கியமானதாகப் பேசப்பட்டுள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களில் நெய்தல் என்பது கடலும், கடல் சார்ந்த பகுதியும் ஆகும்.
"வருணன் மேயப் பெருமணல் உலகமும்' என தொல்காப்பியம் எழுதிச் செல்கிறது. "பெருமணல் உலகம்' எனத் தொல்காப்பியம் குறிப்பது கடல் சார்ந்த பகுதியைத்தான்.
சங்க இலக்கியத்தில் முத்துகள் குறித்துப் பல செய்திகள் இடம்பெற்றுள்ளன. சங்க காலத்தில் முத்துச்சலாபம் (முத்துக் குளித்தல்) பாண்டிய நாட்டில் மிகுதியாக நடந்தது. பாண்டிய நாட்டில் விளைந்த முத்துகள் உலகப் புகழ்பெற்று விளங்கின.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஒரு சிறிய கிராமமே கொற்கை. கொற்கைத் துறையின் கடல் நீரில் முத்துகள் விளையும் என்பதை நற்றிணையும் ஐந்குறுநூறும் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.